இராம. கி

இராம. கி. எனத் தமிழறிஞர்களிடையே நன்கு அறியப்படும் முனைவர். கிருசுணன் இராமசாமி (Dr. Krishnan Ramasamy) என்பவர் இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர். இவர் ஒரு தமிழ்ப் பற்றாளரும், வேர்ச்சொல்லாய்வாளரும், எழுத்தாளரும், மொழியாய்வாளரும் ஆவார். "யூரியா நுட்பியல்" பற்றி ஆய்வுப் பட்டம் பெற்ற ஒரே இந்தியரும் ஆவார். தமிழ்க் கணிமையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர். இணையத்தில் தமிழ்க்கணிமை, தமிழ்வளர்ச்சி பற்றிப் பெரிதும் அறியப்பட்டவர். 8 bit குறியீடான TSCII என்னும் தமிழ்க்குறியேற்றம் அனைத்து நாடுகள் அளவில் பதிவு பெற ஒத்துழைத்தவர். தமிழக அரசின் ஒப்புதல் பெற்ற தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம் (TACE - 16) பற்றிய உரையாடல்களில் பெரிதும் பங்கு பெற்றவர். "உத்தமம்" எனும் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தில் (INFITT) 2008-2010 ஆகிய இரண்டாண்டு காலம் செயற்குழு உறுப்பினராய் இருந்தவர். தற்பொழுது பொதுக்குழு உறுப்பினராய் இருக்கிறார். இணையத்தில் தமிழ் வரவேண்டும் என்று பாடுபட்ட தமிழறிஞர்கள் மத்தியில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.[1] இன்று இணையத்தில் புழங்கும் வலைப்பக்கம், பின்னூட்டம், இடுகை போன்ற நூற்றுக்கணக்கான தமிழ் கலைச்சொற்கள் இவரின் தமிழ்ச் சொற்பிறப்பாய்வு அல்லது வேர்ச்சொல்லாய்வு மூலம் தமிழ் இணையவுலகம் பெற்றுக் கொண்டவையாகும். பெரும்பான்மையான தமிழர் சமசுகிருதச் சொற்கள் எனக் கருதிய பல சொற்களின் மூலம் தமிழ் எனத் தன் ஆய்வுகளின் ஊடாக நிறுவி வருபவரும் ஆவர்.

இராம. கி
இராம. கி
இயற்பெயர்/
அறியும் பெயர்
முனைவர். கிருசுணன் இராமசாமி
பிறந்தஇடம் தமிழ்நாடு
பணி வேதிப் பொறிஞர், வேர்ச்சொல்லாய்வாளர், மொழியியலாளர், எழுத்தாளர்
கல்வி வேதிப் பொறியியல்
இணையதளம் valavu.com

கல்வியும் பணியும்

இவர் கல்லூரியில் கல்வி கற்கும் காலம் முதலே தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டவர். கதை, கட்டுரை, நாடகம், ஓவியம், மரபுப் பாக்கள் எனத் தமிழ் மொழி சார்ந்த விடயங்களில் கல்லூரியில் விதப்பானவர் எனப் பெயர் பெற்றவர். வேதிப் பொறியியலில் முது நுட்பவியல் படித்து, வேதிப் பொறிஞர், ஆய்வாளர், நிர்வாகி, தொழிற் கட்டுமானர் எனப் பல்வேறு பணியாற்றியவர். “யூரியா நுட்பியல்” பற்றி ஆய்வுப் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் எனும் வரலாற்றுப் பெருமைக்கும் உரியவர். 36 ஆண்டுகாலம் உரம் (fertilizer), வேதியியல் (chemical), பாறைவேதியியல் (Petrochemical) போன்ற தொழிற்துறைகளில் பணியாற்றியுள்ளார். 5000 பேருக்கு மேல் வழிநடத்தி 3500 கோடி பெறுமானமுள்ள ஒரு பாறைவேதியற் புறத்திட்டத்தை (Petrochemical Project) நிர்வாக நெறியாளனாய் (Managing Project) செயற்படுத்தியவர். பல்வேறு நிர்வாகப் பணிகளிற் பங்காற்றிய இவர் இசுபிக் பெட்ரொகெமிக்கல் நிறுவனத்தின் நிர்வாகத் திட்ட நெறியாளராய் (Project Director), 2008 இல் ஓய்வு பெற்றார். பலநாடுகளில் பணியாற்றிப் பின் 1985ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் வேதி நிறுவன ஆய்வுகளில் பங்காற்றிய இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் 1997ம் ஆண்டிலிருந்து தமிழ் மொழி சார்ந்த பணிகளை இணையத்தில் முன்னெடுத்தார். தமிழ் இலக்கியம், பாவியல், மொழியியல், சொற்பிறப்பியல், வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவை தொடர்பான ஆக்கங்கள் இணையத் தளங்களிலும் இவரது வலைப்பதிவிலும் காணக்கிடைக்கின்றன.

தமிழ் இணையம்

இணையத்தில் தமிழ் வரவேண்டும் என்று பாடுபட்ட தமிழறிஞர்களில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கணிமையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர். இணையத்தில் தமிழ்க்கணிமை, தமிழ்வளர்ச்சி பற்றிப் பெரிதும் அறியப்பட்டவர். இணையத்தில் மொழிவளர்ச்சி, ஒருங்குறி, தமிழ்ச் சொற்பிறப்பாய்வு போன்ற விடயங்களில் முன்முனைப்புடன் செயற்பட்டுவருபவர். வளவு எனும் தனது வலைப்பதிவில் 2003ம் ஆண்டு முதல் இவை தொடர்பாகத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். இணையத்தில் மொழிவளர்ச்சி பற்றி அறிய விழையும் பலரும் அடிக்கடி வலம் வரும் தமிழ் வலைப்பதிவு இது. இணையத்தில் இன்று புழங்கும் பல அருமையான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக முன்முனைப்பாக நின்று பங்களித்து வருபவர். மொழியியல் அடிப்படையில் தமிழ் நடை குறித்த இவரது வழிகாட்டல்கள், பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மேலும் மொழியியல், தமிழின் வரலாறு, தமிழ் நடை, தமிழின் தொன்மை போன்றவை தொடர்பாகத் தமிழறிஞர்கள், கல்விமான்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், மொழியார்வலர்கள் உடன் இணைந்து "தமிழ்.நெட்", "தமிழ்-உலகம்", "அகத்தியர்", சந்தவசந்தம்", "பிகேகே", மற்றும் "தமிழ்மன்றம்" போன்ற இணையக் குழுமங்களிலும் முனைப்புடன் எழுதியும் விவாதித்தும் வருபவர் ஆவார். அத்துடன் தமிழ் விக்சனரி குழுமத்திலும் பயனர்கள் கோரும் சொற்களுக்கான கலைச்சொல்லாக்கப் பணியிலும் ஆரம்ப காலம் முதல் உதவி வருபவர்களில் ஒருவராவார்.

கலைச்சொல்லாக்கம்

தமிழ் இணைய வரலாற்றில் இவர் உருவாக்கிய கலைச்சொற்களில் நூற்றுக்கணக்கானவை இன்று இணையம் முழுதும் புழங்கும் சொற்களாக நிலை பெற்றவையாகும். அத்துடன் கலைச்சொல்லாக்கங்களின் போது தமிழின் வேர்ச்சொல்லின் வழியே சொற்களை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருபவராகும். ஆங்கிலம் தோன்றுவதற்கு முன்னரே கிரேக்கம், இலத்தீன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் தமிழ் மொழியின் செல்வாக்குள்ளது என்பதையும், ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் தமிழுக்கு இடையிலான தொடர்பு ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதும் இவருடைய வாதங்களில் தென்படும் கருத்தாகும்.

தமிழ் எழுத்து மாற்றம்

தமிழுலகில் சிலரால் முன்வைக்கப்பட்ட உகர ஊகாரச் சீர்திருத்தம், கிரந்த ஒருங்குறியில் தமிழ் எழுத்துச் சேர்ப்பு போன்ற மாற்றங்கள் தமிழ் மொழிக்கு தீங்கானது என்றெடுத்துரைத்த இவர், அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுப்பதிலும், தமிழ் வலைப்பதிவுலகில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும் இவரது பங்கு இருந்தது.[2][3]

எழுதிய நூல்கள்

இவர் எழுதிய சிலம்பின் காலம் எனும் ஆய்வு நூல் 2011ம் ஆண்டு வெளியானது.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராம._கி&oldid=26015" இருந்து மீள்விக்கப்பட்டது