இராஜன்–நாகேந்திரா
இராஜன் - நாகேந்திரா (Rajan–Nagendra) சகோதரர்கள் இருவரும் ஓர் இந்திய இசை இரட்டையர்கள் ஆவர். இவர்கள் 1950களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதி வரை கன்னடத் திரைப்படத்துறை, தெலுங்குத் திரைப்படத்துறைகளில் முக்கிய இசையமைப்பாளர்களாக இருந்தனர். இராஜன், தனது சகோதரர் நாகேந்திராவுடன் சேர்ந்து, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை உருவாக்கினார். இருவரும் சுமார் 375 படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அவற்றில் 200க்கும் மேற்பட்டவை கன்னடத்திலும், மீதமுள்ளவை தெலுங்கு, தமிழ், மலையாளம், துளு, இந்தி , சிங்களம் போன்ற பிற மொழிகளிலும் இசையமைக்கப்பட்டவையாகும்.
இராஜன் & நாகேந்திரா | |
---|---|
பிறப்பு | இராஜன் நாகேந்திரப்பா 1933 இராஜன்) 1935 (நாகேந்திரா) மைசூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | அக்டோபர் 11, 2020 நவம்பர் 4, 2000 (அகவை 65) (நாகேந்திரா) | (அகவை 87) (இராஜன்)
பணி | இசையமைப்பாளர்கள் |
செயற்பாட்டுக் காலம் | 1952-1999 |
சுயசரிதை
ராஜன் (1933 - 2020) மற்றும் நாகேந்திரப்பா (1935 - 2000) [1] இருவரும் மைசூர் சிவராம்பேட்டையில் ஒரு நடுத்தர இசைக் குடும்பத்தில் பிறந்தார்கள். ஆர்மோனியம், புல்லாங்குழல் கலைஞரான இவர்களின் தந்தை இராஜப்பா ஊமைத் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.[2]
ஒரு குறுகிய காலத்திற்குள், இவர்கள் வெவ்வேறு கருவியை - வயலினில் இராஜனும், ஜலதரங்கத்தில் நாகேந்திராவும் - வாசிப்பதில் தேர்ச்சி பெற்றனர். மைசூர் அரண்மனையில் சௌடையா இராமமந்திராவில் பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை இராஜன் கவனித்து வந்துள்ளார். அங்கே இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இராஜன் தனது மேலதிக கல்விக்காக பெங்களூருக்கு வந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
பெங்களூரில் இராஜன் கே.ஆர் சந்தை பகுதியில் உள்ள எஸ்.எல்.என் பள்ளியிலும் பின்னர் மத்திய உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இராஜன் வயலின் கற்றுக் கொண்டார். மேலும், மாநில அளவிலான வயலின் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார்.
இவர்கள் இருவரும் "ஜெய மாருதி இசைக்குழு" மூலம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதற்கிடையில், சென்னை செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கே பேசும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பிரபலமான எச். ஆர். பத்மநாப சாஸ்திரியின் கீழ் இசையினைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இது இவர்களுக்கு திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் கொடுத்தது.
1951 ஆம் ஆண்டில், நாகேந்திரா மைசூர் திரும்பி தனது மெட்ரிகுலேசனை முடித்தார். பின்னர் பிரபல வானொலிக் கலைஞராக இருந்த பி.கலிங்க ராவ் என்பவருடன் சேர்ந்தார். பின்னர், நேரத்திலும், இந்துஸ்தானி பாடகர் அமீர் பாயுடன் 'சீனிவாச கல்யாணா' படத்திற்காக பாடும் வாய்ப்பு கிடைத்தது. இறுதியாக, இவர்கள் இருவரும் 1952 இல் சௌபாக்ய லட்சுமி என்ற படத்திற்கு இசை இயக்குநர்களாக ஆனார்கள். இப்படத்திற்குப் பிறகு பி. விட்டலாச்சாரியாவின் 'சஞ்சலகுமரி', 'ராஜலட்சுமி', 'முத்தைதா பாக்யா' போன்ற படங்களுக்கு இவர்கள் இசையமைத்தனர்.
கன்னடத் திரை
கன்னட திரைப்படத் துறையில் 50 களின் முற்பகுதியிலிருந்து 90 களின் பிற்பகுதி வரை அவர்கள் வெற்றிகரமாக செயல்பட்டனர். 1970களில் நியாவே தேவாரு, காந்ததா குடி, தேவரா குடி, பாக்யவந்தாரு, எராடு கனாசு, நா நின்னா மாரியலாரே, நா நின்னா பிடலாரே, ஹோம்பிசிலு, பயாலு தாரி, பாவனா கங்கா, கிரி கன்யே போன்ற பல வெற்றிப் படங்கள் வெளிவந்தன.
தெலுங்குத் திரை
1980 களில், மா இன்டி ஆயினா கதா, புலி பெபுலி, வயரி பாமாலு வாகலமாரி பரதுலு உள்ளிட்ட சில தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்தனர். இவர்கள் சுமார் 70 தெலுங்கு படங்களுக்கு இசையமைத்ததுள்ளனர்.
இறப்பு
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இரட்டையர்களில் இளையவரான நாகேந்திரா, 2000 நவம்பர் அன்று பெங்களூரில் இறந்தார்.[3] பின்னர், இராஜன் 2020 அக்டோபர் 11 அன்று பெங்களூரில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ The Man Behind Evergreen Songs. தி இந்து.
- ↑ "Rajan-Nagendra Childhood". tollywoodtimes.com இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140826122311/http://tollywoodtimes.com/en/profiles/info/RajanNagendra/xpkr3d0gs9.
- ↑ "A composer signs off proudly". themusicmagazine.com. 4 November 2000. http://www.themusicmagazine.com/nagendraobit.html.
- ↑ "Music composer Rajan of famed duo Rajan-Nagendra, passes away". New Indian Express. 12 Oct 2020. https://www.newindianexpress.com/states/karnataka/2020/oct/12/music-composer-rajan-of-famed-duo-passes-away-2209059.html.
வெளி இணைப்புகள்
- Rajan Nagendra பரணிடப்பட்டது 2013-08-07 at the வந்தவழி இயந்திரம் at Gaana.com
- Rajan Nagendra at Raaga.com