இரண்டாம் சங்கிலி
சங்கிலி பண்டாரம் அல்லது இரண்டாம் சங்கிலி அல்லது ஒன்பதாம் செகராசசேகரன் (இறப்பு: 1621) யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன். தொடக்க காலங்களில் யாழ்ப்பாண வரலாறு எழுதியவர்கள் இவனையும், இவனுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆண்ட சங்கிலி என்பவனையும் ஒருவர் எனக்கருதி மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் பெயரில் யாழ்ப்பாண வரலாறு எழுதிய மயில்வாகனப் புலவர் பெயர் ஒற்றுமையால் குழம்பிப் போலும், இடையில் ஆண்ட பல அரசர்களைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டுவிட்டார்.
ஒன்பதாம் செகராசசேகரன் இரண்டாம் சங்கிலி சங்கிலி பண்டாரம் | |
---|---|
யாழ்ப்பாண அரசன் | |
இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள சங்கிலியனின் சிலை | |
ஆட்சி | 1617–1619 |
முன்னிருந்தவர் | எதிர்மன்னசிங்கம் (எட்டாம் பரராசசேகரன்) |
போர்த்துக்கீசர் கைப்பற்றல் | |
தமிழ் | சங்கிலி குமாரன் |
இறப்பு | 1621 |
1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும், குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
சங்கிலிய பண்டாரத்தின் மறைவு
சங்கிலிய பண்டாரம் என்றழைக்கப்படும் சங்கிலிகுமரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படைகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.[1]
சங்கிலி குமாரனின் பிள்ளைகள்
சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளையான போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ (Soror Maria da Vistaco) ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய (King of Jaffna apataao (Ceylon)) மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது. [2]
சங்கிலிகுமாரனின் சிலை
1974 ஆம் ஆண்டில் இரண்டாம் சங்கிலியனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். 1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இச்சிலை இடித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை 1996-ல் மீண்டும் சிமெந்தினால் செய்து அதே இடத்தில் வைத்தது. 2011 ஆம் ஆண்டில் இச்சிலை யாழ் மாநகரசபையால் உடைக்கப்பட்டு இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆகத்து 3 ஆம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
- ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)