இரகுநாத கிழவன்

ஸ்ரீமான் ஹிரன்யகிரப இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி. (1671–1710) என்பவர் இராமநாதபுரத்தின் அரசனாவார்[1] இவர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுர சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார். அவர் ருஷ்டம் கானின் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரை காப்பாற்றினார், மேலும் தஞ்சாவூர் மன்னருக்கு எதிராக தொடர் போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

கிழவன் சேதுபதி

மதுரை சொக்கநாத நாயக்குருக்கு இவர் உதவியாக இருந்ததால் இவருக்கு பர இராஜகேசரி அதாவது அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம் என்ற அவர் பட்டத்தை வழங்கினார். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி, பிறான்மலை, திருமயம் போன்ற பகுதிகளை தன் நாட்டுடன் இணைத்தார். இவர் கிறித்துவ மிஷினரிகளின் நடவடிக்கைகளை எதித்தார். மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார். இராணி மங்கம்மாளின் படைகளைத் தோற்கடித்தப் பின்னர், இவர் 1707 ஆம் ஆண்டு தன்னாட்சி கொண்டதாக மறவ நாட்டை அறிவித்தார். இவர் தனது தலைநகரை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். கிழவன் சேதுபதி நல்கோட்டால் பாளையம் என்ற (பின்னர் சிவகங்கை ) புதிய பாளையத்தை நிறுவியதோடு உதய தேவரை அதன் ஆளுநராக நியமித்தார். இவர் திருவாடானை, காளையார் கோவில் ஆகிய கோயில்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கினார். இது செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது. தலை நகரான இராமநாதபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார், வைகை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டினார்.

இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கை

இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் சிவந்தெழுந்த பல்லவராயர்க்கு பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.

செப்பேடு எழுதுதல்

சேதுபதி மன்னர்கள் ஆணைகளை முதலில் ஓலையில் எழுதி அதன் பிறகே செப்பேட்டில் பொறித்தனர். பல செப்பேடுகளில் ஓலையில் எழுதியது யார் செப்பேட்டில் எழுத்துக்களைப் பொறித்தது யார் என்று மிகவும் தெளிவாகக் கூறப்படுகிறது. ஓலையில் எழுதியவர்கள் பெரும்பாலும் இராயசம் அல்லது கணக்குப்பிள்ளைகளாக இருக்கின்றனர். செப்பேட்டில் பொறித்தவர்கள் ஆசாரிகள் அல்லது சிற்பிகளாக இருக்கின்றனார். பல செப்பேடுகளில் தல மரபுக்கு ஏற்ப அழகிய வரைகோட்டு ஓவியங்கள் உள்ளன. சில செப்பேடுகளில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான செப்பேடுகளில் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன.

இரகுநாத கிழவன்சேதுபதி செப்பேடுகள்

சுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு புதுக்கோட்டைச் செப்பேடு, இராசசிங்கமங்கலம் செப்பேடு போன்றவைகள் இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கையினை தெளிவாக விளக்குகிறது. அவரது கோவில் கொடை,ஆட்சி முறை போன்றவற்றை அறியலாம்.

சுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு

இருக்கும் இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர் சென்னை. அரசர்  : சேதுபதி இரகுநாத தேவர் காலம் :06-01-1684

அமைப்பும் செய்தியும்

பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தரபாண்டியன் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது. சேதுநாட்டின் வட பகுதியில் கடற்கரையில் உள்ள ஊர். இப்பொழுது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. சேதுபதி அரசரால் சுந்தரபாண்டியன் பட்டணத்தில் உள்ள அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாதர் கோயில் பூசை ஆகியவற்றிற்காக எட்டுக் கிராமங்களைக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அவை சுந்தரபாண்டியன் பட்டணம், கொந்தளன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான். சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் என்பன. அவ்வூர்கள் அஞ்சு கோட்டைப்பற்றில் இருந்தன. புல்லூர், மருதூர் என்ற இரு ஊர்கள் அக்கிரகாரத்திற்கு வழங்கப்பட்டன. இரு ஊர்களுக்கும் விரிவாக எல்லைகள் கூறப்பட்டுள்ளன.[2]

புதுக்கோட்டைச் செப்பேடு

இருக்கும் இடம்:மதுரை மாவட்ட நீதிமன்றம் அரசர் :இரகுநாத சேதுபதி காத்த தேவர் காலம் :18-05-1684 அளவு :26.5 செ.மீ. ஒ 21.5 செ.மீ.

அமைப்பும் செய்தியும்

இச்செப்பேட்டின் மூலப்படி கிடைக்கவில்லை. எழுத்துக்கள் சரியாக எழுதப்பெறவில்லை என்று இதன் பதிப்பாசரியர் கூறியுள்ளார். இரகுநாத சேதுபதி 18-05-1684 அன்று அமாவாசைப் புண்ணிய நாளன்று தென்னாலை நாட்டில் வளுவாப்பிரி விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈசுவரி அம்மனுக்கும் காளையார் கோயில் சீமையில் தென்னாலை நாட்டில் அரிசிலையாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை, கள்ளிகுடி. எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. புதுக்கோட்டையின் எல்லை: கிழக்கு எல்லை கள்ளன்குடிக் கண்மாய், தெற்கு எல்லை கோங்கிவயல் கண்மாய் தென்கரை மேற்கு எல்லை ஈகரை ஆங்கல் வடக்கு எல்லை திருமணக் குளக்கால். கள்ளிக்குடி எல்லை: கிழக்கு எல்லை: திருமணக் கண்மாய் காஞ்சிரயடிப் பொட்டல் தெற்கு எல்லை கொரேம்பல்: மேற்கு எல்லை புதுக்கோட்டைப்புரவு: வடக்கு எல்லை திருமணக் குளக்கால். இச்செப்பேட்டு வாசகம் எழுதியவர் தர்மராசப் பிள்ளை மகன் இராயசம் சொக்குப் பிள்ளை. அந்நகல்படி செப்பேட்டு வாசகம் பொறித்தவர் உத்தரகோசமங்கையிலிருக்கும் வீரனாசாரி மகன் அதிவீரனாசாரி என்பவராவார்.[3]

இராசசிங்கமங்கலம் செப்பேடு

இருக்கும் இடம்:தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அருங்காட்சியகம், இராமநாதபுரம். அரசர் :இரகுநாத தேவார் காலம் :02-01-1688 அளவு :23 செ.மீ. ஒ 13 செ.மீ.

அமைப்பும் செய்தியும்

இச்செப்பேட்டில் உள்ள துளையில்லாத அழகிய கைப்பிடியில் பீடமொன்றில் திரிசூலம் வரையப்பட்டுள்ளது. அதன்கீழ் உமங்கலக் குறியுள்ளது. இரண்டாம் பக்கத்தில் சேதுபதி என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. கிழவன் சேதுபதி என்னும் ரகுநாத தேவர் இராசசிங்க மங்கலம் என்னும் இராசசிங்க மங்கலத்தில் சிலுக வயல் என்னும் பகுதியை இராமேசுவரம் இராமநாதசுவாமிக்குக் கொடையாக அளித்தார். இராச சிங்க மங்கலம் குளப்பாசனத்தில் வடக்கு எல்லை புல்லமடை, மேற்கு எல்லை குளம், கிழக்கு எல்லை நாலுமடை இவற்றிற்குட்பட்ட நிலம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அளித்தார் இக்கொடை நிலத்திற்கு நீர்பாயும் மடைகளுக்கு இராமநாதமடை என்று பெயர் வைத்திருப்பது சிறப்புமிக்கதாகும். இந்நிலத்திற்கு இப்போது உள்ள பள்வரி பலவரி செம்புவாரி களஞ்சியவரி, வண்டிக்கிடாய், கொட்டிய எருது போன்ற வரிகளையும், எதிர்காலத்தில் உண்டாகும் வரிகளையும் அளிக்கத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கொடை இராமேசுவரம் கோயில் காரியக்காரர் இராமநாத பண்டாரம் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. இந்நிலத்தின் வருவாயிலிருந்து இராமேசுவரம் இராமநாத சுவாமிக்கு திருமுழுக்குச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India By Robert Sewell, Archaeological Survey of Southern India
  2. சேதுபதி செப்பேடுகள் புலவர் செ.இராசு,எம்,ஏ -தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம் பக்கம் எண்:162
  3. சேதுபதி செப்பேடுகள் புலவர் செ.இராசு,எம்,ஏ -தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம் பக்கம் எண்:165,166
  4. சேதுபதி செப்பேடுகள் புலவர் செ.இராசு,எம்,ஏ -தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம் பக்கம் எண்:177,178
"https://tamilar.wiki/index.php?title=இரகுநாத_கிழவன்&oldid=130837" இருந்து மீள்விக்கப்பட்டது