இயேசு மாகாவியம்
இயேசு மா காவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை, புதுக்கவிதைப் பாணியில் ஆக்கி அளித்தவர் பெண் கவிஞர் நிர்மலா சுரேஷ்.
இயேசுவுக்கொரு புதுக்கவிதைக் கொத்து
இக்காப்பிய நூலின் முன்னுரையில், "இது புதிய ஏற்பாட்டு இயேசுவுக்கான ஒரு கவிதை ஏற்பாடு" என்றுரைக்கும் கவிஞர் இக்காப்பியத்தில் இயேசுவின் வரலாற்றையும் அவருடைய பன்முகப் பணியையும் நூற்று நாற்பத்தினான்கு தலைப்புகளில் புதுக் கவிதைப் பாணியில் பாடி வழங்கியுள்ளார்.
"இயேசுவை இரண்டு விதமாகப் பார்க்கலாம். வரலாற்றில் இயேசு; விவிலியத்தில் கிறிஸ்து. நான் வரலாற்று இயேசுவின் அம்சங்களை எனது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். இயேசு ஒரு புரட்சியாளர். அதை வெளிக்கொணர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்" என்று காப்பிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இயேசுவை ஆன்ம மீட்பராகப் பார்க்கும் பாணியிலிருந்து மாறுபட்டு அவரை சமுதாய சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் இக்காப்பியத்தில் சித்தரிக்கிறார் நிர்மலா சுரேஷ்.
எடுத்துக்காட்டாக ஒரு பாடல்
இயேசு எருசலேம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே விற்றல் வாங்கல் செயல்களில் மக்கள் ஈடுபட்டு கோவிலின் புனிதத்தை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டு கொதித்தெழுந்த இயேசு, சாட்டை பின்னி வியாபாரிகளைக் கோவிலிலிருந்து வெளியே அடித்துத் துரத்துகிறார். இதைக் காப்பிய ஆசிரியர்,
கரியமில வாயுவைக்
கலைக்க வந்த உயிர்க்காற்றாய்
சுழற்றப்பட்டது சாட்டை
என்று வருணிக்கிறார்.
இலக்கியக் காப்பியம்
வருணனைகள், உவமை, உருவகம், தமிழ் இலக்கியத் தாக்கம் போன்ற பல சுவைகளை உள்ளடக்கிய இயேசு மா காவியம் என்னும் இந்நூலை ஓர் இலக்கியக் காப்பியம் என்று கூறலாம்.
ஆதாரம்
இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).