இயேசு காவியம்

இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது.

இயேசு காவியம்
நூல் பெயர்:இயேசு காவியம்
ஆசிரியர்(கள்):கவிஞர் கண்ணதாசன்
வகை:வரலாறு;கிறித்தவத் தமிழ்க் காப்பியம்
துறை:{{{பொருள்}}}
காலம்:ஜனவரி 1982
இடம்:திருச்சி
மொழி:தமிழ்
பக்கங்கள்:400
பதிப்பகர்:"கலைக்காவிரி"'
49-J, பாரதியார் சாலை,
திருச்சிராப்பள்ளி - 620 001
பதிப்பு:ஆறாம் பதிப்பு (2002)
ஆக்க அனுமதி:"கலைக்காவிரி",
(திருச்சி)

திருச்சி "கலைக்காவிரி" என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய, இக்காவியத்தை இயற்றினார். பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடி, எட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூற, கவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றது.

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16 இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

கண்ணதாசனின் "இறவாக் காவியம்"

இயேசு காவியத்தின் தொடக்கத்தில் "என்னுரை" என்ற தலைப்பில் கண்ணதாசன் தாம் பாடிய காவியத்தை எவ்வாறு பார்த்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்:

இயேசு காவியத்தின் பாகங்கள்

இயேசு காவியம் ஐந்து பாகங்களைக் கொண்டதாக உள்ளது. இயேசுவின் வாழ்வியலைப் பிறப்பு என்னும் தலைப்பில் முதல் பாகமும், யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற்றுத் தம்மைத் தயார்படுத்திய நிலை இரண்டாம் பாகமாகவும், இயேசு பொதுவாழ்வில் ஈடுபட்டமை மூன்றாம் பாகமாகவும், அவர் அடைந்த மகிமை ஐந்தாம் பாகமாகவும் பாடப்பட்டுள்ளன.

அவையடக்கம்

இயேசு காவியத்தின் காப்பியத் தலைவன் இயேசுவே என்பது நூல் பெயரிலிருந்தே விளங்கும். பெருங்காப்பியங்களின் மரபைப் பின்பற்றி கண்ணதாசனும் பல இடங்களில் பாடுகிறார். நூலின் பாயிரத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கு கம்பன் கவிதையின் கலையும், வீரமாமுனிவரின் விழுமிய சொல் நயமும் விளங்குவதைக் காணலாம்.

இராமர் கதையைக் கூறவந்த கம்பநாடர் அவையடக்கத்தில்,

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென...

எனப் பாடுகிறார்.

கம்பரைப் பின்பற்றி, தேம்பாவணி புனைந்த வீரமாமுனிவர் தம் காப்பியத்தின் தொடக்கத்தில்,

ஓசையுற்று ஒழுகு அமிர்தம் உடைகட லென்ன நண்ணிப்
பூசையுற்று அதனை நக்கப் புக்கென...

என்று பாடினார்.

இதே மரபின் வழிநின்று கண்ணதாசனும்,

பொங்குமாங் கடலில் புகுந்தள வெடுக்கப்
    போயினேன் வெற்றிபெற் றேனா?

என்று இயேசு காவியத்தின் பாயிரத்தில் பாடுவது அவர் தமிழ் இலக்கிய மரபைத் தொடர்வதைக் காட்டுகிறது.

வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த இம்மூன்று கவிஞர்களும் ஆழ்ந்து விரிந்த கடல் போன்ற அறிவுக் களஞ்சியத்திலிருந்து வெளிக்கொணரும் செல்வம் உள்ளத்திற்கு உவகையூட்டுவதே.

சில பாடல்கள்

எண் 9: தாலேலோ (அன்னை மரியா குழந்தை இயேசுவைத் தாலாட்டல்):

சோதிமணிப் பெட்டகமே சுடரொளியே யூதருக்கு
ஆதிமக னாய்ப்பிறந்த அருந்தவமே தாலேலோ!

மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார் எங்கோவே!

எண் 149:

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
      யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
      தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
      இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
      இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
      என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
      தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுதும்
      இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
      இயேசுவை நம்புவமே!

இயேசு காவியம் கதைச் சுருக்கம்

சூசையப்பருக்கும் மரியாளுக்கும் மகனாய் இயேசு பெத்லேகம் என்னும் ஊரில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று இயேசு பிறப்புடன் காவியம் தொடங்குகிறது. தேவன் அருள் பெற்று மரியம்மை கருவுற்றது முதல் இயேசுவை பெற்று எடுத்தது வரையிலான செய்திகளைக் குறிப்பிடுகிறார். மேலும் இது போல் சக்கரியாசு எலிசபெத் என்கிற தம்பதியர் குழந்தையில்லாமல் வேதனை அடைந்து இறைவனை வேண்டினர். அவர்களுக்கு இறைவன் அருளால் அருளப்பன் என்கிற மகன் பிறந்தான் என்கிற செய்தியையும் காவியம் வழி எடுத்துரைக்கிறார். இயேசுவின் பெருமை பிள்ளைப்பருவம் முதலே ஆலயச் சபையில் ஆரம்பம் ஆனது.

ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல ஆணையிட்டுள்ளான் என்ற செய்தியை சூசையப்பர், தன் கனவில் தோன்றிய தேவதூதன் மூலம் அறிந்து, அவர் சொன்னபடியே எகிப்து நாட்டுக்குப் பயணிக்கிறார். ஏரோது என்ற மன்னன் பெத்லேகம் நகரில் உள்ள இரண்டும் இரண்டிற்கும் கீழ் வயது உள்ள ஆண் குழந்தைகளை வெட்டி வீழ்த்த ஆணையிட்டான். அவனது படைவீரர்கள் வீடு புகுந்து ஆண்குழந்தைகளை வெட்டி கொன்றனர்.

மாபெரும் வஞ்சகம் கொண்ட மன்னன் மாரடைப்பால் மாண்டான். இந்த செய்தியை தேவதூதன் சூசையப்பரின் கனவில் தோன்றி ஏரோது மன்னன் மாண்டுவிட்டான் இனி நீங்கள் எகிப்தை விட்டு இஸ்ரேலுக்குச் செல்லலாம் என்று கூறுகிறான். அதன்படி சூசையப்பரும் மரியாளையும் குழந்தை இயேசுவையும் அழைத்துக் கொண்டு கலிலேயா நாட்டில் நாசரேத் நகரில் குடிபுகுகின்றனர். ஏனென்றால், ஏரோது மன்னனின் மைந்தன் அர்க்கலா என்னும் கொடியோன் அங்கு இருந்ததனால், சூசையப்பர்

இசுரேலுக்குச் செல்லவில்லை என்ற செய்தியையும் குறிப்பிட்டுச் செல்கிறார் கண்ணதாசன். இயேசு வளர்ந்து பன்னிரண்டு வயது நிரம்பிவிட்ட நிலையில் தன் தந்தையான சூசையப்பர் செய்து வந்த தச்சுத் தொழிலுக்கு உதவி செய்து வந்தார். காலையில் படித்து விட்டு பின்னர் அன்னையின் கடமைகளை முடித்து தந்தைக்கும் உதவி செய்துவிட்டு பின்னர் இரவில் தூங்கினார், அங்குள்ளவர்கள், சூசையப்பரைத் ‘தூயவர்’ என்றும் மரியன்னையை ‘மாதா’ என்றும் அழைத்தனர்.

நாசரேத் விட்டு செருசலேம் செல்லும் வழியில் இயேசுவை தவற விட்டு தவிக்கின்றனர். அப்போது அங்குள்ள தேவாலயத்தில் இயேசு வேதம் படித்த வித்தகர் நடுவே கேட்டு அறிந்தும் கேள்விகள் தொகுத்தும் தத்துவ ஞானத்தில் இருந்தார். இயேசுவை கண்ட தம்பதியர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆண்டுக்காண்டு இயேசு வளர்ந்த அவ்வண்ணமே அருளப்பரும் வளர்ந்து வாலிபம் எய்தினார். அருள் மிகும் வாக்கும் அன்பும் ஞானமும் கடமை மிகுந்த கட்டளைக் குணமும் கொண்டவராக அருளப்பர் இருந்தார். எருசலேம் நகரில் உள்ள மக்கள் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றனர். மக்களுக்கு பல போதனைகளை அவர் வழங்கினார். என்னுடையத் தகுதி எள்ளளவுதான் கடவுளின் மகனைக் காண்பீர் ஒரு நாள், அவரே உங்கள் அனைவரின் மீட்பர் என்று இயேசுவைப் பற்றி எருசலேம் மக்களுக்கு எடுத்துக்கூறினார். இயேசு அருளப்பரைச் சந்தித்து ஞானஸ்நானம் பெறுகிறார். இயேசு புனித பணியில் புகுந்திடும் முன்னால் பரிசுத்த ஆவி பாலைவனத்துக்கு இயேசுவை அழைத்துச் செல்கிறது. அங்கு நாற்பது பகல் நாற்பது இரவு உண்ணாநோன்பும் உறங்கா விரதமும் இருந்து தவம் புரிகிறார். அப்போது அங்கு கல்லை அப்பமாக்கி அலகை வென்று, இயேசு கலிலேயாவில் காலடி வைக்கிறார் அங்கு மீனவர்கள் அதிசயக்கும் வகையில் அற்புதங்களை நிகழ்த்துகிறார்.

இயேசுவின் அற்புதங்கள் தொடர்ந்தது. இயேசுபிரான் மக்களுக்குள்ளே இணையற்ற பெருமைகளைச் செய்ததாலே அவர் பின்னால் சீடர்கள் பலர் வந்தார்கள். அவர்களில் பன்னிருவரை மட்டும் தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து மெய் வண்ணம் போதித்தார். அவர்கள் பெயரை அப்போஸ்தலர் என்று விளங்கச் செய்தார்.

இயேசு அற்புதங்கள் மட்டும் செய்வதோடு நில்லாமல் மக்களுக்கு பல்வேறு போதனைகளைச் செய்து நல்வழிப்படுத்தினார். கலிலேயாவை ஆண்ட இரண்டாம் ஏரோது மன்னனின் ஆட்சியில் அழகிய பெண்கள் கவலையின்றி வாழ்வது அரிது. தம்பி மனைவியை தன் மனைவியாக்கி இன்புற்றிருந்தான். அவனை நல்வழிப்படுத்த நினைத்த அருளப்பரை சிறையில் அடைத்தான். அவ்வழியே வந்த இயேசுவை தம் சீடர்கள் மூலம் அங்குள்ள மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். பின்னர் ஏரோது மன்னன், மனைவின் ஆசைப்படி அருளப்பர் தலையை வெட்டி பரிசளிக்கிறான் என்பது போன்ற செய்திகளையும் காவியத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கண்ணில்லாதவருக்கு கண் கொடுத்தல், செவிடர்களுக்கு செவி கொடுத்தல், தொழுநோயைக் குணப்படுத்துதல், மரணம் அடைந்தோரை உயிர்த்தெழச் செய்தல், கடல் மீது நடத்தல் போன்ற அற்புதங்களை காவியத்தில் புகுத்தியுள்ளார். எருசலேம் சென்ற இயேசுவை யூதர்களிடத்தில் அவரது சீடர்களில் ஒருவனான யூதாசு என்பவன் முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக் கொடுக்கிறான். பின்னர் இயேசுவை சிலுவையில் அடித்தது முதல் அவர் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தது வரையிலானச் செய்திகளைத் தொகுத்து கண்ணதாசன் மரபுக் கவிதையில் இயேசு காவியத்தைப் படைத்துள்ளார்.

ஆதாரம்

கவியரசு கண்ணதாசன், இயேசு காவியம், கலைக்காவிரி, 18, பென்வெல்ஸ் ரோடு, திருச்சிராப்பள்ளி 620001. முதல் பதிப்பு: 1982.

"https://tamilar.wiki/index.php?title=இயேசு_காவியம்&oldid=13016" இருந்து மீள்விக்கப்பட்டது