இயற்கைத்திறமை சோதனைகள்

இயற்கைத் திறமைச் சோதனைகள் (Aptitude tests) என்பது, இத்தகை யோருக்கு இன்ன தொழிலில் பயிற்சி அளிக்கலாம் என்று அறிவதற்கும், இன்ன வேலைக்கு இத்தகை யோரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவதற்கும் முதற்கண் வேண்டப்படுவது ஆகும். மனிதனிடம் காணப்படும் திறமைகள் ஒன்றுக் கொன்று சார்புடைமை பற்றி உளவியலாரிடையே கருத்து வேற்றுமைகாணப்படினும், மக்கள் இயற்கைத் திறமையைப் பற்றியவரையில் வேறுபாடுடையவர் என்பது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும்.

ஆல்பிரட் பினே, பிரான்சு, புதிய இயற்கைத் திறமைச் சோதனையாளர்.

ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஒருவருக்குள்ள இயற்கைத் திறமையை அறிவதற்கு, அவரை அத்தொழிலைக் கற்கச் செய்தபின் அவர் பெறும் திறமையைக் கணிப்பதே முறை என்று சிலர் கூறுவர். ஆனால் இந்த முறையால் பொழுதும், பணமும், ஆற்றலும் அளவுக்கு மிஞ்சி வீணாய்விடும். அதிலும் நீண்ட நாள் சிறப்புப் பயிற்சி பெறவேண்டிய தொழில்களில் இந்த விரயம் இன்னும் அதிகமாகும். நீண்டநாள் பயிற்சி பெற்ற பின் குறிப்பிட்ட தொழிலுக்குத் தகுதியற்றவர் என்று தெரியவருமாயின், அதனால் முதலாளிக்குப் பொருள் நட்டமும், தொழிலாளிக்குச் சுயமரியாதை, சுகவாழ்க் கைகளின் குறைவும் உண்டாகும். அதனால் ஒருவரிடம் மறைந்து கிடக்கும் இயற்கைத் திறமைகளை விரைவாகவும், குறைந்த பொருட் செலவிலும் கண்டுபிடிப்பதற்குரிய முறைகள் தேவையாகும். இதன் பொருட்டு உளவியலார் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து, பல சோதனைகளை வகுத்துள்ளனர். இந்தச் சோதனைகள் முடிவானவையல்ல. ஆராய்ச்சிகள் மேன் மேலும் நடந்து, இப்பொழுதுள்ளவற்றைவிட மிகுந்த நல்ல சோதனைகள் கண்டுபிடிக்கப்படலாம். ஆயினும் இப்பொழுதுள்ள சோதனைகள் பயன் தருவனவாகவே இருக்கின்றன.

இச்சோதனைகள்

 
எந்திரவியல் இயல்திறன் சோதனைகளில் ஒன்று

இச்சோதனை என்பதெல்லாம் ஒரு சிறு மாதிரியைக் (Sample) கொண்டே நடைபெறுவதாம். ஓர் உணவுப் பொருளின் தூய்மையைச் சோதிக்க விரும்பினால், அதில் ஒரு சிறு அளவு எடுத்துச் சோதிக்கின்றோம். சிறு அளவுக்குள்ள குணமே அவ்வுணவுப் பொருள் அனைத்துக்குமாகும் என்ற எண்ணமே இதற்கு அடிநிலை ஆகும். அதுபோல் ஒரு மனிதன் தக்க பயிற்சியாலும், சூழ்நிலையாலும் தன்னுடைய அறிவையும் திறமையையும் பெருக்கிக் கொள்ளவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளவும் கூடுமாயினும், அவனுடைய இயற்கைத் திறமை எப்பொழுதும் ஒன்றுபோலவே இருக்கும் என்று கருதுகின்றோம்.[1] எடுத்துக்காட்டாக, ஆராய்ச்சியின் பயனாக ஒருவனிடம் மிகுந்த இசைத் திறமை இருப்பதாகக் காணில், பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும் அதே திறமையுடையவனாயிருப்பான் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆகவே, உளவியல் சோதனை என்பது ஒருவனுடைய நடத்தையில் ஒரு மாதிரியைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அளப்பதே யாகும்.[2] இயற்கைத் திறமைச் சோதனைகள் இரு திறத்தன.

  1. ஒரு குறிப்பிட்ட இயற்கைத் திறமை பல மக்களிடம் வேறுபட்டுக் காணப்படுவதை அளப்பதாம். இந்த வேறுபாடுகளை, ஆள் வேறுபாடுகள் என்பர்.
  2. மற்றொன்று ஒரே ஆளிடம், பல இயற்கைத் திறமைகள் வேறுபட்டுக் காணப்படுவதை அளப்பதாம். இந்த வேறுபாடுகளை, பண்பு வேறுபாடுகள் என்று அழைப்பர்.

இச்சோதனை வரலாறு

மக்கள் இயற்கைத் திறமையில் வேறுபாடுடையர் என்ற கருத்து வற்புறுத்தப்பட்ட பின்னரே இயற்கைத் திறமைச் சோதனை வளர்ச்சி பெறலாயிற்று. முதன் முதலாக இங்கிலாந்திலிருந்த பிரான்சிஸ் கால்ட்டன் 1884 ஓம், அமெரிக்காவிலிருந்த ஜே. மக்கீன் காட்டெல் 1890 ஒம், இறுக்கிப் பிடிக்கும் வன்மை , கை அசைவு விகிதம், நினைவு கூறும் வன்மை போன்றவற்றல் மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளைச் சோதனை மூலம் ஆராய்ந்தார்கள். அவர்களுடைய முறைகள் சிறந்தனவாக இருக்கவில்லை. மற்றும் அவர்கள் உடலியற் பண்புகளையே மிகுதியாக ஆராய்ந்தார்கள்.

1908-ல் பிரான்ஸ் நாட்டு ஆல்பிரட் பினே (Alfred Binet) இயற்கைத் திறமையை அளந்தறிவதற்கான சோதனைகளை வெளியிட்டார். அவை புகழ் வாய்ந்தவை. இவர்களுக்குப் பின்னர் இந்தச் சோதனை முறையானது விரைவாக வளர்ந்து வந்துள்ளது. அதற்கு ஒரு காரணம் புள்ளி விவர முறைகளைப் பயன்படுத்தியதேயாம். அதனுடன் முதல் உலக யுத்தமும் சோதனை முறை வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்தது. யுத்த காலத்தில் சேனைக்கு ஆள் சேர்க்கப் பயன் படுத்தப்பட்ட சோதனைகளை யுத்தம் நின்ற பின்னர், கைத்தொழில் முதலியவற்றிற்கும் பயன்படுத்த விருப்பம் உண்டாயிற்று. தொடக்கத்தில் சோதனைகள் பெரும்பாலும், பொது இயற்கைத் திறமை' என்பதைக் குறித்த சோதனைகளாகவே இருந்தன. ஆனால் பொது இயற்கைத் திறமை என்பது நூற்கல்வி பற்றிய ஒருவித இயற்கைத் திறமையேயன்றி வேறன்று என்று காணப் படவே, பல திறப்பட்ட இயற்கைத் திறமைகளைப் பற்றிச் சோதனைகள் வகுப்பதில் முனைந்தனர்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=இயற்கைத்திறமை_சோதனைகள்&oldid=17896" இருந்து மீள்விக்கப்பட்டது