இந்திய மரபுடமை நிலையம்

இந்திய மரபுடமை நிலையம் (INDIAN HERITAGE CENTRE) என்பது சிங்கப்பூரில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் குட்டி இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளுடன் கூடிய கட்டடம் ஆகும். 3090 சதுர மீட்டர் பரப்பளவில் 368 அரிய பழம்பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகத்தைச் சிங்கப்பூரின் பிரதம அமைச்சர் லீ சியன் லூங் 2015 மே மாதம் 7 ஆம் நாள் அன்று திறந்து வைத்தார்.

சிறப்பு அம்சங்கள்

இந்தியர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியர்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு பற்றியும் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பு பற்றியும் ஒலி ஒளிக் காட்சிகள் வாயிலாகவும் விளக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்திலும் நாலாவது தளத்திலும் இந்தியர்கள் கையாண்ட அரிய பழம்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரிலும் மலாயாவிலும் இந்தியர்கள் மற்றும் தென்னாசிய மக்கள் வாழ்ந்த நிலைமைகள், சிங்கப்பூரைக் கட்டமைத்த வரலாறு, இந்து இசுலாம் புத்தம் கிறித்தவம் எனப் பல்வேறு இனக் குடிமக்கள் சிங்கப்பூரில் வந்து குடியேறி ஒற்றுமையாக அமைதியாக வாழும் நிலையைச் சித்தரிக்கும் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக நகரத்தாரின் வீட்டு வாசல்கால்கள், இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் உருவத்தலை, தென்னிந்தியர்கள் பயன்படுத்திய காசுமாலை, வகை வகையான தாலிகள், சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, சுபாசு சந்திர போசு போன்றோர் சிங்கப்பூருக்கு வந்தபோது பிடித்த நிழற்படங்கள் பெரியார் ஈ. வெ. இராமசாமி, லீ குவான் யூ, கோ. சாரங்கபாணி, சி. இராசரத்தினம் போன்றோரின் நிழற்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் தேசிய மரபுடமை வாரியம் இந்த அருங்காட்சியகத்தைக் கட்டியது மட்டுமல்லாமல் பராமரித்தும் வருகிறது.

சான்றாவணம்

http://www.straitstimes.com/singapore/pm-lee-indians-play-an-important-role-in-singapores-society

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இந்திய_மரபுடமை_நிலையம்&oldid=26649" இருந்து மீள்விக்கப்பட்டது