இந்திய உலோக வேலைக் கலை

இந்திய உலோக வேலைக் கலை (Indian metalwork‎) என்பது இந்தியாவின், மிகப் பழமையான கலைகளுள் ஒன்றாகும். இக்கலை சிறப்பாகத் தென்னிந்தியாவில் பழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. ஏனைய நுண்கலைகளில் போன்றே இக்கலையிலும் இந்திய நாட்டுக் கலைஞர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். பிற நாடுகளுடன் சம்பந்தம் ஏற்பட்டதால் அந்நாடுகளின் கலைகளின் சில அம்சங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த அம்சங்கள் இவர்கள் கையில் ஒரு தனிப்பட்ட அழகைப் பெற்றன. அப்படியாயினும் இவர்கள் கையாண்ட முறை இந்திய நாட்டிற்கே உரிமையானதாகும். தவிர இந்திய நாட்டு உலோக வேலைக்கலைக்கு இரண்டு சிறந்த குணங்கள் உண்டு. இவை கலைஞர்கள் தாம் கையாளும் பொருள்களின் தன்மையை அறிந்திருப்பதும், அதிகமான வேலைப்பாடுகள் பெற்றிருப்பதுமாகும். தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு இவற்றாலும், துத்தநாகம், ஈயம் முதலியவை சேர்ந்த கலப்பு உலோகத்தாலும் சாமான்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

சில சோழர் காலச் சிலைகள்[1],~1080

வரலாற்றுப் பதிவுகள்

இக்கலை சிந்துநதிப் பிரதேசத்தில் பழக்கத்தில் இருந்ததற்குச் சான்றாக அங்கே கிடைத்த நகைகள் உள்ளன. பிற்காலத்திலும் இக்கலை சிறப்பாகப் பயிலப்பட்டது என்பதை இலக்கியங்களிலிருந்தும், சிற்பம், ஓவியம் இவற்றிலிருந்தும் அறிகிறோம். இன்றும் இக்கலை சிறந்து விளங்குகிறது. இரும்பில் சாமான்கள் செய்யப்பட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. துருப்பிடிக்காத இரும்பை உருக்கி வேலை செய்வது மிகப் பழைய காலத்திலேயே இந்தியாவில் இருந்தது என்பதற்குக் குப்தர் காலத்தைச் சேர்ந்ததும் 6ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதும், இப்பொழுது டெல்லியின் அருகே நாட்டப்பட்டிருப்பதுமான இரும்புத் தூணிலிருந்து அறிகிறோம். பிற்காலத்தில் பீடார் என்ற ஊரில் பாத்திரங்கள் செய்ய இரும்பைப் பயன்படுத்தினார்கள். தொன்றுதொட்டு வேலைப்பாடுகள் நிறைந்த கத்தி முதலிய ஆயுதங்களும் இரும்பால் செய்யப்பட்டுவந்தன. இவற்றில் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் இந்திய நாட்டில் பல சமஸ்தானங்களில் செய்யப்பட்ட ஆயுதங்கள் மிகச் சிறந்த வேலைப்பாடுகள் உள்ளவைகளாக இருக்கின்றன. இவ்வித ஆயுதங்களில் பல தஞ்சாவூர் ஆயுதசாலையிலிருந்து கொண்டுவந்து, சென்னை அரசாங்கப் பொருட்காட்சிச்சாலையில் வைத்திருக்கிறார்கள். ஐதராபாத்தில் உள்ள சலார்ஜங் பொருட்காட்சிச்சாலையிலும் பலவகை வேலைப்பாடுகள் அமைந்த இரும்பு ஆயுதங்களைக் காணலாம்.

முறைமைகள்

பல அழகிய வடிவுள்ளவைகளாக மட்டுமன்றி, அழகிய வேலைப்பாடுகள் பெற்றவைகளாகவும் இருக்கின்றன. இவ்வித சாமான்களைப் பல முறைகளில் செய்கிறார்கள். அம்முறைகளாவன : அடித்து உருவாக்குதல் (Hammering), பதிப்புச்சித்திர வேலை (Inlaying), புறணிச்சித்திர வேலை (Incrusting), சரிகைச் சித்திர வேலை (Filigree), புடைப்பச்சு வேலை (Embossing), வார்ப்பு வேலை (Casting)

வகைமை

பதிப்புச் சித்திரவேலை

இதைச் ‘சுவாமி’ வேலை என்றும் சொல்லுவதுண்டு. இம்முறை திருப்பதி, தஞ்சாவூர் இவ்விரண்டு ஊர்களிலும் அதிகமாகப் பழக்கத்திலிருந்து வந்தது. செம்பாலான பாத்திரங்களின் மேல் வெள்ளியில் செய்த துணுக்குக்ககளைப் பதிப்பது வழக்கம். இச்சாமான்களில் செம்பு, தாம்பாளங்கள் பிரசித்தமானவை. திருப்பதி சாமான்களில் விக்கிரக வேலை அதிகமாகவும், தஞ்சாவூர் சாமான்களில் பூ, கொடி வேலைகள் அதிகமாகவும் காணப்படுகின்றன.

புறணிச் சித்திரவேலை

இதில் இரண்டு விதிகள் உண்டு. இரும்பு அல்லது காரியத்தாலான சாமான்களின் மேல் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் செதுக்கி, அவற்றில் வெள்ளித்தகடு அல்லது கம்பியைப் புதைப்பது (Damascening) ஒரு முறை. மேல் சொன்ன சாமான்களில் நமக்கு வேண்டிய பூ, கொடி முதலிய வேலைகளைச் செதுக்கி, அவற்றில் வெள்ளித் தகட்டைப் புதைப்பது (Bielri Nkortgari) மற்றொரு முறை. வெள்ளி வேலை கறுப்புப் பாத்திரத்தில் இருப்பது ஒரு தனி அழகைக் கொடுக்கின்றது. தவிர,, பாத்திரங்களில் பல வடிவங்களும் அழகை மிகுவிக்கின்றன, இவ்விதமான பாத்திரங்கள் ஐதராபாத் இராச்சியத்திலுள்ள பீடார் என்ற ஊரில் மிகுதியாகச் செய்யப்பட்டன. பெரும்பாலும் முகம்மதியர்களே இவற்றை மிகுதியாகக் கையாண்டனர்.

வார்ப்பு வேலை

இம்முறையில் கைவிளக்குக்கள், குத்துவிளக்குக்கள், விக்கிரகங்கள் முதலியவை செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் இம்முறையில்மேற் சொல்லிய பொருள்கள் செய்வது வெகு நாட்களாகப் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இருந்தாலும், இக்கலை சிறப்பாகத் தென்னிந்தியாவில் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. கஜலட்சுமி உருவம் பெற்ற கைவிளக்குக்களும் கோயில்களில் காணப்படும் பல கிளைகளுடன் அழகிய வேலைப்பாடுகளமைந்த விளக்குக்களும், அன்னப் பறவையைத் தலையில் கொண்ட குத்துவிளக்குக்களும் பிரசித்தமானவை, தீபலட்சுமி என்ற ஒருவகை விளக்கையும் கோயில்களில் சாதாரணமாகக் காணலாம். இதில் ஒரு பெண் தன் கைகளில் ஒரு விளக்கை ஏந்தி நிற்பாள். இப்பாவையின்மேல் பலவித அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். இம்முறையில் செய்யப்பட்ட சாமான்களில் சிறப்பு வாய்ந்தவைகளாகப் பொதுவாக உலோக வேலைக்கலையின் உயர்ந்த தன்மைக்கே உதாரணமாக இருப்பவை கோயில்களில் காணப்படும் பலவிதச் சிலைகளாகும்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

துணை நூல்கள்

  • E. Thurston, Velayudha Asari & W. S. Hadaway, Illustrations of Metal Works in Brass and Copper, mostly South Indian
  • 0. C. Gangoly, South Indian Bronzes
  • F. H. Gravely & T. N. Rama. chandran, South Indian Hindu Metal Images in The Government Museum, Madras
  • Ananda K. Coomaraswamy, Arts and Crafts of India and Ceylon.
"https://tamilar.wiki/index.php?title=இந்திய_உலோக_வேலைக்_கலை&oldid=17891" இருந்து மீள்விக்கப்பட்டது