இந்திய உருவப்படக்கலை

இந்திய உருவப்படக்கலை; இந்தியாவில் உருவப்படக்கலை மிகத் தொன்மையான காலத்திலிருந்தே பயின்று வருகிறது. பண்டைக்கால இலக்கியங்களில் இக்கலையைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. பண்டைக்கால உருவப்படம் ஒன்றேனும் இப்போது இல்லையாதலால் அவற்றின் கலையமப்பைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. பௌத்தம் போன்ற சமயங்களின் தோற்றத்தால் கலைத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கலையானது சமயக் கோட்பாடுகளின் குறியீடாகவும் ஆன்மிகக் கொள்கையின் அறிகுறியாகவும் ஆக்கப்பட்டது. தனிப்பட்டோர் தம் உருவ நினைவுச் சின்னங்களை உண்டாக்கி வைத்துக் கொள்வதில் நாட்டம் செலுத்தவில்லை. ஓவியக்கலை பெரும்பாலும் கோயில்களையும் அரண்மனைகளையும் அழகு செய்யப் பயன்படுத்தப்பட்டது. சமயக்கதைகளும் கற்பனைக் காட்சிகளும் ஓவியர்களால் சித்தரிக்கப்பட்டன. உருவப்படக்கலை பொதுக்கலையாக வளர்வதற்கு ஏற்ற வாய்ப்பில்லை.

மேலே இடமிருந்து வலமாகக் கடிகாரச் சுற்றில் ராதை (1650), அஜந்தா ஓவியம் (450), இந்துமத ஓவியம் (1710), சகுந்தலை (1870).

மொகலாயராட்சி தொடங்கியபின் உருவப்படக்கலை பெருஞ்சிறப்புப் பெறலாயிற்று. அவர்கள் தங்களுடைய உருவப்படங்களை எழுதி வைத்துக்கொள்வதில் விருப்பம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே இக்கலைக்கு அவர்கள் பேராதரவு தந்தார்கள். இந்திய ஓவியரும் பாரசீக ஓவியரும் இக்கலையில் தம் திறமையைச் செலுத்தி, மன்னரின் ஆதரவும் பெருங்குடிமக்களின் ஆதரவும் இருந்தமையால் ஆர்வத்தோடு இதனை வளர்ந்த்தனர். இந்தியாவிற்கே இயல்பான வரிப்பட முறையைக் கையாண்டு சிற்றோவியங்களாகப் பல உருவப்படங்களை வரைந்தனர். 1526-ல் இந்தியாவில் மொகலாயராட்சியை நிறுவிய பாபர் முதல் 1862-ல் இறந்த கடைசி மொகலாய மன்னர் வரையிலுள்ள எல்லா மன்னர்களின் உருவப்படங்களையும் தீட்டினர். மற்றும் தோடர்மால், ராஜா பீர்பால் முதலான அமைச்சர்கள், அறிஞர்கள், சமய குருக்கள், இளவரசர்கள், அரச சபையினர் பாடகர்கள், நடனமங்கையர், வீரர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் முதலிய பல்வேறு திறத்தவர்களின் உருவப்படங்களையும் வரைந்தனர்.

பிரித்தானிய கலைக்காட்சி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாபரின் உருவப்படமும் கல்கத்தாப் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பாரசீகக் கவிஞர் சாஹதீ, அக்பரின் அரசாஙக்த் தலைமைக் கவிஞர் பெய்சீ, முகமது நவாபு, ஜஹாங்கீர், அக்பர், ஷாஜகானின் அரசாங்க ஓவியர் முகமது பஹ்ருல்லாகான், ஷாஜகானின் மகன் தாரா ஷுக்கோ போன்றவர்களின் படங்களும் மொகலாயர் கால உருவப்படங்களின் மேன்மைக்கும் சிறப்புக்கும் இன்றும் நிலையான சான்றுகளாகும்.

மொகலாய மன்னர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களுடைய தனி உருவப்படங்களேயன்றி கொலுமண்டபத்தில் அமைச்சர் முதலானவர்களுக்கிடையே வீற்றிருப்பதைக் காட்டும் படங்கள், அறிஞர்களோடு சேர்ந்திருப்பதைக் காட்டும் படங்கள் முதலிய தொகுதி உருவப்படஙக்ளையும் வரைவதற்கு ஏற்பாடு செய்தனர். ஜஹாங்கீர் (1569-1627) உருவப்பட ஆர்வத்தில் மற்ற மன்னர்களை விஞ்சி விட்டவர். உருவப்படஙக்ளை அன்பளிப்பாகக் கொடுக்கும் பழக்கத்தைத் தோற்றுவித்தார். மற்றும் உருவப்படம் பதித்த அணிவகையைத் தோற்றுவித்தார். அரச் சபையினர் மன்னரின் சிற்றோவியங்களை இலச்சினைகளில் பொருத்தி அணிந்துகொண்டனர். அவர் காலத்தில் பிஷான் தாஸ் மிகச்சிறந்த உருவப்பட ஓவியராக இருந்தார். மொகலாயார் கால உருவப்படங்களில் ஒருவருடை புறத்தோற்றத்தோடு அக இயல்பும் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டன, மேலும் அவை அக்காலத்திய நடைமுறை, பழக்க வழக்கங்கள் முதலியவைகளை அறிவிக்கும் களஞ்சியங்களாக உள்ளன.

மொகலாயர் கால உருவப்படக்கலை முற்றிலும் ஆண்பாலரைப் பற்றிய கலையாகும். பெண்பாலரைச் சித்தரிக்கவில்லை. பர்தா முறையே இதற்குக் காரணமாகும். உருவப்படங்களில் தக்க பின்னணியமைப்பு இருந்தது; தக்க வண்ணங்கள் இடப்பட்டன; துணியும் காகிதமும் படம் வரைவதற்குப் பயன்பட்டன; இருவகைத் தோற்ற முறைகள் கையாளப்பட்டன. சில உருவப்படஙக்ள் ஆட்களின் பக்கத் தோற்றத்தைக் காட்டுகின்றன. வேறு சில முன் தோற்றாத்தைக் காட்டுகின்றன. இவ்விரு முறைகளும் ஒரே காலத்தவை. முன்னது இந்திய பண்டைக்கலையைத் தழுவியது. பின்னது பாரசீகக் கலையைத் தழுவியது.

ஔரங்கசீப் காலத்தில் மொகலாய உருவப்படக்கலை பொலிவிழந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதும் குன்றியது. அதே சமயத்தில் ஐரோப்பியர் வருகையால் ஐரோப்பியக் கலை முறை இந்தியாவில் புகுந்து சிறிது சிறிதாகப் பரவத்தொடங்கிற்று. ஓவியர்கள் அரசாஙக் ஆதரவை இழந்து செல்வர்களின் ஆதரவை நாடிச் சிதறிச் சென்று ஆங்காங்கு குடியேறினர். அவ்வாறு வெளியேறியவர்களில் சிலர் கோல்கொண்டாவிலும் பீஜப்பூரிரிலும் அகமத் நகரிலும் மொகலாய ஓவிய மரபைத் தழுவிய தக்கண ஓவிய மரபை நிறுவினர். மற்றவகை ஓவியங்களோடு உருவப்படங்களையும் வரைந்தனர். பீஜப்பூரும் கோல்கொண்டாவும் வீழ்ச்சியடைந்த பின்னர் இம்மரபு விஜயநகரப் பேரரசு காலத்தில் ஐதராபாத்,கடப்பை போன்ற இடங்களில் பரவியது

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=இந்திய_உருவப்படக்கலை&oldid=17883" இருந்து மீள்விக்கப்பட்டது