இதோ மானுடம் (நூல்)
இதோ மானுடம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் புலவர் ம.அருள்சாமி என்பவர். புதிய ஏற்பாட்டில் நான்கு நற்செய்தியாளர்கள் இயேசு பற்றிக் கூறும் செய்திகளை ஆசிரியர் இக்காப்பியத்தில் பாவாக உருவாக்கித் தருகிறார்.
நூலாசிரியர் | புலவர் ம. அருள்சாமி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | கவிதை |
வெளியீட்டாளர் | கவிதா பப்ளிகேஷன் |
பக்கங்கள் | 720 |
ISBN | 100-00-0000-105-7 |
பெயர் தோற்றம்
நற்செய்திகளில் வரும் இயேசுவைச் சாட்டைகளால் அடிக்கச் செய்தான் உரோமை ஆளுநன் பிலாத்து. இயேசுவின் உடல் முழுதும் செங்குருதியால் கறைபட்டது. அலங்கோலம் ஆகிவிட்ட இயேசுவின் அழகுத் திருமேனியைப் பிலாத்து யூதர்களிடம் காட்டி, இதோ, மனிதன் என்றான். மக்களின் உள்ளத்தில் இயேசு மட்டில் இரக்கம் தோன்றக்கூடும் என்று பிலாத்து நினைத்திருந்தால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்தது.
பிலாத்து, இயேசுவை மக்களுக்குக் காட்டி, இதோ மனிதன் என்று கூறிய சொற்கள் பொருள்செறிந்தவை. அச்சொற்களையே தம் காப்பியத்திற்கும் இந்நூலாசிரியர் பெயராக்குகிறார். மானுடம் என்னும் சொல் மனித குலம் முழுவதையும் உள்ளடக்கும் ஒரு முழுமைச் சொல்லாக உள்ளது. மனித குலம் முழுமைக்கும் தலைவன், உரிமை உடையவன் என்ற பொருளில் இயேசு பிரானை இதோ மானுடம் என்று பெயர் சூட்டி அவரைக் காப்பிய நாயகராகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.
நூல் பகுதிகள்
"இதோ மானுடம்" என்னும் இக்கிறித்தவக் காப்பியம் நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், முழங்கினார், போராடினார், வென்றார் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் பல உட்பிரிவுகளைக் கொண்டு, நூல் முழுவதும் 215 பாடல்களாக அமைந்துள்ளது.
ஆதாரம்
இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).