ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

ஆவூர் காவிதிகள் சாதேவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
சங்கநூல்களில் இவரது பாடல்கள் 2 இடம்பெற்றுள்ளன.
ஆவூர் தஞ்சை மாவட்டத்தில் உள்ளதோர் ஊர்.

பெயர் விளக்கம்

காவிதிகள் விளக்கம்

காவிதி என்பது வேளாண்மையில் சிறந்த உழவரைப் பாராட்டி அரசன் வழங்கும் விருது.
நாட்டைக் காவுதி என்று வேண்டிக்கொள்வது போல வழங்கிய விருது காவிதி என அமைந்தது.
'அடிகள்' என்னும் சொல்லில் 'கள்' என்னும் மதிப்பைத் தரும் சிறப்புவிகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
அது போலக் காவிதிகள் என்னும் சொல்லிலும் கள் விகுதி சேர்க்கப்பட்டுப் புலவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

சாதேவன் விளக்கம்

நக்கீரன், நச்செள்ளையார், நப்பாலத்தனார் என்னும் பெயர்களில் ந என்னும் முனொட்டு நல்ல என்னும் பொருளைத் தருவதை அறிவோம்.
அதுபோல, சாதேவனார் என்னும் பெயரிலுள்ள முன்னொட்டு சால் (சால்பு) என்பதைக் குறிக்கும்.
தமிழ் இலக்கண நெறிப்படி குறில் முன் ஒற்றெழுத்து சேர்ந்தும், நெடில் முன் ஒற்றெழுத்து சேராமலும் புணர்ந்தமைந்த பெயர்த்தொடர் இது.

1 அகநானூறு: 159 (பாலை)

அகநானூறு 159
அவன் பொருள் தேடிவரப் பிரிந்தான். அவனை நினைந்து அவள் உள்ளமும் வேறுபட்டது. அதனைக் கண்டு கவலைப்பட்ட தோழி அவளுக்கு ஆறுதல் மொழி கூறித் தேற்றுகிறாள்.

உப்பு வணிகர்

தெளியும் தெண்கழியில் வெண்கல் உப்பு விளையும். உமணர் அதனை விற்பதற்காக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வர். அதற்கு ஒழுகை என்று பெயர். வழியில் வண்டிமாடுகளை அவிழ்த்து மேய விட்டுவிட்டு அடுப்புக் கூட்டிச் சமைத்து உண்பர்.

கொடுவில் ஆடவர்

அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றபின் கொடுவில் ஆடவர் அந்த அடுப்பில் தம் அம்புகளைள் சூடேற்றி வடித்துக்கொள்வார்கள். பின்னர் அங்கு வரும் ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வர். தம் துடிப்பறைகளை முழக்குவர். உவலை இலையில் சுருட்டி வாட்டிய ஊன்கறியை உண்பர்.

தலைவி கவலை

இத்தகைய வழியில் காதலர் சென்றாரே என்று காதலி கவலைப்படுகிறாள்.

வானவனை வென்ற கொடுமுடி அரசனின் ஆமூர்

விசும்பின் நல்லேறு எனப்படும் இடிமுழக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கும் மலைமுகடுகள் கொண்டது குறும்பொறை நாடு. அதன் கிழக்குப்பக்கம் இருந்த ஆமூர் என்னும் ஊரில் இருந்துகொண்டு கொடுமுடி என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். பல வெற்றிகளைப் பெற்ற வானவன் என்னும் சேர வேந்தன் கொடுமுடி மன்னனைத் தன் யானைப்படை கொண்டு தாக்கினான். எனினும் கொடுமுடியின் ஆமூரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆமூர் எய்தினும் தங்கமாட்டார்

அந்த ஆமூரில் அமைதியான வாழ்க்கை அவருக்கு அமைந்தாலும், உன் நெஞ்சை மறந்து அவர் அங்குத் தங்கமாட்டார் - என்கிறாள் தோழி.

அகநானூறு, 159. பாலை = ஆமூர்க் கவுதமன் சாதேவனார். நற்றிணை, 264. பாலை = ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்.

2 நற்றிணை 264 \ பாலை

அவன் அவளோடு ஊருக்கு வெளியே ஒதுக்கிடத்தில் கூடியிருந்தான். பின்னர் ஊருக்குக் கொண்டுவந்து வழியனுப்பி வைக்கிறான். அப்போது கூறும் சொற்கள் இவை.

அவள் கூந்தல்

காலை வேளையில் மழை. பாம்பு வலையில் பதுங்கிக்கொள்ளும் அளவுக்கு இடி. அப்போது மயில் தன் தோகையை விரித்து ஆடுவது போலக் கூந்தல். பூச்சூடிய அந்தக் கூந்தல் காற்றிலே உலர்ந்துகொண்டிருந்தது.

அவன் சொல்கிறான்

பொழுது போய்விட்டது. மூங்கில் காட்டில் மேய்ந்த ஆனிரைகள் இல்லம் திரும்பும் மணியோசை கேட்கிறது. இதோ உன் ஊர் வந்துவிட்டது. கூந்தல் உளர நீ உன் ஊருக்குச் செல்.