ஆவுடை அக்காள்

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என்பவர் 16 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த பெண் தமிழ்க் கவிஞர். இவர் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளார்.[1] இவரின் பாடல்கள், பாடல்களின் கையாண்ட மொழி, உள்ளடக்கம் ஆகியன பாரதியாரில் பெரும் தாக்கத்தில் ஏற்படுத்தின என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2]

வாழ்க்கை

செங்கோட்டையில் வசதியான குடும்பத்தில் ஆவுடை அக்காள் பிறந்தார். இவருக்கு சிறுவர் திருமணம் செய்துவைக்கப்பட்டது. சிறுவயதிலேயே இவர் விதைவையானார். ஊரின் எதிர்ப்பிற்கும் மத்தியிலும் இவர் கல்வி கற்றார். இவரின் நிலைமையால் ஊர் இவரை "சாதிப் பிரஷ்டம்" செய்து வைத்தது. இவர் பாடல்களைப் புனைந்தார், சம்யச் செயற்பாடுகளில் ஈடுபட்டார், செல்வாக்குப் பெற்றார். பின்னர் ஊர்காரர்களிடம் மரியாதை பெற்றார்.[1]

வாழ்ந்த காலம்

ஆவுடை அக்காள் வாழ்ந்த காலம் பற்றிய முரணான கற்பிதங்களே காணக்கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் ஆவுடை அக்காள் பற்றி வாய்மொழியாகப் பெறப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளை நான்கு பேர் பதிவு செய்துள்ளனர். முதன் முதலில் அக்காளின் வாழ்க்கைக் குறிப்பானது, 1910 ஆம் ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த நா. வைத்தியநாத பாரதி அவர்களால் பதிப்பிக்கப்பட்ட “பிரம்ம மேகம்” எனும் சிறு பாடல் புத்தகத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலில் அக்காள் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் (1810) வாழ்ந்தவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகளால் 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறு பாடல் புத்தகத்தில், அக்காள் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் (1553) வாழ்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக "ஸ்ரீ ஆவுடையக்காள்" எனும் தலைப்பில் கோமதி ராஜாங்கம் (1954-ல்) எழுதிய கட்டுரையினை 1964 ஆம் ஆண்டு "ஸ்ரீ சங்கர க்ருபா" பத்திரிக்கையில் வெளியிட்டார். அக்கட்டுரையில் அக்காள் அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன் (1704) வாழ்ந்தவர் எனக் குறிப்பிடுகின்றார். நான்காவதாக நித்யானந்தகிரி ஸ்வாமிகள் 2002 ஆம் ஆண்டு பதிப்பித்த "செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு" எனும் நூலுக்காக எழுதிய முன்னுரையில் (ஸமர்ப்பணம்) அக்காள் அவர்கள் 350 ஆண்டுகளுக்கு முன் (1652) வாழ்ந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார். மேலே கூறப்பட்ட காலக் குறிப்புகளை ஆராயும் போது ஆவுடை அக்காள் அவர்கள் 1553, 1652, 1704, மற்றும் 1810 ஆகிய காலகட்டங்களில் வாழ்ந்திருக்கலாம் என்கின்ற முரண்பட்ட முடிவே கிடைக்கின்றன.

ஆவுடை அவர்கள் வாழ்ந்த காலத்தினைப் பற்றி நிலவும் முரணான கற்பிதங்களைக் களைந்து ஓரளவு சரியானக் காலகட்டத்தை அறிந்து கொள்வதென்பது, ஆவுடை அவர்களின் மறுவாழ்விற்கு வித்திட்ட ஆன்மீக குருவான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாளின் வாழ்க்கையை அறிந்து கொண்டதன் மூலம் சாத்தியப்பட்டது. 1635 ஆம் ஆண்டில் மைசூரில் பிறந்த அய்யாவாள், அங்கேயே திருமணம் செய்து தன்னுடைய தந்தையின் மரணம் வரை அங்கு வாழ்ந்து வந்தார். பின்பு ஆன்மீக வாழ்வினை மேற்கொண்ட அய்யாவாள் மைசூரிலிருந்து திருச்சி வந்தடைந்து சிலகாலம் தங்கினார். அதன்பின்பு திருச்சியிலிருந்து (கிட்டத்தட்ட 49 வது வயதிற்கு மேல்) இடம்பெயர்ந்து ஷாஹாஜி II அவர்கள் ஆண்டுகொண்டிருந்த (1684–1712) தஞ்சாவூருக்கு உட்பட்ட திருவிசைநல்லூரில் வந்து தாங்கினார். பல ஆன்மீக தலங்களுக்கும் நடைபயணமாகச் சென்று வந்த அய்யாவாள் இறுதியாகத் திருவிசைநல்லூரில் 1720 ஆம் ஆண்டு தனது 85 ஆம் அகவையில் முக்தியடைந்தார் என்பது தகவல். மேலும் அய்யாவாள் அவர்கள் சங்கரமடத்தின் 59 ஆம் பட்டமான ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர சரஸ்வதி (1638–1692) அவர்களுக்கும், அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை வல்லுனருமான சதாசிவ பிரம்மேந்திரருக்கும் (????–1753) சமகாலத்தவர் என்ற தகவலும் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் போது, தன்னுடைய 49 வயதிற்கு மேல் திருவிசைநல்லூர் கிராமத்தில் குடியேறிய அய்யாவாள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அய்யாவாளின் ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக அவர் தென்காசி, குற்றாலம் வழியாக நடைபயணமாக வேணாடு அரசர்களின் ஆட்சிக்குப்பட்ட செங்கோட்டைக்கு வருகை புரியும் போது அவர் ஏறக்குறைய 50 லிருந்து 75 வயதிற்குட்பட்டவராக (கிட்டத்தட்ட 1685 க்கு மேல்) இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். இந்தக் கணிப்பானது, கோமதி ராஜாங்கம் அவர்கள் ஸ்ரீ சங்கர க்ருபா பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் வயது முதிர்ந்த நிலையில் இருந்த அய்யாவாள் செங்கோட்டைக்கு வருகைதந்தார் எனும் தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஆவுடை அவர்கள் பருவமடைந்த இளம் விதவையாகவே இருந்த போதுதான் முதன்முதலாக தன்னுடைய ஞான குருவான அய்யாவளைச் சந்தித்ததாக ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி மற்றும் கோமதி ராஜாங்கம் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது 50 வயதுக்கு மேற்பட்ட அய்யாவாளை, இளம் கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் தன்னுடைய 15 மற்றும் 30 க்கு உட்பட்ட வயதிற்குள் சந்தித்திருக்கவே வாய்ப்புள்ளது. மேற்கூறிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் பொழுது ஆவுடை அவர்கள் கிட்டத்தட்ட கி.பி. 1655–1695 இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதலாம்.

ஆய்வும் திரட்டும்

ஆய்வுடையாரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு, பிரம்ம மேகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

இவரைப் பற்றிய ஆய்வினை திருமதி கோமதி ராஜாங்கம் அவர்கள் செய்துள்ளார்.

பாடலில்களில் கருப்பொருள்

இவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, சாதிய சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவர் சிறு வயதில் விதைவை ஆகி, "சாதிப் பிரஷ்டம்" செய்யப்பட்டார். இந்தக் கடுமையான வாழ்சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருட்களில் வெளிப்படுகின்றது. இவரது பாடல்களில் சாதிய எதிர்ப்பு, பெண் உரிமை/பெண்ணிய, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துக்கள் பரந்து கிடைக்கின்றன.[1][3]

ஆவுடை அக்காளிண் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தும் சில எடுத்துக்காட்டுப் பாடல்கள்:

எ.கா 1

தான் பிறர் என்ற தாழ்ச்சி உயர்ச்சியும் போச்சே,
ஆண் என்றும் பெண்ணென்றும் அலைந்து திரிந்ததும் போச்சே

எ.கா 2

தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?

எ.கா 3

தீட்டு திரண்டு உருண்ட சிலைபோலே பெண்ணாக்கி வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப் போச்சோ - பராபரமே

சாதிய எதிர்ப்பு வெளிப்படும் பாடல்கள்:

எ.கா 1

ஜாதிச் சண்டை போச்சே - உங்கள்
வேத சாஸ்திரமும் வெறும் பேச்சே

எ.கா 2

எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்

எச்சில் இல்லாத இடமில்லை - பராபரமே

சமய நம்பிக்கைகள், சடங்குகள் தொடர்பாக கருத்துக்களைல் வெளிப்படுத்தும் பாடல்கள்:

எ.கா 1

அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வைஅயத்தே
தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று சாதிப்பார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்
தத்துவமாய் மெய்ப்பொருளை தப்பவிட்டு நின்றோமோ?

முக்தி

ஆவுடை அவர்களின் மரணம் பற்றிய தெளிவானக் குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. ஆன்மீக முழுமையடைந்த ஆவுடை அவர்கள் ஒரு ஆடி அமாவாசை தினத்தன்று குற்றாலத்தில் நீராடிவிட்டு தனது புடவைப்பெட்டியோடு பொதிகை மலை மீது ஏறிச் சென்றவர் பின்பு திரும்பவே இல்லை என்ற செவிவழிச் செய்தியை கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவுசெய்துள்ளார். அதேசமயம் அனுபோக ரத்னமாலை எனும் இரங்கற்பாடலை கி.பி. 1720 ஆம் ஆண்டில் மறைந்த ஸ்ரீதர அய்யாவாளுக்காக ஆவுடை அவர்கள் இயற்றியுள்ளார். இதனடிப்படையில் நோக்கும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1720 க்கு பின்னர்தான் இறந்திருக்க வேண்டும் என்பதனைக் கூறமுடியும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆவுடை_அக்காள்&oldid=23973" இருந்து மீள்விக்கப்பட்டது