ஆர். வைத்தியநாதசுவாமி
இராமசுவாமி எஸ். வைத்தியநாதசுவாமி அல்லது பொதுவாக ஆர். வைத்தியநாதசுவாமி (Ramaswamy S. Vaidyanathaswamy, 1894 - 1960) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் கணிதப் பேராசிரியர். அப்பதவி முதன்முதலில் 1919 இல் கணிதமேதை சீனிவாச ராமானுசனுக்காக உண்டாக்கப்பட்டும் அவருடைய உடல்நிலைக் குறைவினாலும் 1920இல் ஏற்பட்ட அவரது அகாலமரணத்தினாலும் அப்பதவியில் அவர் உட்காரவேயில்லை. வைத்தியநாதசுவாமியையும் சென்னை பல்கலைக்கழகம் 'ரீடர்' (Reader) பதவியில தான் வைத்திருந்தது. ஆனால் கணித வட்டாரங்களில் அவர் சென்னைப் பேராசிரியராகத்தான் புழங்கப்பட்டு வந்தார்.
ஆர். வைத்தியநாதசுவாமி | |
---|---|
ஆர். வைத்தியநாதசுவாமி | |
பிறப்பு | 1893 தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமம் |
இறப்பு | 1960 |
தேசியம் | இந்தியா |
துறை | கணிதவியல் |
பணியிடங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | டர்ன்புல், மற்றும் விட்டேகர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | வி.எஸ். கிருஷ்ணன்,
ஸீ. எஸ். வெங்கட்ராமன், எம்.வீ. சுப்பராவ், பீ. கேசவ மேனன், |
அறியப்படுவது | இடவியல், வடிவவியல் எண் கோட்பாடு |
பிறப்பும் கல்வியும்
வைத்தியநாதசுவாமி அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த சென்னை மாகாணத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை மாயவரத்திலும் (தற்கால மயிலாடுதுறையில்) சென்னையிலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்துக்கொண்டு பிறகு சென்னை கிறிஸ்தவர் கல்லூரியிலும் மாகாணக் கல்லூரியிலும் படித்து முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வடிவவியலில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தார். பிறகு சென்னை பல்கலைக் கழகத்தின் படிப்புதவிச்சம்பளம் பெற்று ஸ்காட்லந்து சென்று St. Andrews University இல் Ph.D., D.Sc. ஆகிய இருமுனைவர் பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது அவருடைய சமகாலத்திய கணித ஆராய்ச்சியாளர்கள்: காப்ஸன், எட்வர்ட்ஸ், மற்றும் ஹாப்ஸன். அவருடைய ஆசிரியர்கள்: டர்ன்புல், மற்றும் விட்டேகர்.
முனைவர் பட்டத்திற்கான ஆய்வு
- "Binary and Double Binary Forms" என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வு அவருக்கு Ph.D. பட்டத்தை அளித்தது.
- "Pedal correspondence, general (m,n) correspondence and mixed determinants" என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வு அவருக்கு D.Sc. பட்டத்தை அளித்தது.
தொழில்
- 1925: ஆராய்ச்சியாளர், சென்னைப் பல்கலைக்கழகம்.
- 1926 ஆசிரியர், வாராணசி இந்து பல்கலைக்கழகம்.
- 1927 - 1952 ஆசிரியர், பிற்பாடு ரீடர் (Reader), சென்னைப் பல்கலைக்கழகம்.
கௌரவப்பணிகள்
- 1927-1950: ஆசிரியர், இந்தியக்கணிதக்கழகத்தின் Journal (Journal of the Indian Mathematical Society)
- 1940-1942 தலைவர், இந்தியக்கணிதக்கழகம்
சாதனைகள்
- கணிதத்தில் ஒரு பெருந்தலை (சாம்பவான்). அவரிடத்தில் பயின்று உலகப்புகழ் பெற்றவர்கள் பலர். சிலருடைய பெயர்கள்:
- வி. கணபதி அய்யர் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
- வி.எஸ். கிருஷ்ணன் (சென்னைப் பல்கலைக்கழகம்)
- கே.ஜீ. ராமநாதன் (T.I.F.R. Mumbai)
- பீ. கேசவ மேனன்
- கே. சந்திரசேகரன் (ஆந்திரா பல்கலைக்கழகம்)
- ஸீ. எஸ். வெங்கட்ராமன் (கேரளா பல்கலைக்கழகம்)
- எம்.வீ. சுப்பராவ் (ஆந்திரா பல்கலைக்கழகம்)
- வீ.கே. பாலசந்திரன் (சென்னைப்பல்கலைக்கழகம்)
- 91 கணித ஆய்வு வெளியீடுகள். இவை வடிவவியல், எண் கோட்பாடு, கணிதத்தருக்கம், இடவியல் முதலிய கணிதப் பிரிவுகளைச் சார்ந்தவை.
- அவருடைய ஆராய்ச்சி நூல்களில் மிக மிகப்புகழ் பெற்றது "The Theory of Multiplicative Arithmetic Functions" என்ற ஆய்வுமடல் 'Transactions of the American Mathematical Society' இல் வெளியிடப்பட்ட 80-பக்கம் கொண்ட ஆய்வுரை.
- புத்தகவடிவில் அவர் எழுதிய கணித நூல்கள்:
- A Memoir on Cubic Transformations associated with Desmic System, published by the Indian Mathematical Society
- General Topology என்ற் தலைப்புடன் 1947 இல் வெளியிடப்பட்ட நூல், பிற்பாடு செல்சீ பிரசுரிப்பாளர்களால் 1960 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. அவருடைய இந்நூல் உலகத்திலேயே மூன்றாவதாக ஆங்கிலத்தில் இடவியலைப்பற்றி எழுதப்பட்டு உலகவழக்கில் புழங்கிய நூலாகும். மேல்நாட்டு இடவியல் வல்லுனர்களான எசு. லெஃவ்ழ்சிட்சு (S. Lefschetz), ஈ. மைக்கேல் (E. Michael) இருவரும் இந்நூலை மிக உயரத்தில் வைத்துப்பேசியதுண்டு.
- விருதுகள்:
- ஃவெல்லோ ஆஃவ் த ராயல் சொசைட்டி ஆஃவ் எடின்பர்கு (Fellow of the Royal Society of Edinburgh).
இதர ஈர்ப்புகள்
கணிதத்தைத்தவிர கணிதம் போலவே அவரை ஆழமாக ஈர்த்த மூன்று துறைகள்:
- வேதங்கள்
- அரவிந்தரின் முழுமையான யோகம். இதனில் அவரை ஒரு சான்றாளராகவே (authority) சொல்லலாம்.
- முத்துசாமி தீட்சிதரின் கிருதிகள்
அவருடைய கணிதச்சொற்பொழிவுகளில் கூட இவைகளைக் கொண்டுவராமல் அவர் பேசியவை மிகசொற்பமானவையே.
உசாத்துணைகள்
- Mathematics Newsletter (Sponsored by National Board for Higher Mathematics) December 1994. pub. b y Ramanujan Math. Society.