ஆனைக்கோட்டை முத்திரை

ஆனைக்கோட்டை முத்திரை (Anaicoddai Seal) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும் காணப்படுகிறது. மற்றைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.

இலங்கையின் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலத் தமிழ்-பிராமி கல்வெட்டு

கண்டுபிடிப்பின் பின்னணி

பொ. இரகுபதியின் முனைவர் பட்ட ஆய்வுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 1980களின் தொடக்க ஆண்டுகளில் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் களங்களில் ஆனைக்கோட்டை தொல்லியல் களமும் ஒன்று[1]. இங்கே காணப்பட்ட பெருங்கற்காலத் திட்டுக்கள் பல அயலில் உள்ள தாழ்வான பகுதிகளை நிரப்பி வீடமைக்கும் திட்டத்துக்காக மண் அள்ளப் பட்டதனால் குழப்பப்பட்டு இருந்தது.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வுக்கொடை மூலம், அப் பல்கலைக் கழகத்தின் வராலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பேராசிரியர். கா. இந்திரபாலா, பேராசிரியர். எஸ். கே. சிற்றம்பலம், முனைவர். பொ. இரகுபதி ஆகியோர் பல்கலைக் கழக மாணவர்களின் உதவியுடன் இந்த ஆய்வுகளை நடத்தினர்[2]. இங்கே ஒரு அடக்கக் குழியும் பல தொல் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அடக்கக் குழிக்குள் காணப்பட்ட எலும்புக்கூட்டின் மண்டையோட்டுக்கு அருகில் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் காணப்பட்ட பொருட்களுள் "ஆனைக்கோட்டை முத்திரையும்" ஒன்று. இந்த அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களுள் ஆர்வத்தை மிகவும் தூண்டிய பொருளும் இதுவே.

வாசிப்புக்கள்

இந்திரபாலாவின் வாசிப்பு

 
ஆனைக்கோட்டை முத்திரையின் அண்ணளவான ஒரு புறக்கோட்டு வடிவம்

இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார். இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும்போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும். "த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன. "கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும்.

மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது[3].

இரகுபதியின் வாசிப்பு

பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்[4].

மதிவாணனின் வாசிப்பு

முனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.[5]

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. இரகுபதி, பொ., 1987. பக் 66
  2. இரகுபதி, பொ., 1987. பக் 117
  3. இரகுபதி, பொ., 1987. பக் 200 – 202
  4. இரகுபதி, பொ., 1987. பக் 202 – 203
  5. காசிராஜன், வெங்கடேஸ்வரன், 2008

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆனைக்கோட்டை_முத்திரை&oldid=25292" இருந்து மீள்விக்கப்பட்டது