ஆனந்தன் (திரைப்படம்)
ஆனந்தன் (அல்லது அக்னி புராண மகிமை) ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். 1942 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை எஸ். டி. எஸ். யோகி தயாரித்து இயக்கியிருந்தார். எம். வி. மணி, எஸ். டி. ஆர். சந்திரன், பி. சரஸ்வதி, கிருஷ்ணகாந்த், கே. வி. ஜீவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1]
ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை | |
---|---|
படிமம்:Anandan 1942 tamil film poster.jpg திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். டி. எஸ். யோகி |
தயாரிப்பு | யோகி பிலிம்சு, பாரத் மூவிடோன் |
திரைக்கதை | எஸ். டி. எஸ். யோகி |
இசை | கே. வி. மகாதேவன் ஜி. ராமநாதன் |
நடிப்பு | எம். வி. மணி எஸ். டி. ஆர். சந்திரன் பி. சரஸ்வதி கிருஷ்ணகாந்த் கே. வி. ஜீவா வி. எம். பங்கஜம் |
ஒளிப்பதிவு | ஆர். எம். கிருஷ்ணசுவாமி |
கலையகம் | பாரத் ஸ்டூடியோ மூவிடோன் |
விநியோகம் | சௌத் இந்தியா பிக்சர்சு, சென்னை |
வெளியீடு | 22 சனவரி 1942 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைக்கதை
இந்தக் கதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. வசந்த மகாராஜா ஒரு நாட்டின் அரசர். ஆட்சியை நடைமுறைப்படுத்தும் அதிகாரியாக அவரது இராஜகுரு இருக்கிறார். இந்த இராஜகுரு ஒரு தீயவன். நாட்டிலே ஆனந்தன் என்ற ஒரு மதகுரு இருக்கிறார். இந்த மதகுருவை மயக்கும்படி அரண்மனை நாட்டியக்காரி மோகினியை இராஜகுரு அனுப்புகிறார். ஆனால் மோகனா ஆனந்தனின் பக்தை ஆகிறாள். இதனால் ஆத்திரமுற்ற இராஜகுரு, ஆனந்தனை நிஷ்டை நிலைக்குக் கொண்டு போய் அவனது உடலை அசைவற்றதாக ஆக்கிவிடுகிறார். பின்னர், அசைவற்ற ஆனந்தனின் உடலை எடுத்துச் சென்று படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் மகாராணிக்குப் பக்கத்தில் வைத்து விடுகிறார். மதகுருவும் மகாராணியும் ஒரே கட்டிலில் படுத்திருப்பதை மகாராஜா பார்த்துவிடுகிறார். அவர்கள் இருவரையும் உயிருடன் எரித்துக் கொல்லும்படி கட்டளையிடுகிறார். ஆனந்தன் தன் இரு கண்களையும் தோண்டியெடுத்து மோகினியிடம் கொடுக்கிறான். ஆனால் அக்கண்கள் நழுவிச் சென்று கைலாசத்திலே சிவபெருமானைச் சென்றடைகின்றன. நிலைமையை அறிந்த சிவன், பார்வதியுடன் வந்து ஆனந்தனையும் மகாராணியையும் காப்பாற்றுகிறார். அரசன் புத்தி தெளிந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறான். இராஜகுரு தான் செய்த கொடிய செயல்களுக்குத் தண்டனையாகக் கண்பார்வையை இழக்கிறார்.[1]
நடிகர்கள்
நடிகர்/நடிகை | கதாபாத்திரம் |
---|---|
எம். வி. மணி | வசந்த மகாராஜா |
எஸ். டி. ஆர். சந்திரன் | இராஜகுரு |
பி. சரஸ்வதி | மோகினி |
கிருஷ்ணகாந்த் | மதகுரு ஆனந்தன் |
கே. வி. ஜீவா | மகாராணி |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Aanandan (1942)". தி இந்து. 31 அக்டோபர் 2015. http://www.thehindu.com/features/cinema/aanandan-or-agni-purana-mahimai/article7826884.ece. பார்த்த நாள்: 24 அக்டோபர் 2016.