ஆதி நாகப்பன்
டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் (1926 - மே 9, 1976) மலேசியாவின் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார். ஒன்பது வயதில் தமிழ் நாட்டில் இருந்து கப்பலேறி மலாயா, பினாங்கிற்கு வந்தவர். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி, இறுதியில் மலேசியாவின் சட்டத்துறை துணை அமைச்சரானார். அடுத்து வந்த இரண்டே ஆண்டுகளில் பிரதமர் துறையில் முழு அமைச்சராகிச் சாதனை படைத்தார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் பிரதமர் துறை அமைச்சர் 5 மார்ச் 1976 - 9 மே 1976 |
|
துவக்கம் | சட்டத்துறை துணையமைச்சர் 1974 - 4 மார்ச் 1976 |
முடிவு | 9 மே 1976 |
இயற்பெயர்/ அறியும் பெயர் |
டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் Tan Sri Athi Nagappan |
பிறந்ததிகதி | 1926 |
பிறந்தஇடம் | தமிழ் நாடு, இந்தியா |
இறப்பு | மே 9, 1976 | (அகவை 50)
பணி | ம.இ.கா தலைவர் மலேசிய அமைச்சரவை |
அரசியல்கட்சி | மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) |
இணையதளம் | 7 |
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ஜான்சி ராணிப் படையின் தலைவிகளில் ஒருவராக விளங்கிய ஜானகியைக் கலப்பு மணம் செய்து கொண்டார் ஆதி நாகப்பன் செட்டியார். மிக இளம் வயதில் செனட்டர் பதவியில் அமர்ந்து, மிகச் சிறப்பான பணிகளைச் செய்தவர். மலேசிய இந்தியக் காங்கிரசின் துணைத் தலைவராகி, துணைச் சட்ட அமைச்சராக உயர்ந்து முழு அமைச்சரானவர். பாராட்டுக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுத் திடீரென்று இறந்து போனார்.
வாழ்க்கைச் சுருக்கம்
ஆதி நாகப்பன் 1926ஆம் அண்டு தமிழ்நாட்டில் பிறந்தார். ஒன்பது வயதில் ஒரு வார்த்தை ஆங்கிலம் அறியாமல் 1935ல் பினாங்கு வந்தார். தனது தொடக்கக் கல்வியை முடித்த பின்னர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கெடா, புக்கிட் மெர்தாஜாம் நகரில் உள்ள புக்கித் மெர்த்தாஜம் உயர் பள்ளியில் தொடர்ந்தார். சப்பானிய ஆதிக்கம் ஆதி நாகப்பனின் கல்விக்குத் தடையானது. அதனால் மேலும் படிக்க முடியாமல் பத்திரிகைத் துறையில் இறங்கினார். சில உள்ளூர் பத்திரிகைகளில் பணி புரிந்தார்.
தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பு
ம.இ.கா. தொடங்கப் பட்ட காலத்தில் இருந்து ம.இ.கா. வட்டாரத்தில் ஆதி நாகப்பன் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். ஜான் திவியினாலும் அவரது நண்பர்களினாலும் ம.இ.கா. உருவாக்கப்பட்ட போது ஆதி நாகப்பன் அதில் மிக நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தார். நேதாஜி அமைத்த விடுதலை இயக்கத்தில் ஆதி நாகப்பனும் பங்கு பெற்று இருந்தார். இந்தியச் சுதந்திரக் கழகத்தின் பிரசாரப் பகுதியில் இவர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
ஆதி நாகப்பன் இளம் வயதிலேயே பத்திரிகை துறையில் ஈடுபாடு காட்டி வந்தார். அதனால் அவருக்கு பல இடங்களில் நல்ல அறிமுகம் கிடைத்து இருந்தது. 1947-இல் தன்னுடைய 22ஆவது வயதில் கோலாலம்பூருக்கு வந்து தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1952 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.
1948-இல் தமிழ்ச்சுடர் நாளிதழில் ’கற்பழிக்கப்பட்ட மனைவி’ எனும் கதையை ஆதிநாகப்பன் எழுதி இருந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த அவலத்தைச் சித்தரிக்கும் கதை அது. மனைவியின் கற்பு ஓர் இக்கட்டான சூழ்நிலையில் பங்கம் அடைந்தால், கணவன் அவளை மீண்டும் ஏற்று வாழ்வளிக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி தத்துவத்தைப் புலப்படுத்திய கதை அது. அந்தக் கதையின் மூலம் அவர் மலாயாவில் மிகப் பிரபலம் ஆனார்.
சிங்கப்பூர் அதிபருடன் நட்பு
1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலாயாவிலிருந்து ஏழு பத்திரிகையாளர்கள் பிரித்தானியாவுக்குச் சென்று ஒரு மாத காலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்தனர். அதில் ஆதி நாகப்பனும் ஒருவர். அவருடன் சென்ற எழுவரில் ஒருவர் தான் ‘உத்துசான் மலாயு’ பத்திரிகையைப் பிரதிநிதித்த யுசுப் பின் இஷாக். இந்த யுசுப் பின் இஷாக் தான் பின்னாளில் சிங்கப்பூரின் அதிபர் ஆனார்.
1949ல் தன்னுடைய 24ஆவது வயதில் சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தலைவர் ஆனார். பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் டிப்ளோமா பயிற்சி பெற மறுபடியும் 1950ஆம் ஆண்டு லண்டன் சென்றார். ஓர் ஆண்டு காலம் பயிற்சி மேற்கொண்டார். கோலாலம்பூருக்குத் திரும்பி வந்து 1952 வரை தமிழ்நேசனில் பணியாற்றிவிட்டு மறுபடியும் லண்டனுக்குப் போய் சட்டம் பயின்றார். சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு 1956-இல் மலாயாவிற்குத் திரும்பி வந்தார். கோலாலம்பூர் டத்தோ சர் கிளவ் துரைசிங்கம் (Clough Duraisingam) நிறுவனத்தில் பங்காளியாக சேர்ந்தார். பின்னர், 1957-இல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
திருமணம்
இந்தக் காலகட்டத்தில் ஏற்கனவே, நேதாஜி அமைத்த ஜான்சிராணி படையின் தலைவிகளில் ஒருவராக இருந்த குமாரி ஜானகியை ஆதி நாகப்பன் திருமணம் செய்து கொண்டார். திருமதி ஜானகி ஆதி நாகப்பன் கணவரின் வளர்ச்சியில் பல வழிகளில் உறுதுணையாக இருந்தார். இந்த ஜானகி ஆதி நாகப்பன் தான், பின்னாளில் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு தலைமைத்துவத்தின் கீழ் ம.இ.கா மகளிர் பிரிவின் பொறுப்பாளரானார். பின்னர், மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமனமும் செய்யப்பட்டார்.
ஆதி நாகப்பன் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டதும் அரசியலில் முழுமையாக ஈடுபட அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைத்தன. சிலாங்கூர் மாநிலத்தின் ம.இ.கா தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் பதவிகள் வந்தன. ம.இ.காவின் உயர் பதவிகளை வகித்த டத்தோ ஆதி நாகப்பன் செனட்டராக நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், திருத்தி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்டத் துறை துணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இறப்பு
டத்தோ உசேன் ஓன் 1976 ஜனவரி மாதம் மலேசியாவின் பிரதமர் பதவியை ஏற்றதும், தன்னுடைய பிரதமர் துறையிலேயே டத்தோ ஆதி நாகப்பனை முழு அமைச்சராக நியமித்துக் கொண்டார். டத்தோ ஆதி நாகப்பனைப் பாராட்டுவதற்கு ம.இ.கா தலைமையகம் ஒரு பாராட்டு விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது. 1976 ஜனவரி 15 ஆம் தேதி கோலாலம்பூர் பெடரல் ஓட்டலில் அந்த விருந்து நடைபெற்றது. ம.இ.கா தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் குழுமிய இருந்த நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின் அவர் உயிருடன் எழுந்திருக்கவே இல்லை.
மலேசிய நாட்டிற்கு டத்தோ ஆதி நாகப்பன் ஆற்றிய சேவைகளுக்காக அவர் இறந்த பிறகு பேரரசரால் டான்ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சாதனைகள்
1959-இல் மிக இளம் வயதில், அதாவது 35ஆவது வயதில் செனட்டர் பதவியில் அமர்ந்தார். மிகச் சிறப்பான முறையில் சேவைகளைச் செய்தார். ம.இ.காவின் துணைத் தலைவரானார். துணைச் சட்ட அமைச்சரானார். அதையும் கடந்து முழு அமைச்சரானார். ஆனால், முழு அமைச்சராகிய இரண்டே மாதத்தில் மரணமடைந்தார். ஒன்பது வயதில் ஒன்றுமே தெரியாமல், ஒரு வார்த்தை ஆங்கிலம் அறியாமல் கப்பலேறி வந்து ஒரு நாட்டின் அமைச்சராக உயர்ந்தவர் டான்ஸ்ரீ ஆதி நாகப்பன். இவருடைய புதல்வர் ஈஸ்வர் நாகப்பன் சிங்கப்பூரில் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.