அ. துரைராசா

பேராசிரியர் அழகையா துரைராசா (Alagiah Thurairajah; 10 நவம்பர் 1934 – 11 சூன் 1994) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னைநாள் பொறியியல் துறைப் பீடாதிபதியும் ஆவார்.

பேராசிரியர்
அ. துரைராஜா
A. Thurairajah
A. Thurairajah.jpg
யாழ் பல்கலைக்கழகத்தின் 2வது உபவேந்தர்
பதவியில்
செப்டம்பர் 1988 – ஏப்ரல் 1994
முன்னவர் சு. வித்தியானந்தன்
பின்வந்தவர் கே. குணரத்தினம்
தனிநபர் தகவல்
பிறப்பு (1934-11-10)10 நவம்பர் 1934
கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்பு 11 சூன் 1994(1994-06-11) (அகவை 59)
கொழும்பு, இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள் உடுப்பிட்டி அமிக
ஹாட்லிக் கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
தொழில் கல்விமான்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

துரைராசா யாழ்ப்பாணம் வடமராட்சியில் கம்பர்மலை என்னும் ஊரிலே, இமையாணனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அழகையா-செல்லம்மா ஆகியோருக்கு 1934 நவம்பர் 10 இல் பிறந்தார்.[1][2] தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும்[1][2] கற்று, 1953 சூலையில் பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டு குடிசார் பொறியியலில் 1957 ஆம் ஆண்டில் இளமாணிப் பட்டம் பெற்றார்.[1][2]

பின்னர் 1958 மார்ச் வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, நான்கு மாதங்கள் பொதுப்பணித் திணைக்களத்தில் இளைய பொறியியலாளராகப் பணியாற்றினார்.[2] பின்னர் புலமைப்பரிசில் பெற்று பேராசிரியர் கென்னத் ரொசுக்கோ வழிகாட்டலில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தார்.[2] 1958 அக்டோபர் முதல் 1961 திசம்பர் வரை துரைராசா மண்ணின் வெட்டுப் பண்புகள் பற்றிய ஆய்வில் ரொசுக்கோவிற்கு உதவினார்.[1][2] இந்த ஆய்வின் மூலம் 1962 சூன் மாதத்தில் "கயோலின் மற்றும் மணலின் சில வெட்டுப் பண்புகள்" என்ற தலைப்பில் துரைராசாவிற்கு முனைவர் பட்டம் கிடைத்தது.[1][2]

துரைராசா இராசேசுவரி என்பாரைத் திருமணம் செய்தார்.[1] இவர்களுக்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.[1][2]

பணி

முனைவர் பட்டம் பெற்ற துரைராசா இலங்கை திரும்பும் முன்னர் இலண்டனில் 1962 இல் டெரிசர்ச் என்ற நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார்.[1][2] பின்னர் பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.[1][2] 1971 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் பேராசிரியராக ஆவதற்கு முன்பு கனடா, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1][2] மே 1975 முதல் செப்டம்பர் 1977 வரையும், பின்னர் பெப்ரவரி 1982 முதல் பெப்ரவரி 1985 வரையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.[1][2][3] அக்டோபர் 1977 முதல் திசம்பர் 1978 வரை பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][2] ஏப்ரல் 1987 முதல் ஆகத்து 1988 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.[1][2]

1988 செப்டம்பர் முதல் 1994 மார்ச் வரை துரைராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[1][2][4] தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி கொழும்பு சென்று அங்குள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார்.[1] 1994 சூன் 11 அன்று இரத்தப் புற்றுநோயினால் ஏற்பட்ட இதய செயலிழப்பினால் கொழும்பில் காலமானார்.[1][2] இவர் இறந்த பின்னர் இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தனர்.[5]

துரைராசா 1977 முதல் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும், 1979 முதல் இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்திலும், 1985 மே முதல் ஐக்கிய இராச்சியத்தின் குடிசார் பொறியியல் நிறுவனத்திலும் உறுப்பினராக இருந்தார்.[1][2] 1986 இல் இவர் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவராகவும்,[1] அக்டோபர் 1989 முதல் அக்டோபர் 1990 வரை இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினார்.[2] இவர் மண் பொறியியலில் நிபுணராகவும் இருந்தார்.[6] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியர் துரைராசாவினால் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அ._துரைராசா&oldid=23820" இருந்து மீள்விக்கப்பட்டது