அரவிந்த் அடிகா

அரவிந்த் அடிகா (பிறப்பு: அக்டோபர் 23, 1974) இந்திய ஆஸ்திரேலிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இவர் எழுதிய தி ஒயிட் டைகர் என்னும் புதினத்திற்கு 2008 ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசுப் பெற்றார்.

அரவிந்த் அடிகா
இயற்பெயர் அரவிந்த் அடிகா
பிறந்ததிகதி 23 அக்டோபர் 1974 (1974-10-23) (அகவை 49)
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
குடியுரிமை ஆத்திரேலியர்
கல்வி நிலையம் கொலம்பியா பல்கலைக்கழகம்,
மாக்டலன் கல்லூரி, ஆக்சுபோர்டு [1]
குறிப்பிடத்தக்க விருதுகள் 2008 மேன் புக்கர் பரிசு
தி ஒயிட் டைகர்[2]
பெற்றோர் மாதவா அடிகா,
உஷா அடிகா
இணையதளம் www.aravindadiga.com

பிறப்பு

அரவிந்த் அடிகா, அக்டோபர் 23, 1974 ஆம் ஆண்டு டாக்டர் கே. மாதவா அடிகாவுக்கும், உஷா அடிகாவுக்கும் மகனாக சென்னையில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

அவர் தனது பள்ளிப்படிப்பை, மங்களூரிலுள்ள கனரா உயர்நிலைப்பள்ளி மற்றும் புனித ஆலோய்சியஸ் உயர்நிலைப்பள்ளியிலும் முடித்தார். அவர் 1990ல் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகவும், இவருடைய மூத்த சகோதரன் ஆனந்த் அடிகா இரண்டாவது மாணவனாகவும் தேர்ச்சிப் பெற்றனர். பின்பு இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு குடிபெயர்ந்ததால், தன்னுடைய படிப்பை ஜேம்ஸ் ரூசே வேளாண் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கினார். பின்னர் நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1997 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த அவர், ஆக்சுபோர்ட்டில் உள்ள மாக்டலன் கல்லூரியில் கல்விக்கற்றார்.

பணிகள்

பொருளாதாரம் பத்திரிக்கைகளில் செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர், ‘பைனான்சியல் டைம்ஸ்’, ‘மணி’, ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஆகிய பத்திரிக்கைகளிலும் செய்தியாளராக பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் தென் ஆசிய நிருபராகப் பணியாற்றிய அவர் பின்னர், டைம் பத்திரிக்கையில் இந்திய செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு டைம்ஸ் பத்திரிக்கையில் பாதிநேரமே வேலைபார்த்த இவர், தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன் முதல் இலக்கிய நாவலான “தி ஒயிட் டைகர்” என்னும் புதினத்தை எழுதினார். இந்த புதினத்திற்கு, பிரிட்டனின் புகழ்பெற்ற இலக்கிய விருதான “மேன் புக்கர் விருது” 2008 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னை உருவாக்கிய புனித ஆலோய்சியஸ் கல்லூரிக்கு நன்றியின் அடையாளமாக தனக்கு கிடைத்த பரிசின் மொத்தத்தொகையில் ஒரு பகுதியை வழங்கினார். இந்த தொகை “ஆலோய்சியன் ஆண்கள் இல்லத்தில்” ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தி ஒயிட் டைகர் நாவலின் கருத்து

ஒரு கிராமத்தில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து சற்று படிப்பறிவு இல்லாத ஒருவனின் மனப்பான்மையையும், கண்ணோட்டத்தையும் பிறகு நாகரிக உலகில் அவனுடைய வளர்ச்சியையும் கருவாகக் கொண்டுள்ளது. அதை கோபம், கனவு, நகைச்சுவை கலந்து மிக அழகிய நடையில் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியில் ஏழைகளின் நிலையையும் மனம் வறுட விவரித்துள்ளார். தொகுத்து எழுதப்பட்ட இந்த நாவல், இந்தியாவில் 2,50,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பங்களிப்புகள்

இவர் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறப்புப் பெற்று விளங்குகிறார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அரவிந்த்_அடிகா&oldid=18661" இருந்து மீள்விக்கப்பட்டது