அரங்க முருகையன்

அரங்க முருகையன் (அக்டோபர் 1, 1932 - செப்டம்பர் 13, 2009) இலண்டனில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம் எழுதியவர். இதழாசிரியர். "தமிழ்மணி" என்று போற்றப்படுபவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டார். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். அரங்க முருகையன் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த "மலாயா நண்பன்" நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

தொழில்

பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (Clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து 1972 இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் "நித்திலம்" என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.

லண்டனுக்குப் புலம்பெயர்வு

மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store Keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.

அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அரங்க முருகையன் பின்னாளில் 1978 இல் லண்டன் கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும் மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்கள் இயற்றல்

அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி "இலண்டன் தமிழ் வாசகம்" என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.

இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

"இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும் வழிபாட்டு முறையும்" என்ற இவரது நூல் "சைவ உலகம்" என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

அரங்க முருகையனின் நாவலான "தொடர்வண்டித் தூது" ஒரு தூயதமிழ் புதினம் ஆகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.

இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த அரங்க முருகையன் "தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம்" என்ற தலைப்பில் இவர் 1980 இல் கும்பகோணத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். "சோழர் வெற்றி" என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.

அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூல் "பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு". மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

மறைவு

அரங்க முருகையன் 13 செப்டெம்பர் 2009 அன்று முடக்குவாத நோயினால் (arthritis) பாதிக்கப்பட்டு இலண்டனில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

  1. "தமிழ் மணி அரங்க முருகையன்".
  2. "தமிழறிஞர் அரங்க முருகையன் நினைவுதினம்".
"https://tamilar.wiki/index.php?title=அரங்க_முருகையன்&oldid=3032" இருந்து மீள்விக்கப்பட்டது