அய்க்கண்

அய்க்கண் (செப்டம்பர் 1, 1935 – ஏப்ரல் 11, 2020) என்பவர் தமிழக எழுத்தாளரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார்

அய்க்கண்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அய்க்கண்
பிறப்புபெயர் மு. அய்யாக்கண்ணு
பிறந்ததிகதி 1 செப்டம்பர் 1935,கோட்டையூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
பிறந்தஇடம் கோட்டையூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு ஏப்ரல் 11, 2020
(அகவை 84) காரைக்குடி, தமிழ்நாடு
பணி பேராசிரியர்
தேசியம் இந்தியர்
அறியப்படுவது எழுத்தாளர், பேராசிரியர்
துணைவர் வசந்தா

பிறப்பும் கல்வியும்

இவர் திருப்பத்தூர் வட்டம் கோட்டையூரில் 01-09-1935 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் மு. அய்யாக்கண்ணு என்பது. கோட்டையூரில் தொடக்கக் கல்வியை முடித்தார். பள்ளத்தூர் அருணாச்சலம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், அழகப்பா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக சேர்ந்து தமிழ்த் துறைத் தலைவராகிப் பணி ஓய்வு பெற்றார். இவரது முதல் சிறுகதை, வள்ளியின் திருமணம் என்பது. இக்கதை ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது.

எழுத்துப் பணிகள்

தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர் எழுதிய நாடகம் முதல் பரிசு பெற்றது. இந்நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவர் எழுதிய, மண் எனும் சிறுகதை தற்போது 12 ஆம் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் எழுத்தாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்தவர்.[1] தமிழக அரசின் அண்ணா விருது பெற்றவர்.[1]

படைப்புகள்

சிறுகதைகள்
  • மண்ணின் மலர்கள்
  • ஊர்மிளை
  • தவம்
  • விடிவெள்ளி
  • வெள்ளைத் தாமரை
  • நெல்லிக்கனி
  • பரிமாணங்கள்
  • கரிகாலன் கனவு
  • நிழலில் நிற்கும் நிஜங்கள்
  • தீர்க்க சுமங்கலி
புதினங்கள்
  • அவனுக்காக மழை பெய்கிறது
  • இரண்டாவது ஆகஸ்ட் 15
  • அதியமான் காதலி
பிற வகை நூல்கள்
  • இளவெயினி
  • நெய்தலில் பூத்த குறிஞ்சி
  • நீயும் நானும் வேறல்ல
  • என் மகன்
  • அண்ணாமலை அரசர்.
  • கல்லுக்குள் சிற்பங்கள்

பாராட்டுகள், விருதுகள்

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான முதல் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை பெற்றுள்ளன. 2005 இல் மலேசியாவில் உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அதில் உலகத் தமிழ் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் இவர் கதை முதல் பரிசு பெற்றது. பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007 ஆம் ஆண்டு பாரதியாரின் 125 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது. குன்றக்குடி அடிகளாரிடம், நற்கதை நம்பி என்ற விருதும் பதக்கமும் பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சரிடம் ( ப. சிதம்பரம்) எழுத்து வேந்தர் எனும் விருதும் பெற்றுள்ளார். தமிழக அரசு இவருக்கு 2019 இல் அண்ணா விருது வழங்கிக் கெளரவித்தது.[1] பாரிசுத் தமிழ்ச்சங்கம், உத்தரபிரதேச மாநில அரசு ஆகியன நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றார்.[1]

மறைவு

பேராசிரியா் அய்க்கண் 2020 ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார்.[1][2]

மேற்கோள்கள்

உசாத்துணை

  • அரவிந்த், " எழுத்தாளர் அய்க்கண்" www.googleweblight.com பதிவு நாள் செப்டம்பர் 2011.
  • பொதுத்தமிழ் மேனிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்,சென்னை- பக்கம் 217.
  • முகம் மாமணி, 100 சாதனையாளர்கள், மணிவாசகர் பதிப்பகம் 1994.
"https://tamilar.wiki/index.php?title=அய்க்கண்&oldid=3029" இருந்து மீள்விக்கப்பட்டது