அடிமைப் பெண்
அடிமைப் பெண்(Adimai Penn) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, சந்திரபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 230 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
அடிமைப் பெண் | |
---|---|
இயக்கம் | கே.சங்கர் |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன், ஜெயலலிதா, சோ , சந்திரபாபு |
வெளியீடு | 01.05.1969 |
ஓட்டம் | 180 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
அடிமைப் பெண் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்ற போது வெள்ளை தொப்பியை அணிந்தார் எம்.ஜி.ஆர்.[1] அது பிடித்துப் போக தொடர்ந்து பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரின் அடையாளமாக மாறிப்போனது தொப்பி.[2]
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார் தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடு திரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற பாடல்
- ஆயிரம் நிலவே வா - எஸ். பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா பாடியது. - புலமைப்பித்தன் எழுதியது. இப்பாடல் மூலமே எஸ். பி. பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்.