அடிகளாசிரியர்
அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி (ஏப்ரல் 17, 1910 (பிறப்பு தமிழ் நாட்காட்டியில்: 1910 சாதாரண ஆண்டு சித்திரை 5 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை) - சனவரி 8, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். 2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 - 2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அடிகளாசிரியர் |
---|---|
பிறப்புபெயர் | குருசாமி |
பிறந்ததிகதி | ஏப்ரல் 17, 1910 |
பிறந்தஇடம் | கூகையூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு |
இறப்பு | சனவரி 8, 2012 | (அகவை 101)
பணி | பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
பெற்றோர் | பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள் |
துணைவர் | சம்பத்து |
பிள்ளைகள் | பேராசிரியர் (மறைவு), இளங்கோவன், நச்சினார்க்கினியன், சிவபெருமான், திருநாவுக்கரசி, குமுதவல்லி, செந்தாமரை, சிவா (மறைவு) |
இளமையும் பணிவாழ்வும்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள். வீரசைவ மரபினர். அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும். ஏழாம் அகவையிலேயே தந்தையை இழந்தவர் தம் தாய்மாமனார்களான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணியதேவர், கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார். மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார்.
பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தார். தமது தமிழ்க்கல்வியை உ. வே. சாமிநாதையரிடம் கற்ற இவர், 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றார். 1938ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க.வோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். தமிழைத் தவிர சமசுகிருதம், இலக்கணம், சோதிடம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். இவர் மொத்தம் 64 நூல்களை வெளியிட்டவர். கல்வெட்டு ஆய்வுகளிலும் ஆர்வமிக்கவராக விளங்கினார். அரிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வந்தார்.
பாராட்டுக்களும் விருதுகளும்
இவர் எழுதிய 100 பாடல்களைக் கொண்ட சிறுவர் இலக்கியத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இவரது பங்காற்றலுக்காக தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ் பேரவை செம்மல் என்று பாராட்டியுள்ளது. குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தொல்காப்பியர் விருதை 2011 மே 6 ஆம் நாள் மத்திய அரசு இவருக்கு செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் மூலம் அறிவித்தது.
எழுதிய நூல்கள்
- அருணகிரி அந்தாதி (1967) சரசுவதி மகால் வெளியீடு.
- மருதூரந்தாதி உரை (1968)
- காலச்சக்கரம் 1969,79 (சோதிடம்)
- வராகர் ஓரா சாத்திரம் 1970,78,90
- சிவஞானதீபம் உரை 1970
- சிவப்பிரகாச விகாசம் 1977
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை 1938
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை 1967
- தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை 1967(மு.கோவிந்தராசனாருடன்)
- திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை 1958
- திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை 1956
- சிவபுராணச் சிற்றுரை 1986,99
- சதமணிமாலை மூலமும் உரையும் 1990
- சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை 1991
- சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை 1991
- குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் 1999
- இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் 2001
- சசிவன்ன போதம் மூலமும் உரையும் 2002
- பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் 2003
பதிப்பு நூல்கள்
- வீரசைவப் பிரமாணம் 1936
- சதமணிமாலை 1938
- சிவப்பிரகாச விகாசம் 1939
- காமநாதர் கோவை 1957
- மேன்மைப் பதிகம் 1957
- சதுர்லிங்க தசகோத்திர சதகம் 1958
ஆராய்ச்சி நூல்கள்
- தொல்காப்பியம்- எழுத்தத்திகாரம்-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு 1966
- ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
- தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,1978
- தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம் த.ப. 1990
- தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல் த.ப.1985
- தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)
படைப்பிலக்கிய நூல்கள்
- பிள்ளைப்பாட்டு 1945
- திரு அரசிலிக்காதை 1948
- குழந்தை இலக்கியம் 1963
- சான்றாண்மை 1964-1975
- சென்னிமலை முருகன் தோத்திரம் 1980
- அரசியல் இயக்கம் 1981
- பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் 1983
- அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் 1982
- உளத்தூய்மை,1984,1994
- தண்ணிழல் 1990
- மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் 1993
- தொழிலியல் 1993
- மெய்பொருட்காதை
- தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் 1996
- ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் 1993
- சிறுவர் இலக்கியம்
- எங்களூர்
- தொடக்கப்பள்ளி - நாடகம்
- வீரசைவ சிவபூசாவிதி 1949
- விலையேற்றமும் வாழும் வழியும் 1984
- திருமூலரும் பேருரையும் 1998
- காயத்துள் நின்ற கடவுள்,1999
- திருவாசக அநுபூதி 2000
- கீதையின் அறிவுப்பொருள் 2000
- திருமந்திர உணர்வு 2001
- தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
- திருமந்திரத்தில் எட்டாம் திரும்முறை,2005
நாட்டுடைமையாக்கல்
இவரது படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அதற்கான பரிவுத் தொகை 20 சனவரி 2020 அன்று வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ "45 பேருக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்" (in Tamil). 2020-01-20 இம் மூலத்தில் இருந்து 2020-11-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201123174211/https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/20141908/1282017/Edappadi-Palaniswami-provided-TN-government-special.vpf.