அசதிக்கோவை
அசதிக்கோவை என்னும் நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையாரால் பாடப்பட்டது.[1]
நூலின் பெயர்
- அசதி என்பது அசதி என்னும் ஊரில் வாழ்ந்த பெருமகனைக் குறிக்கும். [2]
ஔவைக்குக் கூழ் கொடுத்து அவரது அசதியைப் போக்கினானாம் ஒருவன். ஔவையார் அவனது பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். அவன் தந்தை பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். ஊர் எது என்றாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். உன் குடிசை எங்கே இருக்கிறது என்றாராம். ஐவேல் இருக்கும் குடிசை என்றானாம். இந்தக் கற்பனைக் கதை வழியே வள்ளலின் பெயர் அசதி என்றும், அவனது ஊர் ஐவேல் [3] என்றும், அசதியைப் பாடிய நூல் அசதிக்கோவை என்றும் கூறப்படுகிறது.
இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்கள் [4] சிதைவாகக் கிடைத்துள்ளன.
அகத்துறைப் பாடல்களாக அவை உள்ளன.
பாடல், மு. அருணாசலம் மேற்கோள்
பாடல் கட்டளைக் கலித்துறை
- 1
அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்
முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றாள்? முத்தமிழ்நூல்
கற்றார்ப் பிரிவும் கல்லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே
- 2
ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி அணிவரையில்
கோப்பாம் இவள் எழில் கொங்கைக்குத் தோற்றிய காடிரண்டும்
சீப்பாய்ச், சிணுக்கிரியாய், சிமிழாய். சின்ன மோதிரமாய்
காப்பாய், சதுரங்கமாய், பல்லக்கு ஆகிக் கடைப்படவே.
பாடல், முனைவர் மு. ஆனந்தி [5] மேற்கோள்
பாடல்கள் கட்டளைக் கலித்துறை - இங்குப் பொருள் நோக்கில் சொல் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆலவட்டப் பிறை ஐவேல் அசதி அணி வரை மேல்
நீல வட்டக் கண்கள் நேர் ஒக்கும்போது அந்த நேரிழையாள்
மாலை விட்டுச் சுற்றி வட்டமிட்டு ஓடி வரவழைத்து
வேலை விட்டுக் குத்தி வெட்டுவள் ஆகில் விலக்கு அரிதே
ஆய்பாடியர் தம் ஐவேல் அசதி அணிவரையில்
கோப்பா அவள் எழில் கொங்கைக்குத் தோற்று இபக் கோடு இரண்டும்
சீப்பாய்ச் சிணுக்கரியாய்ச் சிமிழாய்ச் சின்ன மோதிரமாய்க்
காப்பாய்ச் சதுரங்கமாய்ப் பல்லக்கு ஆகிக் கடைப்பட்டதே
ஆதித்தனைக் கண்டு அரவம் தொடவும் அந் நகரிலுள்ளார்
பாலித்த முத்தும் பவளத்தோடு ஆர் இந்தப் பைந்தொடியாள்
சேனைத் தலைவனைச் செங்கோல் அசதியைச் சேர்ந்து ஒரு நாள்
கூடித் தழுவுவம் என்று தொட்டு ஆடல் குவி முலையே.
வெளிப்பார்வை
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
அடிக்குறிப்பு
- ↑ நந்தமண்டல சதகம்.
- ↑ 'அசதி கோவை' என ஒற்று மிகாமல் வரவேண்டியது இகர இறுபெயர் திரிபிடன் உடைத்தே (தொல்காப்பியம் உயிர்மயங்கியல்) என்னும் மரபுப்படி 'அசதிக்கோவை' என ஒற்று மிக்கு வந்துள்ளது.
- ↑ சங்ககிரிதுர்க்கம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள அசதி என்னும் ஊர்
- ↑ மு அருணாசலம் 10 பாடல்களைப் பதிப்பித்துள்ளார்
- ↑ கொங்கு மண்டல சதகம் உரை எழுதியவர், சாரதா பதிப்பகம், 2008