அக்ஞேய என்ற புகழ் பெற்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் (Sachchidananda Hirananda Vatsyayan 'Agyeya' सच्‍चिदानन्‍द हीरानन्‍द वात्‍स्‍यायन 'अज्ञेय') (7 மார்ச்1911 – 4 ஏப்ரல் 1987) என்பவர் நவீன இந்தி இலக்கியத்தின் முன்னோடியாவார். இவர் கவிஞர், புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர்.

அக்ஞேய
இயற்பெயர் சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் 'அக்ஞேய'
सच्‍चिदानन्‍द हीरानन्‍द वात्‍स्‍यायन 'अज्ञेय'
பிறந்ததிகதி (1911-03-07)7 மார்ச்சு 1911
பிறந்தஇடம் குஷிநகர் கிராமம், டியோரா மாவட்டம், உத்திரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 4 ஏப்ரல் 1987(1987-04-04) (அகவை 76)
பணி புரட்சிகர, எழுத்தாளர், புதினர், இதழாளர்
தேசியம் இந்தியர்
குறிப்பிடத்தக்க விருதுகள் 1964: சாகித்திய அகாதமி விருது
1978: ஞானபீட விருது
1983: Golden Wreath Award
பாரத்பாரதி விருது
துணைவர் கபில வத்சையான்

வாழ்க்கை

இவர் உத்திரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் குஷிநகரில் 7 மார்ச் 1911 இல் பிறந்தவர்.[1] வீட்டிலேயே சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், வங்காள மொழி ஆகியவற்றையும், புராண இதிகாசங்களையும் கற்றார். இவரது தந்தையின் விருப்பத்தின்படி பிறமத நூல்களையும் கற்றார். இவரது இளமைப்பருவம் நாளந்தா, உடுப்பி, சென்னை,ஸ்ரீநகர், போன்ற இடங்களில் கழிந்தது.

கல்வி

சென்னை கிறித்துவக் கல்லூரியில் இண்டர் மீடியட் படித்தார். லாகூர் பார்மன் கிருத்தவக் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்துவிட்டு, எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கச் சேர்ந்தார். ஆனால் பகத்சிங், சந்திரசேகர ஆசாத், சுகதேவ், யஷ்பாலுடன் தலைமறைவாக இருந்து விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்வியைத் தொடர இயலவில்லை.

இலக்கிய ஆர்வம்

பலமுறை சிறைசென்றார்; வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது தத்துவம், அரசியல், பொருளாதாரம், சட்டம் தொடர்பான புத்தகங்களும், பல மொழிகளிலும் பிரபலமானவர்களின் படைப்புகளையும் படித்தார். இதனால் இவருக்கு இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. கவிதைகள் எழுதத் துவங்கினார். பின்னர் இவரது கவிதைத் தொகுப்புகள், கதைகள் வெளிவரத் துவங்கின. சிறை அனுபவங்கள், சொந்தவாழ்க்கைத் துயரங்கள், மகிழ்ச்சி, சமூகம், நாடு ஆகியவையே பெரும்பாலும் இவரது படைப்புகளின் கருவாக இருந்தது.

பணிகள்

விடுதலைக்குப் பிறகு அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். உள்நாட்டிலும், அயல் நாட்டிலும் ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், இராஜஸ்தானின் ஜோத்பூர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இதழ் பணிகள்

டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் தினமன் இந்தி வார இதழின் நிறுவன ஆசிரியர்,[2] நவபாரத் டைம்ஸ் என்ற இந்தி நாளிதழின் முதன்மை ஆசிரியர், ஜெயபிரகாஷ் நாராயணனின் எவ்ரிமேன்ஸ் வீக்லி இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

எழுத்துப் பணிகள்

அக்ஞேய (புரிதலுக்கு அப்பாற்பட்ட) என்ற புனைப் பெயரில் எழுதி புகழ்பெற்றார். நவீன இந்தி இலக்கியத்தில் புதுக்கவிதையைக் கொண்டுவந்தார். இவரது 30 கவிதைத் தொகுப்புகளும், 9 புதினங்களும், ஏராமான சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உத்தர் பிரியதர்ஷினி என்ற நாடகம், ஏராளமான பயணக்கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், நினைவுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தி மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். உலகின் தலைசிறந்த ஆக்கங்களை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

விருதுகள்

  • 1964இல் சாகித்திய அகடாமி விருது.
  • 1978இல் ஞானபீட விருது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=அக்ஞேய&oldid=19031" இருந்து மீள்விக்கப்பட்டது