அகளங்கன்

அகளங்கன்
Akalankan.jpg
பிறப்பு நா. தர்மராசா
வவுனியா,
பம்பைமடு
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்


அகளங்கன் வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு என்ற சிறுகிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. 1970களில் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் 2005 வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.

கல்வியும் கலை ஆர்வமும்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற காலத்திலேயே கலை இலக்கியச் செயற்பாடுகளில் நாட்டம் ஏற்பட்டது. வில்லுப்பாட்டு, பேச்சு முதலானவற்றிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபடத் தொடங்கினார். பின் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் க.பொ.த. உயர் தரம் கற்கும் பொழுது கவியரங்குகளில் பங்குபற்றும் வாய்ப்பும் கிட்டியது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, பேச்சு ஆகிய துறைகளில் ஈடுபட்டார்.

படைப்புத்துறையில்

கணித விஞ்ஞானத்துறையில் கற்று அத்துறையில் ஆசிரியப்பணி புரிந்தபோதும், சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில் சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி. சிவஞானசுந்தரம் அவர்களின் ஆலோசனையின்படி "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார்.தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.

வானொலி, தொலைக்காட்சியில்

வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கியவர். எழுபதுகளின் பிற்பகுதியிலேயே இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார்.

எழுதிய நூல்கள் பற்றி

இவரின் ஜின்னாவின் "இரட்டைக்காப்பிய ஆய்வு" என்ற நூல் தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீபியால் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள் ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. வாலி ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணைப்பாடநூலாக பயன்படுகின்றது. ஏற்கனவே வெளியிடப்பட்ட இவரது 30 நூல்களோடு, - கம்பனில் நான்- கட்டுரைகள்,`தமிழர்- கட்டுரைகள்,`பாரதியாரும் பாவையரும்'-ஆய்வு ஆகிய மூன்று நூல்கள் அச்சில் உள்ளன, அவற்றை விரைவில் வெளியிடவுள்ளார்.

வெளிவந்த நூல்கள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.

கலை, இலக்கியப்பணிக்கு கிடைத்த கெளரவங்கள்

பட்டங்கள்

  • காவியமாமணி, வவுனியா இந்துமாமன்றம் 1990
  • தமிழ்மணி இந்துகலாசார அமைச்சு 1993
  • திருநெறிய தமிழ் வேந்தர், யாழ் திருநெறிய தமிழ்ச்சங்கம் 1995
  • கவிமாமணி, யாழ் மெய்கண்டார் ஆதீனம் 1997
  • தமிழறிஞர், கொழும்பு தமிழ்ச் சங்கம் 1998
  • பல்கலைஎழில், வவுனியா நகர சபை 1998
  • புராணபடன புகழ்தகை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 1999
  • புராணபடன வித்தகர், அகில இலங்கை கச்சியப்பர் கழகம் 1999
  • வாகீசகலாநிதி, கொழும்பு ஐயப்பசுவாமிகள் பீடம் 2001
  • சிவனருட் செல்வர், சிவபுரம் சிவன் கோவில் 2002
  • தமிழியல் வாரிதி, சுதுமலை சிவன் கோவிலில் 07-11-2022[1]

விருதுகள்

  • தேசிய சாகித்திய மண்டல விருது (அன்றில் பறவைகள், நாடக நூல், 1995)
  • வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது (இலக்கிய நாடகங்கள், 1994)
  • வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது (அகளங்கன் கவிதைகள், 1996)
  • வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது (கலை இலக்கியப் பணிக்காக, 2000)
  • விபுலாநந்த படைப்பிலக்கிய விருது , 2017)[2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அகளங்கன்&oldid=1897" இருந்து மீள்விக்கப்பட்டது