அகத்திணை

அகத்திணை என்பது உலகியல் வழக்கத்துக்கும், நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம்.

பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன

இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது.

அகத்திணை என்பது நாடக வழக்கிலும்,உலகியல் வழக்கிலும் உள்ள செய்திகளைக் கூறும். [1] இதில் யாருடைய பெயரையும் சுட்டிக் கூறும் பழக்கம் இல்லை. [2] இவற்றில் தமிழரின் வாழ்க்கைப் பாங்குகளும், பண்புகளும் இழையோடிக் கிடக்கும்.

அகத்திணை மாந்தர் அகப்பொருளின் உறுப்பினர்கள்.

அகத்திணைப் பிரிவுகள்

தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது. இவை,

  1. கைக்கிளை
  2. குறிஞ்சித் திணை
  3. பாலைத் திணை
  4. முல்லைத் திணை
  5. மருதத் திணை
  6. நெய்தல் திணை
  7. பெருந்திணை

என்பனவாகும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும். இதனை விளக்கும் வாய்பாட்டுப் பாடல்

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கம் அளி ஊடல் அணி மருதம் - நோக்கு ஒன்றி
இல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல்
புல்லும் கவிமுறைக்கு ஒப்பு

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் - தொல்காப்பியம், அகத்திணையியல் 56
  2. மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர். தொல்காப்பியம், அகத்திணையியல் 57
"https://tamilar.wiki/index.php?title=அகத்திணை&oldid=14133" இருந்து மீள்விக்கப்பட்டது