மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் |
---|---|
பிறந்ததிகதி | 11 சூலை 1933 மூளாய் யாழ்ப்பாணம் |
இறப்பு | 9 மார்ச் 2016 லண்டன் |
மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் [புகைப்படத்திற்கு நன்றி vvthistory.com ] (11 சூலை 1933 - 9 மார்ச் 2016[1]) ஈழத்து இசைக் கலைஞரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூளாயை[2] பிறப்பிடமாகக் கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரின் தந்தையார் பெயர் வல்லிபுரம்.[3] இவர் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக விளங்கிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை 1954 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.[4] இவர்களுக்கு காண்டீபன், பகீரதன் என்னும் இரு மகன்மார் உள்ளனர்.[1] 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்டதைத்[5] தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் புலம்பெயர்ந்தார்.[6] இலண்டன் நகரில் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். தனது 82 ஆம் வயதில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி காலமானார்.[1]
கல்வி
மங்கையர்க்கரசி தனது இசைத்துறைக் கற்கையை இராமநாதன் கல்லூரியில் மேற்கொண்டு கர்நாடக இசையிலும் நாடகவியலிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
1950 காலப்பகுதியில் இருந்து 1980 களின் இறுதிவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும் பின்னர் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பிலும் அரசியல் செயற்பாடுகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு முன்னணி தமிழ்ப் பெண் அரசியல் செயற்பாட்டாளராக விளங்கினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி பொதுச் செயலாளராகவும் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மகளிர் பேரவைச் செயலாளராகவும் பணிபுரிந்தார்.[7] அரசியல் கூட்டங்களில் சிறந்த உரையாளராகவும் விடுதலை இயக்கப் பாடகராகவும் விளங்கினார்.[4]
சிறீ எதிர்ப்புப் போராட்டம்
1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்த சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வாகனங்களில் தமிழ் இலக்கத் தகடுகளைப் பொறிப்பதிலும் கடையைடைப்புச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டார்.[8]
1958 ஆம் ஆண்டு பேருந்து வண்டிகளிலும் பேருந்துத் தரிப்பு நிலையங்களிலும் சிங்கள சிறீயை அழித்துத் தமிழ்ச் சிறீயை பொறிக்கும் போராடங்களில் ஏனைய தமிழரசுக் கட்சிப் பெண் செயற்பாட்டாளர்களுடன் ஈடுபட்டார். இதன் விளைவாக, சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.[8][9]
சத்தியாக்கிரகப் போராட்டம்
1961 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியால் மொழியுரிமை வேண்டி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மங்கையர்க்கரசியின் பங்களிப்பு முக்கியமாக அமைகிறது.
1961 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் சா. ஜே. வே. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம், கந்தையா, நவரத்தினம் ஆகியோருடன் மங்கையர்க்கரசியும் மாதர் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டார். வரலாறு நெடிதும் மக்கள் விடுதலை மற்றும் உரிமைப் போராட்டங்களில் இசையும் பாடல்களும் முக்கிய பங்காற்றியுள்ளன. இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மங்கையர்க்கரசி பாடல்களைப் பாட சத்தியாக்கிரகிகள் அவருடன் இணைந்து பாடினர்.[10][11]
சத்தியாக்கிரகத்தின் முதல் இரண்டு நாட்களும் அதனை நிறுத்தும் நோக்குடன் பொலிசார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களாக விளங்கிய வி. தர்மலிங்கம், அமிர்தலிங்கம், வீ. ஏ. கந்தையா, கே. திருநாவுக்கரசு, நாகநாதன் உட்பட 52 சத்தியாகிரகிகள் காயமடைந்தனர்.
சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூன்றாவது நாள் பெப்ரவரி 22 ஆம் திகதி, மங்கையர்க்கரசி 500 க்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்டி, யாழ்ப்பாணக் கச்சேரி நுழைவாயிலுக்கு முன்னே அமர்ந்து இப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தார். இக்குழுவினர் இந்து, கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சமயப் பாடல்களைப் பாடினர் என ரி. சபாரத்தினம் பதிவு செய்துள்ளார்.[10]
எல்லாம் தமிழ் இயக்கம்
1963 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசு கட்சியால் முன்னெடுக்கப்பட்ட எல்லாம் தமிழ் இயக்கத்திலும் மங்கையர்க்கரசி முன்னின்று செயற்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தபால் நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்திலும் அரச மந்திரிமார் வருகைக்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திலும் யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கு முன்பாக நடைபெற்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார். தந்தை செல்வாவின் பாதயாத்திரையிலும் கலந்து கொண்டார். சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்களை உடனே விடுவிக்கக் கோரி யாழ்ப்பாண உயர்நீதிமன்றம் முன்பு தமிழரசுக் கட்சித் தலைவர்களுடன் ஒருநாள் உண்ணா நோன்பு இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்". 2016-03-09. https://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160309_mangayarkarasi.
- ↑ D. B. S., Jeyaraj (March 12, 2016). "The Tamil Woman Politician Whom Most Sinhalese Loved to Hate". https://www.dailymirror.lk/dbs-jeyaraj-column/THE-TAMIL-WOMAN-POLITICIAN-WHOM-MOST-SINHALESE-LOVED-TO-HATE/192-106771.
- ↑ Arumugam, S (1997). A Dictionary of Biography of Ceylon Tamils. London. பக். 6
- ↑ 4.0 4.1 "Mangayarkarasi Amirthalingam - Music and Politics". 2013. https://tamilgenerations.rota.org.uk/mangayarkarasi-amirthalingam/.
- ↑ Pathirana, Saroj. "Emotional homecoming after 21 years for Sri Lanka widow". https://www.bbc.com/news/world-south-asia-11317430.
- ↑ "அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்". 2016-03-09. http://www.tamilmurasuaustralia.com/2016/03/blog-post_71.html.
- ↑ அமிர்தலிங்கம், பகீரதன் (2016). சென்று வாருங்கள் என் தாயே. லண்டன் தமிழர் தகவல், மார்ச் 2016 பக். 10-11.
- ↑ 8.0 8.1 அமிர்தலிங்கம், மங்கையர்க்கரசி (2000). பகிர்கின்ற செந்தமிழின் பழிநீக்குவோம். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1949-1974. சென்னை: மணிமேகலைப் பிரசுரம். பக். 430-436.
- ↑ Satkunanathan, Ambika, Whose Nation? Power, Agency, Gender and Tamil Nationalism (December 21, 2012). Sri Lankan Republic at 40: Reflections on Constitutional History, Theory and Practice, A. Welikala, ed., Centre for Policy Alternatives, 2012
- ↑ 10.0 10.1 Sabaratnam, T (1996). The Murder of a Moderate. Dehiwala: Nivetha Publishers. பக். 121.
- ↑ D. B. S., Jeyaraj (August 26, 2020). "Life and times of dynamic Tamil leader Appapillai Amirthalingam". https://www.ft.lk/Columnists/Life-and-times-of-dynamic-Tamil-leader-Appapillai-Amirthalingam/4-705108.