பெருந்தலைச்சாத்தனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெருந்தலைச் சாத்தனார் சங்ககாலப் புலவர். இவரது தலை சற்றுப் பெரிதாகக் காணப்பட்டதால் இந்தச் சாத்தனாரைப் பெருந்தலைச்சாத்தனார் என்று குறிப்பிடலாயினர்.

இவரது பாடல்கள் ஒன்பது சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை:
அகநானூறு 13, 224, 262,
புறநானூறு 151, 164, 165, 205, 209, 294.

அரசர்களைப் பாடியது

குமணன்

இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தாரை

புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீரக்கோவை ஆரத் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. தழுவாமைக்குக் காரணம் அவரே கூறுகிறார். நன்னன் மருகன் என்பதால் இளவிச்சிக்கோவும் தழுவத் தகுந்தவனாம். என்றாலும் அவனது அண்ணன் விச்சிக்கோ புலவரைப் பேணாததால் இளவிச்சிக்கோவைத் தழுவவில்லையாம்.[1]

கடியநெடுவேட்டுவன்

கொடைக்கானல், கோடைமலைஅரசன் கடியநெடுவேட்டுவன். தன் நாயுடன் இவன் வேட்டைக்குச் செல்லும்போது கண்டு புலவர் இவனைப் பாடினார். யானைப் பரிசில் பெறாமல் திரும்பமாட்டேன் என்று அவனிடம் இவர் அடம்பிடிக்கிறார். அன்பு இல்லாமல் மூவேந்தரே கொடுத்தாலும் வாங்கமாட்டேன். அன்போடு கொடு என்கிறார்.[2]

மூவன்

மூவன் நெல்வளம் மிக்க ஊரை ஆண்ட அரசன். இவன் போரைப் பெரிதும் விரும்புபவனாம்.
பழம் தேடிச் சென்ற வௌவால் மரத்தில் பழம் இல்லாமையால் வறிது மீள்வது போல இவனிடம் பரிசில் பெறாமல் இப் புலவர் வறிது மீண்டாராம். அதனால் "நம்முள் குறுநணி காண்குவதாக!" என்று சாபம் இடுகிறார்.[3]

தானைமறம்

போர் நடந்தகொண்டிருக்கிறது. யார் நம் படையினர், யார் பகைவர் என்று தெரியவில்லை. அரசன் பாசறையின் ஒருபக்கம் இருக்கிறான். நாள்முறை வைத்துக்கொண்டு போரிடலாம் வாருங்கள் என்று அரசன் அழைப்பு விடுக்கிறான். யாரும் அரசனிடம் வரவில்லை. அன்றே போரிட விரும்புகின்றனர். இதுதான் தானைமறம்.[4]

அகத்திணைப் பாடல்கள்

பண்ணி

பண்ணி செய்த வேள்வியில் பெறுவது போல் விழுநிதி பெற்றாலும் தலைவன் பனிக்காலத்தில் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கமாட்டானாம். - தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.[5]

அரிசி முறுக்கு

பாக! ஆழித்தேரில் இவுளி பூட்டுக. தெறித்து நடக்கும் மான்கூட்டம் ஓடினாலும் பரவாயில்லை. பிழியும் மரக்குழலில் போட்ட அரிசிமுறுக்கு போல் நரநரவென்று தேர்க்கால் மணலில் விரைந்து செல்லத் தேரை ஓட்டுக. உயிரை மட்டும் துணையாகக் கொண்டு வாழ்ந்துவரும் என்னவளிடம் போய்ச் சேரவேண்டும். - தலைவன் கூறுகிறான்.[6]

இன்மையது இளிவு

வாடைக்காற்று வீசும்போது கருவிளைக் கொடிப்பூ மயில்பீலியின் கண்போல் பூத்து ஆடினாலும், ஊர் நிம்மதியாக உறங்கும் யாமத்தில் இவள்(தலைவி) மனப் பிணியோடு நடுங்கிக்கொண்டிருப்பாள். இப்படி இவளைப் படர் உழக்க விட்டுவிட்டு ஆள்வினைக்கு அகன்றால், அதுதான் வறுமையின் ஏளனம். - தோழி தலைவனுக்கு உரைத்தது.[7]

இவற்றையும் பார்க்கவும்

  • சீத்தலைச் சாத்தனார்

மேற்கோள் குறிப்பு

  1. புறநானூறு 151
  2. புறநானூறு 205
  3. புறநானூறு 209
  4. புறநானூறு 294
  5. அகநானூறு 13
  6. "ஐது நுணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரலிசை" அகநானூறு 224
  7. நற்றிணை 262
"https://tamilar.wiki/index.php?title=பெருந்தலைச்சாத்தனார்&oldid=11959" இருந்து மீள்விக்கப்பட்டது