பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வைணவக் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூரில் அமைந்துள்ளது. வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். தமிழில் பெரும்புலிவனம் என்றாகி பெரும்புலியூர் என்று மருவி பின்னர் பெரம்பலூர் என்று மாறியதாகக் கூறுவர். [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக மதனகோபால சுவாமி உள்ளார். இறைவி மரகதவல்லித் தாயார் ஆவார். தாயார் தனி சன்னதியில் வலப்புறத்தில் காணப்படுகிறார். புளியங்குளம் இக்கோயிலின் தீர்த்தமாக உள்ளது. கோயிலின் மரங்கள் நந்தியாவட்டை மற்றும் வில்வம் ஆகும். [1]

அமைப்பு

ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு முன்பாக கருடஸ்தம்பத்தில் அனுமார் காணப்படுகிறார். பலி பீடம், உள்ளது. முகப்பு மண்டபத்தை அடுத்து ஜெய, விஜயர்கள் உள்ளனர். தும்பிக்கை ஆழ்வார் தொடங்கி அனைத்து ஆழ்வார்களும் காணப்படுகின்றனர். ஹயக்ரீவர், பாமா ருக்மணியுடன் வேணுகோபாலர், நரசிம்மர், ஆண்டாள், தன்வந்திரி, ஸ்ரீனிவாசர், அலமேலுமங்கைத் தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கோதண்டராமர், கஜலட்சுமி, கூத்தனூர் சரசுவதி ஆகியோர் உள்ளனர். அனுமார் சன்னதியின் மேல் அவரது தந்தையான வாயுவின் வாகனமான மான் உள்ளது. வியாக்ரபாதர், பஞ்ச பாண்டவர் சன்னதிகள் உள்ளன. புலி வடிவில் வலம் வந்த வியாக்ர ரிஷி புலிக்காலுடன் விமானத்தில் சுதை வடிவிலும், சாபம் நீங்கிய நிலையில் கற்சிலையாக திருச்சுற்றிலும் உள்ளார். வியாக்ர முனிவர் துர்வாசரின் சீடர் ஆவார். ஒரு முறை கவனக்குறைவால் தன் குருவின் கமண்டலத்திலிருந்து நீரை அவர் தட்டி விடவே, துர்வாசர் அவரை புலியாக மாறும்படி சபித்தார். அதற்கான விமோசனத்தைக் கேட்டபோது பஞ்ச பாண்டவர்கள் அப்பகுதிக்கு வரும்போது பீமனின் கதையால் அடிபட்டு சாபம் நிவர்த்தியாகும் என்றார். பின்னர் அவ்வாறே நடைபெற்றது. [1]

திருவிழாக்கள்

பிரம்மோற்சவம், ராம நவமி, பங்குனி உத்திரம், கிருஷ்ண ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, நவராத்திரி, கார்த்திகை, திருவாதிரை, மாசி மகம் உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்