பில்ஹணன் (திரைப்படம்)
பில்ஹணன் | |
---|---|
'பேசும் படம்' மார்ச் 1948 விளம்பரம் | |
இயக்கம் | கே. வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | கே. எஸ். பிரதர்ஸ் சேலம் சண்முகா பிலிம்ஸ் |
கதை | ஏ. எஸ். ஏ. சாமி |
நடிப்பு | தி. க. சண்முகம் தி. க. பகவதி டி. என். சிவதாணு எம். எஸ். திரௌபதி ராஜம் பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | ஏப்ரல் 23, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 12435 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பில்ஹணன் என்பது 1948 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி எழுதிய இப்படத்தை கே. வி. சீனிவாசன் இயக்கினார். இப்படத்தை டி. கே. எஸ் பிரதர்சின் டி. கே. சண்முகம் தயாரித்தார். இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கதை
மன்னன் தன் மகள் யாமினிக்கு கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியரைத் தேடுகிறான். இறுதியில் கவிஞர் பில்ஹானனை ஆசிரியராக நியமிக்கிறான். இருவருக்கும் இடையே காதல் எதுவும் ஏற்படாமல் தடுக்க, அரசன் யாமினியிடம் பில்ஹணன் ஒரு பார்வையற்றவர் என்றும், பில்ஹணனிடம் யாமினி அழகில்லாதவள் என்றும் கூறுகிறான். ஒருவரையொருவர் பார்க்க இயலாதபடி இருவருக்குமிடையில் திரை ஒன்றைத் தொங்கவிடுகிறான். ஒரு நாள் இரவு, முழு நிலவைக் கண்டு மகிழ்ந்த பில்ஹணன், நிலவை வருணித்து ஒரு கவிதையைப் பாடுகிறான். பார்வையற்ற ஒருவரால் எப்படி இவ்வளவு அழகாக நிலவைப் பற்றிப் பாடமுடியும் என்று யோசித்த யாமினி, திரைச்சீலையை விலக்குகிறாள். பில்ஹணனின் அழகில் மயங்குகிறாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். மன்னன் அவர்களின் காதலை எதிர்க்கிறான், பில்ஹணனும் யாமினியும் அரசனின் பேச்சைக் கேட்க மறுக்கின்றனர். இதனால் அரசன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கிறான். மன்னனின் நண்பர்களும் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் உண்மையான அன்பின் ஆற்றலைப் புரிந்துகொண்ட, அரசன் பில்ஹணனையும் யாமினியையும் மன்னித்து அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறான்.[1]
தயாரிப்பு
ஏ. எஸ். ஏ. சாமி, காஷ்மீரி கவிஞர் பில்ஹணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பில்ஹணன் என்ற தமிழ் நாடகத்தை தனது கல்லூரி ஆண்டு விழாவுக்காக எழுதி தயாரித்தார். நாடகம் வெற்றியடைந்தது, விரைவில் அவர் அதை அகில இந்திய வானொலியின் திருச்சிராப்பள்ளி நிலையத்துக்கு அனுப்பிவைத்தார். அதை வானொலி நிலையம் ஏற்றுக் கொண்டது. அவர் அதை ஒரு வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். எம். கே. தியாகராஜ பாகவதர் முதன்மைப் கதாபாத்திரத்தில் பங்கேற்றதுடன் நாடகம் ஒலிபரப்பாகி, வானொலி நாடகமும் வெற்றி பெற்றது. நாடகத்தின் உரிமையை டி. கே. எஸ் பிரதர்சின் டி. கே. சண்முகம் தன் நாடகக் குழுவுக்காக வாங்கினார். பின்னர் அவர் அதை அதே பெயரில் ஒரு திரைப்படமாக படமாக்கினார். மேலும் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்தார். எம். எஸ். திரௌபதி இளவரசி யாமினியாகவும், டி. கே. பகவதி அவளது தந்தை அரசனாகவும் நடித்துள்ளனர். கே. வி. சீனிவாசன் இயக்கிய திரைப்படத்திற்கான திரைக்கதையை சாமி மீண்டும் எழுதினார். கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.[1]
பாடல்
டி. ஏ. கல்யாணம் இசையமைத்த இப்படத்தின் பாடல்களுக்கு வரிகளை பாஸ்கரதாஸ் எழுதினார். டி. கே. எஸ் சகோதரர்கள் பாடிய "தூண்டிர் புழுவினைபோல்" பாடலில், சுப்பிரமணிய பாரதியின் பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டது. பாரதியின் படைப்புகள் அனைத்திற்கும் காப்புரிமை பெற்றிருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன், பதிப்புரிமை மீறல் தொடர்பாக டிகேஎஸ் சகோதரர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.[2]
வெளியீடும் வரவேற்பும்
பில்ஹணன் 1948 ஏப்ரல் 23 அன்று வெளியானது.[3] திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றின்ப்படி, படம் சராசரி வெற்றியைப் பெற்றது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Randor Guy (16 February 2013). "BLAST FROM THE PAST: Bilhanan 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005072313/http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece.
- ↑ Randor Guy (2016). Memories of Madras: Its Movies, Musicians & Men of Letters. Creative Workshop. பக். 316. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-928961-7-5.
- ↑ Film News Anandan (2004) (in Tamil). Saadhanaigal Padaitha thamizh thiraipada varalaru. Sivagami Publications. http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails22.asp.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் உயிர்க் காதலின் ரதி உலகம் - இந்தப் படத்தில் டி. கே. சண்முகம், எம். எஸ். திரௌபதி ஆகியோர் பாடிய ஒரு பாடல்.