பகுபதம் (இலக்கணம்)
Jump to navigation
Jump to search
பதம் என்பது சொல் என்ற பொருளைத் தருகிறது. பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச் சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக் காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்.[1]
வகைகள்
- பெயர் பகுபதம்
- வினை பகுபதம்
என இரு வகைப்படும்.
பெயர் பகுபதம் [2]
- பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர் பகுபதம்
- பொன்னன், இனியன், செல்வந்தன். போன்றவை.
- இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர் பகுபதம்
- நாடன், மதுரையான், கும்பகோணத்தான். போன்றவை
- காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர் பகுபதம்
- ஆதிரையான், வேனிலான், இரவோன், பகலோன், வெய்யிலோன் போன்றவை.
- சினையைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர் பகுபதம்
- கண்ணன், திண்தோளன், சீத்தலையான் போன்றவை.
- குணத்தைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர் பகுபதம்
- கரியன், செங்கணான், நெட்டையன், குட்டையன் போன்றன.
- தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர் பகுபதம்
- தச்சன், கொல்லன், கருமான் போன்றன.
வினை பகுபதம்
தெரிநிலை வினைச்சொற்கள், குறிப்பு வினைச்சொற்கள், காலத்தைக் குறிப்பாகவோ அல்லது வெளிப்படையாகவோ காட்டும் வினைச் சொற்கள்( வினையாலணையும் பெயர்கள்) ஆகியன வினைப் பகுபதங்கள் ஆகும்
எடுத்துக்காட்டு:
- நடந்தான் , நடவான்.- தெரிநிலை வினை பகுபதம்
- பொன்னன், அகத்தான் -குறிப்பு வினை பகுபதம்
- நடந்தவன், நடவாதவன் - தெரிநிலை (வினையாலணையும் பெயர்)
- பொன்னவன், இல்லாதவன் -குறிப்பு (வினையாலணையும் பெயர்)
பகுபத எழுத்து எல்லைகள்
பகுபதங்களுக்கு இரண்டு எழுத்து முதல் ஒன்பது எழுத்துகள் வரை எல்லைகளாக அமையும்.[3]
- எடுத்துக்காட்டு.
- கூனி (2 எழுத்து)
- கூனன் (3 எழுத்து)
- அறிஞன் (4 எழுத்து)
- பொருப்பன் (5 எழுத்து)
- அம்பலவன் (6 எழுத்து)
- அரங்கத்தான் (7 எழுத்து)
- உத்திராடத்தான் (8 எழுத்து)
- உத்திரட்டாதியான் (9 எழுத்து)
மேற்கோள்
- நன்னூல் விருத்தியுரை- கழக வெளியீடு-1971