நந்தவனத்தில் ஓர் ஆண்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடலைப் பாடியவர் கடுவெளிச் சித்தர் ஆவார். நாட்டுப்புறத்தில் இது பாடப்படுவதால் இதனை நாட்டுப்புற பாடல் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.

பாடல்


"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"



"நல்ல வழிதனை நாடு - எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"

- கடுவெளிச் சித்தர்

விளக்கம்

மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர் (சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்படுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.

சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.

தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியைப் போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாகப் பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)

மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளைத் தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.

தத்துவம்

சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலைத் தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை நகைச்சுவைப் பாடலைப் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.

மூலம்

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=நந்தவனத்தில்_ஓர்_ஆண்டி&oldid=27875" இருந்து மீள்விக்கப்பட்டது