தொல்காப்பியம் சுட்டும் அளவைப்பெயர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சொல்லோடு சொல் புணரும்போது அளவைப் பெயர்கள் எவ்வாறு புணரும் என்பதை விளக்கும்போது தொல்காப்பியம் அளவைப் பெயர்களை அளவுப்பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என மூன்றாகப் பகுத்துக்கொள்கிறது. அளவு என்பதில் நீட்டலளவும், பருமனளவும் அடங்கும். நீள அகல உயரங்களை அளப்பது நீட்டல் அளவு. முகந்து அல்லது பெய்து நிறைகட்டியும், நிறுத்துக்கட்டியும் அளப்பது நிறையளவு. முழுமையான பொருள்களை எண்ணுவதும், முழுமைப்பொருளின் சிதைவைப் பகுத்து எண்ணுவதும் எண்-அளவு. [1]

தொல்காப்பியம் குறிப்பிடும் அளவைப்பெயர்கள்

கலம் [2], பனை, கா, [3], பதக்கு, தூணி [4], நாழி, உரி, நாடுரி [5]

தொல்காப்பியம் சுட்டிக்காட்டும் அளவைப் பெயர்கள்

அளவை, நிறை ஆகியவற்றைக் குறிக்கும் சொறகள் ஒன்பது எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு வரும் என்பது தொல்காப்பிய வரையறை. தொல்காப்பியம் தொகைமரபு 28 அவை க, ச, த, ப, ந, ம, வ, அ, உ என்பன.

இவற்றிற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டும் பெயர்கள்

கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு – இவை அளவுப்பெயர்கள்
கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை - இவை நிறைப்பெயர்கள்.

இவற்றையும் பிற நூற்பாக்களுக்குக் காட்டப்பட்டுள்ள மேற்கோள் அளவைப் பெயர்களையும் தொகுத்து அகர வரிசைப்படுத்திக் காணும்போது இளம்பூரணரின் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த அளவைப்பெயர்கள் இவை என உணரமுடிகிறது. [6]

அகல்
அந்தை (நிறை)
இதழ் (நில-அளவு)
உரி
உழக்கு
ஐயவி (கடுகு அளவு)
ஐயவி (நிறை)
கஃசு (நிறை)
கலம்
கழஞ்சு (நிறை)
கா (நிறை)
கொள் (நிறை)
சாடி,
சீரகம் (நிறை)
தூணி
தூதை,
தொடி (நிறை)
நாடுரி
நாழி,
நிறை (நிறை),
பதக்கு
பலம் (நிறை)
பனை
பானை,
மண்டை,
மா (நிறை),
மா (நில-அளவு)
முழம்
வட்டி,
வரை (நிறை),
வேலி (நில-அளவு)

எண்ணுப்பெயர்

முழு எண்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழ், எட்டு, ஒன்பது (தொண்டு), பத்து
பதினொன்று முதலானவை
இருபது, முப்பது முதலானவை
நூறு, இதன் தொடர்ச்சி
ஆயிரம் ... நூறாயிரம்
அல்பெயர் எண் ஐ, அம், பல் என முடிவன (தாமரை, வெள்ளம், ஆம்பல்)
(கோடி) தொல்காப்பியத்தில் இல்லை. திருக்குறளில் வருகிறது. [7]

பின்னோக்கிச் செல்லும் பின்னம்

அரை
கால்
அரைக்கால்
முந்திரிகை
காணி

அடிக்குறிப்பு

  1. அளவும் நிறையும் எண்ணும் வரு வழி
    நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும்
    கடி நிலை இன்றே ஆசிரியர்க்க. புள்ளி மயங்கியல் 94
  2. அத்து இடை வரூஉம் கலம் என் அளவே. தொகைமரபு 26
  3. பனை என் அளவும் கா என் நிறையும் நினையும் காலை இன்னொடு சிவணும். தொகைமரபு 27
  4. பதக்கு முன் வரினே தூணிக் கிளவி முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே. உயிர் மயங்கியல் 37
  5. உரி வரு காலை நாழிக் கிளவி
    இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே
    டகாரம் ஒற்றும் ஆவயினான. - உயிர் மயங்கியல் 38
  6. புணரியல் 19
    தொகைமரபு 22, 23, 24, 25
    புள்ளி மயங்கியல் 24, 94
    குற்றியலுகரப் புணரியல் 31, 68, 71

  7. நூறாயிரம் - திருக்குறள் 337, 377, 639, 954, 1005
    கோடி மடங்கு - திருக்குறள் 816, 817, 1061