திருமூல நாயனார் ஞானம்
திருமூல நாயனார் ஞானம் என்பது ஒரு சிறிய நூல். இது சித்தர் பாடல்கள் என்னும் தொகுப்பு நூலில் உள்ளது. [1] திருமந்திரம் பாடிய திருமூலர் வேறு. இவர் வேறு. ஞானம் பாடிவர் பிற்காலச் சித்தர். திருமந்திரம் பாடியவர் முற்காலச் சித்தர் திருமூல நாயனார் ஞானம் என்னும் நூலில் 11 பாடல்கள் மட்டுமே உள்ளன. அவை விருத்தம் என்னும் யாப்பு வகையில் அமைந்த பாடல்கள். பதிப்பில் காணப்படும் பாடல்களில் சில மூன்று அடிகள் கொண்டுள்ளன. காரணம் விளங்கவில்லை. விருத்த யாப்பில் நான்கு அடிகள் இருக்கவேண்டும்.
பாடல் எடுத்துக்காட்டு
அடியாகி அண்டர் அண்டத்து அப்பால் ஆகி
அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலம் தன்னில்
முப்பொருளும் தானாகி முதலுமாகிப்
படியாய் முப்பாழற்றுப் படிக்கும் அப்பால்
படி கடந்த பரஞ்சோதிப் பதியும் ஆகி
அடியாகும் மூலம் அதே அகாரமாகி
அவன் அவளாய் நின்ற நிலை அணுவதாமே
- விளக்கம்
இறைவன் அண்டத்ததின் அடிவேராக இருக்கிறான்.
அண்டத்துக்கு அப்பாலும் அவனே இருக்கிறான்.
அகர எழுத்துப் பாதமாக இருக்கிறான்.
தோற்றம், வளர்ச்சி, அழிவு நிலைகளில் இருக்கும் முப்பொருளும் தனாகவே இருக்கிறான்.
முதல், முன்னேறும் படிகள், இருள் ஒளி இரண்டுமில்லா வெளி என்னும் மூன்று பாழ்நிலை வடிவங்களாகவும் இருக்கிறான்.
மூன்று பாழ்நிலை வடிவங்கள் இல்லாதவனாகவும் இருக்கிறான்.
மூன்று படிநிலைகளைக் கடந்த பரஞ்சோதி இருப்பாகவும் இருக்கிறான்.
அடி, மூலம் என்பவையே அகரம்.
அவன், அவள் என்னும் அணு நிலையில் இருக்கிறான்.
இது திருமூல நாயனார் காட்டும் ஞானம்.
மேற்கோள்
- ↑ சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 திருமூல நாயனார் ஞானம், நூல் பக்கம் 308