சேந்தம் பூதனார், சங்கப்புலவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சேந்தம் பூதனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 84, 207, குறுந்தொகை 90, 226, 247, நற்றிணை 69, 261 ஆகிய ஏழு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

புலவர் பெயர் விளக்கம்

சேந்தங்கண்ணனார், செங்கண்ணனார், செங்கணான் சேந்தன் என்னும் பெயர்கள் சிவபெருமானைக் குறிப்பவை. இவை இப்படி இருக்க, சேந்தங் கண்ணனார் என்னும் புலவர் "சேந்தனை சென்மோ" என்னும் தொடரைத் தங்கியிருந்துவிட்டுச் செல்க என்னும் பொருளில் கையாண்டுள்ளார். இக்காலத்தில் நண்பனைச் சேத்தாளி என்று குறிப்பிடுகிறோம். இவற்றிலிருந்து சேந்தன் என்னும் சொல்லுக்கு நண்பன் எனப் பொருள் கொள்வதே சிறப்பு எனத் தெரியவருகிறது. மற்றும், சேந்தம் என்பது ஊரின் பெயர் என்பது இத்தொடரில் தெளிவாகத் தெரியவருகிறது. சேந்தமங்கலம் என்னும் ஊரும் உள்ளது. இப்புலவர் அந்தச் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது பொருத்தமானது.

பாடல் தரும் செய்தி

இருநிம் கவினிய ஏமுறு காலை

மழை பொழிந்து நிலமெல்லாம் பாதுகாக்கப்பெற்றிருக்கும் காலம் கார்காலம். இந்தக் காலத்தில் அவள் சிற்றூரில் இருக்கிறாள். நான் பாசறையில் இருக்கிறேன் என்று தலைவன் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான்.

நெருப்புப் போன்ற கண்ணையுடைய பன்றி தூங்கும்போது முல்லைப்பூ அதன் முதுகு புதையும்படி கொட்டும் சிற்றூர் அவள் இருக்கும் ஊர்.

கோட்டை முற்றுகையின்போது பகையரசன் தரும் திறைப்பொருளைப் பெற்றுக்கொள்ளாமல் சினம் கொண்டு போரிடும் பாசறை அவன் இருப்பு.
(அகம் 84)

பெருஞ்செய் ஆடவர்

பெருஞ்செய் என்பது உப்பங்களம். உப்பங்கள ஆடவர் உப்பைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்வர். வழியில் உள்ள கூவல் பள்ளஙகளில் களிறு புரண்டெழுந்து செல்லும். அந்தக் கூவல் தண்ணீர் தெளிந்தபின் அந்த ஆடவர் அந்தத் தண்ணீரைக் குறைகுடமாக மொண்டு பருகுவர். தன் காதலனுடன் சென்ற என்மகள் அந்தத் தண்ணீரைப் பருகிக்கொண்டு சென்றளோ என்னவோ! அவள், நான் வள்ளத்தில் தேன் கலந்து தந்த பாலைப் பருக மறுத்தவள் ஆயிற்றே! - மகளை அவள் விரும்பியவனோடு போகவிட்ட செவிலி இவ்வாறு எண்ணி வெதும்புகிறாள்.
(அகம் 207)

எற்றோ வாழி தோழி

மிளகுக்கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் பெய்த மழைவெள்ளமும் ஆண்குரங்கு தொட்டவுடன் அறுந்து விழுந்த பலாப்பழமும் ஒன்றுசேர்ந்து வந்து நீர் உண்ணும் துறையே இனிக்கும் நாடன் அவன். அவன் வராததால் உன் தோள் வாடுகிறது. என்றாலும் சாலபோடு பொறுத்துக்கொள்கிறதே! இது எதனாலோ? - அவன் சிறைப்புறமாக அவளுக்குத் தோழி கூறியது (குறுந்தொகை 90)

குருகு

நன்றும் நல்லமன்

::"நன்று பெரிது ஆகும்" - தொல்காப்பியம் 826
பூப் போன்ற கண்ணும், வேய் போன்ற தோளும், பிறை போன்ற நுதலும் மிகவும் நல்லவை. எப்போது? தாழம்பூ குருகுப் பறவையைப் போல மலரும் சேர்ப்பனைக் காண்பதற்கு முன்னர் நல்லவை. கண்டபின் ... ?
குறுந்தொகை 226

கணிப் படூஉம் திறவோர்

ஒருவரைப் பார்த்து அவரது உறவினர்க்கு இன்னது நடக்கும் என்று கணித்துக் கூறும் திறவோர் சொன்னது உண்மையாகிவிட்டது. உறங்கும் யானைமீது வேங்கைப்பூ சொரியும் நாடன் மார்பை உனக்கு உரியதாக்கப்போகிறார்கள். - திருமணம் நடக்கப்போவதைத் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.
குறுந்தொகை 247

ஆள்வினைக்கு அகன்றோர்

::"ஐ வியப்பாகும்" - தொல்காப்பியம் 868
::"ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாதை"
மண்டிலம் மறைகிறது. பறவைகள் பார்ப்புக் குஞ்சுகளிடம் செல்கிறளன. இரலைமான் பிணையைத் தழுவுகிறது. முல்லைப்பூ வாயைத் திறக்கிறது. தோன்றிப் பூக்கள் புதரில் விளக்குக் போல் தோன்றுகின்றன. ஆனிரைகளின் மணியோசையும், கோவலரின் குழலோசையும் கேட்கின்றன. இப்படி வியப்புக்கு உரியதாக மாலைப்பொழுது இங்கு வருகிறது. இதுபோல அவர் போர்வினைக்காகச் சென்றுள்ள இடத்தில் வந்தால், நான் தாங்கிக்கொண்டிருப்பது போல அவரால் தாங்கமுடியாதே! என்று தலைவி கவலை கொள்கிறாள்.
தலைவனது போர்வினைப் பிரிவைத் தலைவி போற்றுகிறாள்.
நற்றிணை 69

படிமம்:Anaconda jaune 34.JPG
மாசுணம் என்னும் மலைப்பாம்பு

எருவை நறும்பூ

இரவில் மழை. மலைப்பாம்பு யானையை கெட்டியான மரத்தோடு சேர்த்து இறுக்குகிறது. இப்படிப்பட்ட வழியில் அவர் வந்தாலும் அந்த வழியில் மணக்கும் சந்தன மரங்கள் மிகுதி. அத்துடன் எருவைப் பூவும் மணம் கமழும்.

தலைவன் காத்திருக்கிறான். தோழி தலைவனைக் குறை கூறுகிறாள். தலைவி இப்பாடலில் அவனைக் குறையிலன் என்கிறாள்.
நற்றிணை 261