சுந்தரம் அன்பழகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சுந்தரம் (இயற்பெயர் அன்பழகன் இயக்கத்தினரால் சு என அழக்கப்பட்டவர்) என்பவர் தமிழ்நாடு விடுதலைப்படையின் ஒரு தலைவராவார்.[1]

வாழ்க்கை

சுந்தரம் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே நத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர். பொறியியலில் பட்டயப் படிப்பாளியான இவர், அரியலூரில் இருந்தபடி, முதலாளித்துவம், நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த ஒரு தமிழ் தேசியர் ஆவார்.

தமிழர் விடுதலைப்படை

1983களில் பொன்பரப்பி தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப்படையைத் தொடங்கியபோது அவரது ஆயுதப் போராட்டங்களுக்கு பல திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் சுந்தரம். ஆயுதப் போராட்டங்களுக்கு பொருள் சேர்ப்பதற்காக பொன்பரப்பி வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற தமிழரசன் 1987 இல் கொல்லப்பட்டார். இதன்பிறகு சுந்தரம் தமிழர் விடுதலைப் படையின் தலைவரானார்.

செயல்பாடுகள்

1998 இல் ஆண்டிமடம் காவல் நிலையத்தை தாக்கி அங்கிருந்த ஐந்து துப்பாக்கிகள், 150 தோட்டாக்கள், 7 கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை சுந்தரத்தின் படையினர் கொள்ளையடித்தனர்.

கைதும் தண்டனையும்

பெரம்பலூர் மாவட்ட எல்லையில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக தங்கியிருந்த ஏழுபேரை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர், கைதானவர்களில் சுந்தரமும் ஒருவர். சுந்தரத்தின்மீது, கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரத்துக்கு குண்டு வைத்தது, கடலூர் மாவட்டத்தின் புத்தூர், ஆண்டிமடம் ஆகிய காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடித்தது, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை தாக்கியது, விழுப்புரம் காந்தி சிலையை வெடிகுண்டால் தகர்த்தது, அதியமான் கோட்டை மின் கோபுரம் தகர்ப்பு என பல வழக்குகள் போடப்பட்டன.[2]

மரணம்

இதில் சில வழக்குகளுக்காக பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டு, 2010 இல் விடுதலையானார் சுந்தரம். விடுதலையானதும், அரியலூரிலேயே தங்கினார். அரியலூர் மாவட்டத்தில் சூழலியல் மாசில் ஈடுபடும் சிமென்ட் ஆலைகளுக்கு எதிராக போராட இளைஞர்களை திரட்டிவந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் 2017 சூன் 9 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சுந்தரம்_அன்பழகன்&oldid=24984" இருந்து மீள்விக்கப்பட்டது