கோகிலம் சுப்பையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோகிலம் சுப்பையா
கோகிலம் சுப்பையா
இயற்பெயர்/
அறியும் பெயர்
கோகிலம் சுப்பையா
பிறந்ததிகதி 1925
பிறந்தஇடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 2011
(அகவை 85–86)
கல்வி சிக்காகோ கலைக் கல்லூரி (முதுகலை)
அறியப்படுவது எழுத்தாளர், தொழிற்சங்கவாதி
துணைவர் எஸ். எம். சுப்பையா

கோகிலம் சுப்பையா (1925 – 2011) இலங்கையைச் சேர்ந்த தொழிற்சங்கவாதி, மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், புதின ஆசிரியர், ஓவியர், ஆசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் இந்தியாவில் திருச்சியில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையாவைத் திருமணம் செய்து இலங்கைக்குக் குடிபெயர்ந்தார். சிகாகோ கலைக் கல்லூரியில் (School of the Art Institute of Chicago) முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அதன் ஆசியக் கலை வரலாற்றுத் துறையில் ஆசிரியராக 1977 இல் பணிபுரிந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்திலும் தெற்காசியக் கற்கைநெறித் துறையில் தமிழ், திராவிட மொழியியல் ஆசிரியராகவும் பணியாற்றினார். 70களின் பிற்பகுதியில் தனது ஓவியக் கண்காட்சிகளை சிக்காகோ, மும்பாய், புதுதில்லி ஆகிய நகரங்களில் நடத்தியிருந்தார்.

தொழிற்சங்க ஈடுபாடு

இலங்கையில் சனநாயகத் தொழிலாளர் காங்கிரசின் மகளிர் அணித் தலைவியாக செயற்பட்டார். "மறுமலர்ச்சிப் பாதையில் மாதர்கள்" என்ற தலைப்பில் 1958 இல் 26 பக்கங்கள் கொண்ட ஒரு பிரசுரத்தை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மலையகப் பெண்களின் தனித்த முக்கியத்துவத்தைக் கோரினார்.

தூரத்துப் பச்சை புதினம்

1956-இல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே பேராசிரியர் கமில் சுவெலபில்லைச் சந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது தூரத்து பச்சை நாவலை எழுதத் தொடங்கியதாக கோகிலம் சுப்பையா குறிப்பிடுகிறார். மலையகத் தோட்டப் பெண் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டதால், அவர்களின் துயரங்களையும் வரலாற்றையும் எழுதத் தொடங்கினார். 1965-இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. வேலன் என்ற கூலித் தொழிலாளி தனது மனைவி, குழந்தைகளுடன் தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறும் கதையோடு தொடங்கும் தூரத்துப் பச்சை, மலையகத்தில் வாழ்ந்து மடிந்த ஐந்து தலைமுறைகளின் கதையைச் சொல்கிறது.

வெளி வந்த நூல்கள்

  • தூரத்துப் பச்சை - புதினம்
    • முதலாம் பதிப்பு (1964 தமிழ்ப் புத்தகாலயம், சென்னை)
    • இரண்டாம் பதிப்பு (1973, வீரகேசரி பிரசுரம், கொழும்பு)
    • மூன்றாம் பதிப்பு (2002, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை)
  • Mirage - தூரத்துப்பச்சை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (2006, வெளியீடு: Orient Black Swan)

பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோகிலம்_சுப்பையா&oldid=2266" இருந்து மீள்விக்கப்பட்டது