கே. சி. நடராஜா
கே. சி. நடராஜா (பிறப்பு: சூன் 19, 1918 கரவெட்டி, யாழ்ப்பாணம்) இலங்கையில் பிரபல குற்றவியல் சட்டத்தரணியாக விளங்கியவர். இவர் நைஜீரியா நாட்டின் சட்டமா அதிபராகவும், பெர்முடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதியரசராகவும் பணியாற்றியிருக்கிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் முதலியார் சின்னத்தம்பி என்பவருக்குப் பிறந்தவர் நடராசா. தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும் பயின்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் இலண்டன் சென்று கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டத்தையும், சட்டத்துறையில் பட்டத்தையும் பெற்றார். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதத்தில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். 1931 ஆம் ஆண்டில் நேரு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபொழுது, யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தின் வழியாக காரில் சென்றபொழுது, ஒரு பள்ளிகூடத்தின் ஆசிரியரும், மாணவர்களும் தன்னை மறித்து தனக்கு வரவேற்பு வார்த்தைகள் சொன்னதாகவும், பிரகாசமான முகத்துடன், கூர்ந்த கண்களுடன் ஒரு சிறுவன் முன்னே வந்து, கை குலுக்கி , 'நான் ஒருகாலும் தளர்ச்சியடையேன்' என்று சொன்னது தன் மனதில் ஆழப்பதிந்து விட்டது என்று எழுதியிருக்கிறார். அது கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியின் 13 வயது நிரம்பிய மாணவனான கே.சீ. நடராஜா தான். பின்னர் அவர் இக்கல்லூரியின் முகாமையாளராக பதவியேற்ற பொழுது இச்சம்பவம் சபையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உல்கப்புகழ்பெற்ற மகப்பேற்று மருத்துவ நிபுணரான சிவா சின்னத்தம்பி இவருடைய இளைய சகோதரியாவார்.
அரசியலில்
1952 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் இவர் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
வெளி இணைப்புக்கள்
- சண்டே ரைம்ஸ் ஆசிரியருக்கு கடிதம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- நேருவின் சுயசரிதத்தில் இருந்து பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)