கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்பது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தூது வகையைச் சார்ந்த சிற்றிலக்கிய நூல் ஆகும். 1728ல் நிலக்கோட்டை என்னும் சிற்றரசை ஆண்டுவந்த கூளப்பநாயக்கன் என்பவரே இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். அக்காலத்தில் வாழ்ந்த சுப்பிரதீப கவிராயர் என்பவரே இந்நூலின் ஆசிரியர். அக்காலத்துச் சிற்றரசர்களினதும், பாளையக்காரரினதும் ரசனைக்கு ஏற்ப, விரகம், காதல், காமம் ஆகியவற்றின் ஒரு கலவையாக இந்த நூல் அமைந்துள்ளது. இது ஒரு அகத் தூது நூல் ஆகும்.

அகத்தூது இலக்கியங்களில், தலைவனோ தலைவியோ மற்றவரிடம், விலங்குகள், பறவைகள், உயிரற்ற பொருட்கள், மனிதர்கள் ஆகியவற்றைத் தூதாக அனுப்புகின்றனர். விறலிவிடு தூது இலக்கியங்களில் விறலியர் எனப்படும் பாணர்குலப் பெண்கள் தூது செல்வதாகச் சொல்லப்பட்டிருக்கும். பொதுவான விறலிவிடு தூது இலக்கியங்களின் இலக்கணத்துக்கு ஏற்ப இந்நூலிலும் ஆண்மகன் சிற்றின்பம் துய்ப்பதற்காகத் தாசிகளை நாடிச்செல்வதும், அவர்களிடம் பொருள் முழுவதையும் இழந்து, அவமானப்படுவதும், பின்னர் மனைவியைச் சேரவேண்டி விறலியரை அவளிடம் தூது அனுப்புவதும், இறுதியில் அவன் குடும்பத்துடன் இன்புற்று வாழ்வதும் சொல்லப்படுகிறது.

இத்தகைய இலக்கியங்களில் காணப்படுவது போலவே இந்த நூலிலும் சிற்றின்ப ரசம் ததும்பும் பாடல்கள் காணப்படுகின்றன. அக்காலத்துத் தாசிப் பெண்களின் ஆடையணிகள் குறித்த விபரங்கள் காணப்படுகின்றன. அதே வேளை அக்காலத்துக் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என்பவை குறித்த தகவல்களையும் இந்நூலில் இருந்து ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்