கழாத்தலையார்
கழாத்தலையார் அல்லது கழாஅத்தலையார் எனக்குறிப்பிடப்படும இவர் சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இப்புலவர் தம் பாடல் ஒன்றில் தன் மகன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்து தன் தலையைக் கழுவாமல் இருந்த ஒருத்தியைக் குறிப்பிடுகியார். இவரது பெயர் தெரியாத நிலையில் இவரை இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' என்றனர்.[1][2] புறநானூற்றில் காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை.
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.[3]
கழாஅத்தலையார் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள்
திருப்போர்ப்புறம் போர் |
வெண்ணிப் போர் |
- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய இருவரும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் தம் படைகள் சாய்ந்த பின் இருவருமாகத் தனித்து நின்று போராடி இருவருமே மாய்ந்தனர்.[4] அந்தப் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்த சேரனை நேரில் கண்டு அவனது மார்பில் கிடந்த ஆரத்தைப் பரிசாக வழங்கும்படி இப் புலவர் கேட்கிறார்.[5]
- போர்க்களத்தில் கரிகாலன் தன் வலிமையை வெளிப்படுத்தி வேல் வீசியபோது, அது பெருஞ்சேரலாதனின், முதுகு வழியே பாய்ந்து சென்றது. இதற்காக வருந்திய சேரன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.[6]
- வீரத் தாய்மார் போர்களம் சென்று காண்பது வழக்கம். போர்களத்தில் சாய்ந்து கிடந்த மகனை அவது தாய் தழுவ விடாமல் பருந்துகள் மொய்த்துக்கொண்டிருந்தன.[7] ஊரார் பொற்கலத்தில் கள் வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது போருக்கு அழைக்கும் ஓசை கேட்டது. அங்கிருந்த மூதிலாள் என்னும் மறக்குலப் பெண் (போருக்குச் செல்லத்) தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கும்படி வேண்டினாள்.[8]
குறிப்புகள்
- ↑
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே (புறநானூறு 270) - ↑ இவர் கழாஅத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராதலால் இவர் இப் பெயரிட்டு அழைக்கப்பட்டார் என்பது கற்பனை உத்தி.
- ↑ செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 1995, மறுபதிப்பு ஜூலை 2002
- ↑
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே (புறநானூறு 62) - ↑
பாடி வந்தது எல்லாம், கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. (புறம் 368) - ↑
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் (புறம்65) - ↑ முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (புறம் 288)
- ↑
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை'இவற்கு ஈக!' என்னும் (புறம் 289)