கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
கருவூர் பசுபதீஸ்வரர் கோவில்
கருவூர் பசுபதீஸ்வரர் கோவில் is located in தமிழ் நாடு
கருவூர் பசுபதீஸ்வரர் கோவில்
கருவூர் பசுபதீஸ்வரர் கோவில்
கல்யாண பசுபதீசுவரர் கோயில், கரூர்
புவியியல் ஆள்கூற்று:10°57′38″N 78°04′43″E / 10.960570°N 78.078610°E / 10.960570; 78.078610
பெயர்
பெயர்:கருவூர் பசுபதீஸ்வரர் கோவில்
அமைவிடம்
ஊர்:கரூர்
மாவட்டம்:கரூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பசுபதீஸ்வரர்
(ஆநிலையப்பர், பசுபதிநாதர்)
தாயார்:கிருபாநாயகி,
சௌந்தரியநாயகி (அலங்காரவல்லி)
 : இரு சந்நிதிகள்
தல விருட்சம்:வஞ்சி
தீர்த்தம்:தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி நதி)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்
அமைத்தவர்:சோழர்கள், மீள்கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார்[1]

கல்யாணபசுபதீசுவரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.

இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது.

சன்னதிகள்

கரூர் பசுபதீசுவரர் ஆலயம்

மூலவர் பசுபதீசுவரர், சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார், சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் சித்தர் கருவூரார் சன்னதியும், ராகு, கேது பாம்பு சிலைகள் உள்ள சன்னதியும் உள்ளன.

புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.

அமைவிடம்

கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக, அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில், இக்கோவில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு

கோயில் மதில் சுவரில் காணப்பட்டது

இக்கோவிலின் கொடிமரம், கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில், தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன.

இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.

தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும்.

இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது, ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவிலின் தென்மேற்கு மூலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால், கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.

கோயிலின் கட்டடக்கலை அம்சங்கள்

இக்கோயில் திராவிடக் கட்டடக்கலை அம்சத்தை கொண்டுள்ளது. திராவிடக்கலை என்பது தென்னிந்திய கோயில் கலை பாணியாகும். இக்கோயிலின் அமைப்பு மிகச் சிறப்பானது. கோயிலின் மையப் பகுதியில் அமைந்திருப்பது கருவறையாகும். இப்பகுதி தான், முதன் முதலில் கட்டப்பட்ட பகுதியாகும். இக்கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விமானம் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பே ஆரம்பகாலத்தில் கோயில் கட்டும் முறையாக இருந்தது.

கருவறையை அடுத்து இருப்பது, அா்த்தமண்டபம் ஆகும். இந்த முறை பிற்காலகட்டத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்து கோயில்கள், கருவறை, அதை ஒட்டி அமைந்திருக்கும் அா்த்தமண்டபம் இந்த அமைப்பை கொண்டே கட்டப்பட்டிருக்கின்றன. அா்த்தமண்டபத்தை அடுத்து மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகாமண்டபங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். இந்த மண்டபங்கள் அதிகப்படியான கற்றூண்களைக் கொண்டதாக அமைத்தனா்.

கருவறையை சுற்றி பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பொரும்பாலும் எல்லா இந்து கோயில்களிலும் காணப்படும் அமைப்பாகும். இப்பிரகாரத்தை அடுத்து கோயிலின் இடது, பின், வலது புறங்களில் சுற்றிலும் திண்ணையோடு கூடிய சிறு மண்டபம் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இது பெரும்பாலும் பாடசாலையாகவோ வேதபாராயணம் செய்யும் இடமாகவோ இருந்திருக்க வேண்டும்.

கருவறையின் தெற்குப்புற சுவற்றில் தட்சினாமூா்த்தியும், மேல்புற சுவற்றில் லிங்கோத்பவரும், வடபுற சுவற்றில் பிரம்மாவும் துா்க்காதேவியும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன. இது சைவ, குறிப்பாக, சிவன் கோயிலின் கட்டடக்கலைப் பாங்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையின் தென்புற திண்ணையில் நாயன்மாா்கள் காட்சியளிக்கிறன்றனா். பின்புறம், ஈசான விநாயகா், முருகன், கஜலட்சுமி போன்ற சைவ கோயில் அமைப்பின் அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

கருறையின் வடபுறத்தில் சண்டிகேசுவரா் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் சைவ கோயிலின் அம்சத்தை கொண்டு விளங்குகிறது. இக்கோயில் பெரும்பாலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் மற்றும் பிற கட்டடஅமைப்பை உற்று நோக்கும் போது, புதிதாக கட்டப்பட்டது என்ற எண்ணம் தோன்றும். மிகப் புராதனமான இக்கோயில், இத்தனை காலம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இக்கோயில், சோழா் காலத்தில் கட்டப்பட்டு சேரர், பாண்டியா், கொங்குச் சோழா், நாயக்கா் காலங்களில் படிப்படியாக வளா்ந்து பெரிய கோயிலாக உருவாயிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமியா் ஆட்சிக்காலத்தில் கவனிப்பாரற்று, சிதைவடைந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். எனவே தான், ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில், 1905 இல் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சிதைந்திருந்த கோயிலை இடித்து, புதிதாக கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. அதன் பிறகு தான் இன்றைய நிலையில் இருக்கும் கோயிலின் அமைப்பைக் காணமுடிகிறது. அதனால் தான் இக்கோயில், மிக சமீபத்தில் கட்டியது போன்று புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

மகா மண்டபத்தை அடுத்து சுற்று சுவருடன் கூடிய கோபுர நுழைவாயில் அமைப்பப்பட்டுள்ளது. இந்நுழைவாயில் பாண்டியா் கலைப்பாணியில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அதனைத் தொடாந்து வெளிப்புறம் சுற்றுசுவருடன் கூடிய கோபுரம் காணப்படுகின்றது. இது நாயக்கா் கட்டடக்கலை பாணியை சோ்ந்ததாக கருதப்படுகிறது.

இக்கோயில் மிக சமீபத்தில் கட்டப்பட்டது என்பதற்கு இன்னொரு சான்று தற்போது புகழ் சோழா் மண்டபம் என அழைக்கப்படும் மண்டபமாகும். இதைக் காணும் போது காலப்போக்கினால் ஏற்பட்ட பாதிப்பு நன்கு தெரிகிறது. தூண்கள் மற்றும் கட்டடங்களில் இருக்கும் நோ்த்தி, மழுங்கிப் போயிருப்பதை காணலாம். ஆனால் கோயிலின் தூண்கள் மற்றும் கட்டடங்கள் முனை மழுங்காமல் மிக நோ்த்தியாக இருப்பதையும் அழகுற இருப்பதையும் காணலாம்.

இக்கோயில் ஆகம விதிகளின் படியும், வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படியும் சைவ சிந்தாந்த நெறிப்படியும் கட்டப்பட்டிருப்பது விளங்கும்.

தல வரலாறு

படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பாடல் பெற்ற தலம்

எறிபத்த நாயனார் தோன்றியதும் புகழ்ச்சோழ நாயனார் ஆண்டதும் இத்தலமாகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் பிறந்தது இவ்வூரில்தான். இது திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்றுள்ளது.

திருவிழாக்கள்

இங்கு பங்குனி உத்திரம், 'ஆருத்ரா தரிசனம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

குடமுழுக்கு

குடமுழுக்கு விழா நிகழ்வினையொட்டி இக்கோயிலில் 4 நவம்பர் 2020 அன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.[2] 4 டிசம்பர் 2020 வெள்ளிக்கிழமை இக்கோயிலின் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்

  1. பண்டிதமணி கதிரேசன்செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு.
  2. பசுபதீசுவரர் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால், தினமணி, 5 நவம்பர் 2020
  3. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மஹாகும்பாபிஷேகம், தினமணி, 4 டிசம்பர் 2020

வெளி இணைப்புகள்