கருங்குழல் ஆதனார்
கருங்குழல் ஆதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை புறநானூறு 7, 224 எண்ணுள்ள பாடல்களாக அமைந்துள்ளன. இரண்டிலும் சோழன் கரிகாற் பெருவளத்தான் வெற்றிகளும், பெருமைகளும் பேசப்படுகின்றன. ஒன்றில் அவன் இறந்த செய்தி குறிப்பிடப்படுகிறது.
புறநானூறு 7
மழபுல வஞ்சி என்னும் துறையினதாய்க் காட்டப்பட்டுள்ள இந்தப் பாடலில் கரிகால்வளவன் பகைவர் நாடுகளை அழித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவன் காவிரியாறு காப்பாற்றும் நாட்டை உடையவன். இவன் பகல் என்றும் இரவு என்றும் பாராது பகைவர் நாட்டைத் தீக்கு இரையாக்கினான். இதனால் பகைநாடுகள் நல்ல இல்ல ஆயின.[1]
இவன் போர்க்கோலம் பூண்டிருந்தபோது பொலிவுற்று விளங்கிய தோற்றப்பொலிவு விளக்கப்பட்டுள்ளது. இவன் தன் காலால் உதைத்துக் களிற்றைச் செலுத்தினானாம். கரியைக் காலால் உதைத்து நடத்திய கால் கொண்டவன் கரிகாலன். (அங்குசத்தால் குத்தி யானையைச் செலுத்தாத இவன் பகைநாட்டைத் தீக்கு இரையாக்கியது கொடுமை எனப் புலவர் குறிப்பிடுகிறார்). இவனது கை வில்லைத் தாங்கி கணை தொடுக்கும்போது நிமிர்ந்து நிற்கும். வழங்கும்போது கவிழ்ந்து நிற்கும். இவனது மார்பில் மா என்னும் திருமகள் மறுவாக விளங்குகிறாள். இதனால் இவன் திருமா வளவன் எனப்பட்டான்.[2]
புறநானூறு 224
உவமை நலம்
- இவன் மாண்டபோது இவனது மனைவிமார் தம் அணிகலன்களைக் களைந்து எறிந்தனர். அவை ஆடு மேய்க்கும் இடையர் வறட்சிக் காலத்தில் வேங்கைமரக் கொம்புகளை வெட்டி வீழ்த்த, அதன் இலைகளை ஆடுமாடுகள் தின்றபின் எஞ்சிக் கிடக்கும் குச்சிக்கொத்துகள் போலக் கிடந்தனவாம்.[3]
வேத நெறிப்படி வேள்விகள் செய்தானாம்
- கரிகாலன் வெற்றித்தூண் நட்டு வேத நெறிப்படி வேள்வி செய்தான்.[4]
கரிகாலன் பாணர்களைப் பேணியவனாம்
- கரிகாலன் பிறது கோட்டைகளின் வெல்லற்கருமையை எண்ணிப் பார்க்காமல் அவற்றை வென்றானாம். இவனுக்கு இரண்டு மனைவிமாராம். அவர்களைடன் சேர்ந்து பெரும்பாண், சிறுபாண் என்னும் இருவகைப் பாணர்களையும் பேணிச் சிறப்பித்தானாம்.[5]
அவையில் முறைநீதி வழங்கி அறநெறி கண்டவன்.[6]
அடிக்குறிப்பு
- ↑
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. (புறம் 7) - ↑
- களிறு கடைஇய தாள்,
- கழல் உரீஇய திருந்து அடி,
- கணை பொருது கவி வண் கையால்,
- கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
- மா மறுத்த மலர் மார்பின், (புறம் 7)
- ↑
- பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
- பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,
- பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்
- கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
- மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.
- ↑
- எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
- வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
- அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:
- ↑
- அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;
- துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,
- இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
- ↑ அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த