கடையிற் சுவாமிகள்
கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார்.
வாழ்க்கை வரலாறு
இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தர் என்பதாகும்.
இலங்கைக்கு வருதல்
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தராக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.
யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது.
முக்கிய வாழ்க்கைக் குறிப்புக்கள்
- இவருக்கென்றொரு அடியார் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் ஆசிகளையும் இவர் வழங்கிவந்தார்.
- சாதி பேதம் பாராட்டாமல் இவர் செய்த நடவடிக்கைகள் சில இவருக்கெதிரான சிலரையும் உருவாக்கியது.
- இவரது அன்பர்கள் மாமிச, மது விருந்தளித்தாலும் அவற்றையும் இவர் உட்கொண்டிருக்கிறார்.
- இவருடைய நடவடிக்கைகள் மனநோயாளரின் நடவடிக்கைகளை ஒத்திருந்தமையால் காவல் துறையினர் இவரைப்பிடித்து கொழும்பு மனநல மருத்துவமனக்கு அனுப்புமுகமாக சிறையில் அடைத்து வைத்திருந்தனர். (மறுநாள் திறந்து பார்த்தபோது இவர் சிறையில் இருக்கவில்லை என்றொரு கதை இருக்கிறது)
- இறுதிக் காலத்தில் இவர் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த நீராவியடியில் வெளியில் எங்கும் செல்லாது வாழ்ந்து வந்தார்.
வெளி இணைப்புக்கள்
- Kadai Swami of Jaffna, K. Ramachandran - (ஆங்கில மொழியில்)
- http://www.kataragama.org/sages/kadaiswa.htm (ஆங்கில மொழியில்)