எம். பி. சிவம்
எம். பி. சிவம் ஒரு இந்திய நாடக, திரைப்படக் கலைஞர் ஆவார். நாடக ஆசிரியராகவும், பாடலாசிரியராகவும், இசை ஆசிரியராகவும் தமிழ் நாடக, திரை உலகில் பணியாற்றியவர்.
இவரது முழுப்பெயர் மதிலகத்துவீடு பரமசிவம். கேரள மாநிலம் பாலக்காடு அருகில் கிழக்கு யாக்கரை என்பது இவரின் சொந்த ஊராகும்.[1]
தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழிலும் புலமை பெற்றவர். இசை ஞானமும் உள்ளவர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் மதுரை பால கான சபாவில் ஆர்மோனியக் கலைஞராகப் பணியாற்றினார். அத்துடன் நாடக ஆசிரியராகவும், பாடல்கள் இயற்றுபவராகவும் திறமை பெற்றிருந்தார். நாடக நடிகர்களுக்கு இவரே பாட்டு சொல்லிக் கொடுப்பார்.
இசையமைப்பாளர் கே. வி. மகாதேவனின் உதவியாளராகப் பணியாற்றிய புகழேந்தியின் மைத்துனர் இவருக்குச் சகோதரர். புகழேந்திக்கு முறையாக இசை கற்பித்ததோடு அவரை மகாதேவனிடம் அறிமுகப்படுத்தினார்.
1953 ஆம் ஆண்டு வெளியான மதன மோகினி என்ற படத்துக்கு பாடல்கள் எழுதினார். அந்தப் படத்தில் கே. வி. மகாதேவன் மூன்று பாடல்கள் பாடியிருந்தார். அவற்றுள் கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி என்ற பாடல் மிகப் பிரபலமானது.
மகதல நாட்டு மேரி என்ற படத்திலும் இவர் ஐந்து பாடல்கள் எழுதினார். எஸ். ஜானகி தமிழில் பாடிய முதல் பாடல் கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை என்ற பாடலும் பிரபலமானது. இப்பாடலை எஸ். ஜானகியோடு பி. பி. ஸ்ரீநிவாசும் இணைந்து பாடியிருந்தார்.
1954 ஆம் ஆண்டு வெளியான நல்லகாலம் திரைப்படத்துக்கு புரட்சிதாசன், வி. எஸ். ஜெகநாதன் ஆகியவர்களோடு இணைந்து வசனமும் எழுதினர்.[2]
பாடல்கள் எழுதிய சில திரைப்படங்கள்
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் தமிழர்விக்கிக்கு உதவ முடியும்.
- குமாரி (1952)[3]
- மதன மோகினி (1953)[4]
- நல்லகாலம் (1954)[2]
- நல்ல வீடு (1956)[5]
- அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)[6]
- மகதலநாட்டு மேரி (1957)[7]
பக்திப் பாடல்கள்
தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகள் குறைந்ததால் எம். பி. சிவம் கேரளத்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். பின்னர் பக்திப் பாடல்கள் எழுதி வந்தார்.
டி. எம். சௌந்தரராஜன் பாடிய கந்தன் திருநீறணிந்தால், முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு, தித்திக்கும் தேன்பாகும் போன்ற பாடல்கள் இவர் எழுதியவைகளே.
மேற்கோள்கள்
- ↑ வாமனன் (2012). திரைக் கவிஞர்கள் 2000 வரை. கலைஞன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை, தியாகராஜா நகர், சென்னை 600017. தொ.பே. +91 44 2434 5641. பக். 74.
- ↑ 2.0 2.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 74.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 35.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 57.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 108.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 121.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 130.