உத்தமசோழன் (எழுத்தாளர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
உத்தமசோழன் |
---|---|
பிறப்புபெயர் | அ. செல்வராஜ் |
பிறந்ததிகதி | 19 நவம்பர் 1944 |
பிறந்தஇடம் | வாய்மேடு, வேதாரண்யம், தமிழ்நாடு |
பணி | எழுத்தாளர், இதழாசிரியர், வட்டாட்சியர் (பணி நிறைவு) |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை (அரசியல் அறிவியல்) |
பெற்றோர் | அருணாசலம் சௌந்தரவல்லி |
துணைவர் | செ. சரோஜா |
பிள்ளைகள் | அ. செ. மணிமார்பன் அ. செ. மாமன்னன் |
உத்தமசோழன் (Uttamacholan) தமிழ்ப் படைப்பாளர்களில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார்.[1] ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமணிக் கதிர் உள்ளிட்ட முன்னணி வார, மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது, கிழக்கு வாசல் உதயம் என்ற பல்சுவை மாத இதழை நடத்தி வருகிறார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைரவசுந்தரம். இவருடைய உறவினர் இவரது பெயரை செல்வராஜ் என மாற்ற, அதுவே அலுவல் பெயராகவும், இயற்பெயராகவும் அமைந்தது.
பிறப்பு
இவர் வேதாரண்யம் அருகில் உள்ள தனது தாயின் ஊரான வாய்மேடு என்ற ஊரில், அருணாசலம் - சௌந்தரவல்லி இணையரின் மகனாக மூத்த மகனாக 19 நவம்பர் 1944ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைரவசுந்தரம். அன்பின் மிகுதியால் இவரது உறவினர் இவரது பெயரை செல்வராஜ் என மாற்றி வைத்தார். அதுவே அவரது இயற்பெயராகவும், அலுவல் பெயராகவும் வழங்கலாயிற்று. சிறு பிள்ளையாக பெற்றோருடன் வங்கத்தான்குடி (வங்குதீர்த்தான்குடி) எனும் ஊரில் வாழந்துள்ளார். பிறகு, பள்ளிப் பருவத்திலிருந்து திருமணக் காலம் வரை 20 ஆண்டுக் காலங்கள் திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த வெள்ளங்கால் என்ற சிற்றூரில்தான் இவரது வாழ்க்கை அமைந்தது. அதன் பிறகு தற்போது வரை இவர் திருத்துறைப்பூண்டி நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.
படிப்பு
மூன்றாம் வகுப்பு வரை மன்னார்குடி வட்டம் களப்பால் ஊரகப் பள்ளியிலும், 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திருத்துறைப்பூண்டி எடையூர் நடுநிலைப்பள்ளியிலும் (தற்சமயம் மேல்நிலைப்பள்ளி), 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி.) தஞ்சாவூர் ஜில்லா போர்டு கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியிலுமாக (Board High School - இப்போது அரசு மேல்நிலைப்பள்ளி) நிறைவு பெற்றிருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்த அன்னபூரணி மாணவர் இல்லத்தில் 3 ஆண்டுக்காலங்கள் இலவசமாக தங்கிப் படித்துள்ளார். பணியில் சேர்ந்த பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை (அரசியல் அறிவியல்) பட்டம் பெற்றுள்ளார்.
பணி
1961இல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையின்கீழ்ச் செயல்பட்டு வந்த (பீங்கான்) தொழில் பயிற்சி நிலையம் இரயில் நிலையத்தில் ஓராண்டு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றுள்ளார்.அதனடிப்படையில் வடலூரில் பெரம்பலூர் மாவட்டத்தில் (காரை) என்கிற சிற்றூரிலும் பணி புரிந்துள்ளார்.
பிறகு தமிழ்நாடு அரசுப் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 1967 இல் தமிழக அரசின் வருவாய்த் துறைக்கு தேர்வு செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று திருவாரூர் நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றியப் பிறகு, மாவட்டம் பிரிக்கப்பட்டதும் நாகை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு, வேதாரண்யம் வட்டாட்சியர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது - எச்.எஸ்) என பணியாற்றியுள்ளார்.நிறைவாக காரைக்காலில் உள்ள ONGC நிறுவனத்தில் நில எடுப்பு அலுவலராக பணிப்புரிந்து 2001 இல் பணி நிறைவுப் பெற்றார்.
எழுத்துப் பணி
தமிழக அரசின் வருவாய்த்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்தாலும் பணியிலிருக்குபோதிருந்தே இவர் பல வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் சிறுகதைகளும், தொடர்கதைகளும் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய முதல் சிறுகதை 'இரண்டு ரூபாய்' குங்குமம் இதழில் ஜெயகாந்தன் நடுவராக இருந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டு பிரசுரமானது.
பிறகு குமுதம் இதழில் 'துணை என்று ஒரு தொடர் கதை' என்ற இவரது மூன்றாவது சிறுகதை முதல் பரிசு பெற்றது. இப்படித் தொடங்கிய இவரது எழுத்துப் பயணத்தில் இதுவரை சுமார் 200 சிறுகதைகள், 11 நாவல்கள், 11 சிறுகதைத் தொகுப்புகள், 35க்கும் மேற்பட்ட பரிசுகள், 25க்கும் மேற்பட்ட மாணவர்களின் முதுகலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகள் (M.A., M.Phil & PhD), தொலைக்காட்சி தொடர் என்று பயணித்துள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு கிழக்கு வாசல் உதயம் என்ற மாத இதழை நடத்தி வருகிறார். தற்போதைய பனிரெண்டாம் வகுப்பு தமிழ் துணைப்பாடப்பகுதியில் இவரது முதல் கல் என்னும் சிறுகதை இடம் பெற்றுள்ளது.
சிறுகதைத் தொகுப்புகள்
- துணை என்றொரு தொடர்கதை (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கு பாடமாக இருந்தது) / வெளியீடு: கங்கை புத்தக நிலையம், சென்னை-17 (6 பதிப்புகள் - டிச.1989, ஜூலை 1990, ஆக. 1990, செப். 1990, ஜூலை 1991, ஜூன் 1992)
- ஆரம்பம் இப்படித்தான் / வெளியீடு: கங்கை புத்தக நிலையம், சென்னை - 17 (1990)
- வாழ்க்கையெங்கும் வாசல்கள் (கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு பெற்றது) / வெளியீடு: வானதி பதிப்பகம் (1995)
- வல்லமை தாராயோ / வெளியீடு: வானதி பதிப்பகம் (1995)
- சிந்து டீச்சர் / கங்கை புத்தக நிலையம் (1996)
- மனிதத் தீவுகள் / வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் (2001)
- குருவி மறந்த கூடு (சிவகங்கை மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசு பெற்றது)
- பாமரசாமி / வெளியீடு: கங்கை புத்தக நிலையம் (2003)
- ஒரே ஒரு துளி / வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் (2004)
- சில தேவதைகளும்.. ஒரு தேவகுமாரனும் ..! 2006, திருவரசு புத்தக நிலையம்
- உத்தமசோழன் சிறுகதைகள், கங்கை புத்தக நிலையம், சென்னை -17 (2006)
இதுவரை வெளிவந்துள்ள நாவல்கள்
- தொலை தூர வெளிச்சம் / வெளியீடு: கங்கை புத்தக நிலையம் (1992)
- கசக்கும் இனிமை / வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் (2000)
- பூ பூக்கும் காலம் / வெளியீடு: கங்கை புத்த நிலையம் (2003)
- உயர் உருகும் சப்தம் / வெளியீடு: கங்கை புத்தக நிலையம் (2003)
- அவசர அவசரமாய் / வெளியீடு: வானதி பதிப்பகம் (2004)
- மனசுக்குள் ஆயிரம் (தேவி வார இதழ் நடத்திய சின்னஞ்சிறு நாவல் போட்டியில் பரிசுப் பெற்ற நாவல்) / வெளியீடு: வானதி பதிப்பகம் (2004)
- தேகமே கண்களாய், 2006
- கனல் பூக்கள்
- கலங்காதே கண்ணே
- பத்தினி ஆடு (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசுப் பெற்ற நாவல்)
- சுந்தரவல்லி சொல்லாத கதை / கிழக்கு வாசல் பதிப்பகம் (2020)
மேற்கோள்கள்
- ↑ இப்போது படிப்பதும் எழுதுவதும்: எழுத்தாளர் உத்தம சோழன். இந்து தமிழ் திசை. 26 மார்ச் 2016. https://www.hindutamil.in/news/literature/75176-.html.