ஈழத்துப் பூராடனார்
ஈழத்துப் பூராடனார் | |
---|---|
முழுப்பெயர் | க. தா. செல்வராச |
கோபால் | |
பிறப்பு | 13-12-1928 |
பிறந்த இடம் | செட்டிப்பாளையம், |
மட்டக்களப்பு | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
மறைவு | 21-12-2010 |
கனடா | |
தொழில் | |
பெற்றோர் | |
வாழ்க்கைத் | வியற்றிசு பசுபதி |
துணை |
ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால், 13 டிசம்பர், 1928 - 21 டிசம்பர் 2010)) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். ஆசிரியர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்ற ஊரில் சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் க. தா. செல்வராசகோபால். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறினர்.
எழுதியுள்ள நூல்கள்
ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் நீரரர் நிகண்டு என்ற நிகண்டு நூலை எழுதியிருக்கிறார். அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,
- உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)
- அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)
- தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)
- இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)
- கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்)
என ஐந்து வகையாகப் பகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும் (48 பக்கம்), இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது.
மட்டக்களப்புச் சொல்வெட்டு என்னும் நூலில் அறிஞர் ஈழத்துப்பூராடனார் மட்டக்களப்பில் வழங்கும் சொற்கள் சில சங்க நூல்களில் வழங்குவதைச் சிறப்பாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி என்னும் நூலில் மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். 1984 இல் 60 பக்க நூலாக இது வெளிவந்தது.
இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள்,பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார்.
- மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள்,
- கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள்,
- வயல் இலக்கியம்,
- ஊஞ்சல் இலக்கியம்,
- வசந்தன்கூத்து ஒரு நோக்கு,
- மட்டக்களப்பு மாநில உபகதைகள்
நாடக நூல்கள்
பல நாடக நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள்,
- கூத்தர் வெண்பா,
- கூத்தர் விருத்தம்,
- கூத்தர் குறள்,
- கூத்தர் அகவல்,
- கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு,
- கூத்துக்கலைத் திரவியம்,
- வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்,
- கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன்,
- தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்,
- கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை,
- இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும்,
- மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை
மொழிபெயர்ப்பு நூல்கள்
கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட், ஒடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 2089 (8355 பாடலடிகள்) செய்யுள் விருத்தங்களால் அமைந்தது ஈழத்துப்பூராடனாரின் ஒடிசி மொழிபயர்ப்பு நூலாகும்.
ஈழத்துப் பூராடனார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். 11100 பாடல்வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுளது.
ஆய்வு நூல்கள்
- ஐங்குறுநூற்று அரங்கம்,
- சூளாமணித் தெளிவு,
- கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,
- நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,
- சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,
- பெருங்கதை ஆய்வுநோக்கு,
- வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக (2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார்.
வேறு நூல்கள்
இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார். தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.
ஈழத்துப் பூராடனார் கனடாவில் தாமே அச்சுக்கூடம் ஒன்று நிறுவி அதன் மூலம் பல நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வந்தார்.