இ. நாகராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரகவி இ. நாகராஜன்
E. Nagarajan.jpg
மதுரகவி இ. நாகராஜன்
முழுப்பெயர் இராமு
நாகராஜன்
பிறப்பு அரியாலை,
யாழ்ப்பாணம்
மறைவு 15-08-1972
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர் இராமு,
அன்னம்மாள்


மதுரகவி இ. நாகராஜன் (இறப்பு: ஆகத்து 15, 1972)[1] இலங்கை எழுத்தாளரும், மரபுக் கவிஞரும் ஆவார்.[1] கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் படைத்தவர்.[2] சிலம்பன், ரவிவரன், வி. ஆர். என், ஆறென், இ. நா. ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும், கவியரசன், ஈனா, கூட்டுக்கவிராயன், இடிமேகன், ரமேஸ்வரன், ரவி, ரவீந்திரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளையும், அரிமா, தனஞ்செயன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

இ. நாகராஜன் யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மலையகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர், 1940களில் எழுதத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஈழகேசரி பத்திரிகையில் பணியாற்றினார். பிற்காலத்தில் சுன்னாகம் வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தில் பணியாற்றி வந்தார்.[2][3] ஈழகேசரியில் சிறுவர் பகுதிக்கென பாடல்கள், கட்டுரைகள் எழுதி வந்தார். தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். 1960களில் 'தமிழன்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் சிறிது காலம் பணிபுரிந்தார். ஈழகேசரி, வீரகேசரி, ஈழநாடு, தமிழன் முதலான பத்திரிகைகளிலேயே இவரது படைப்புகள் பெருமளவில் வெளியாகியுள்ளன.[3]

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'நிறைநிலா' 1965-இல் வெளியாகியது. ஐந்து எழுத்தாளர்கள் எழுதிய 'மத்தாப்பு' என்ற குறும் புதினத்தின் முதலாம் அத்தியாயத்தை நாகராஜன் எழுதினார். இது அச்சிலும் வெளிவந்தது. மூன்று எழுத்தாளர்கள் எழுதிய 'மணிமகுடம்' என்ற புதினத்தின் முதல் மூன்று அத்தியாயங்களை, கவிதை நடையில் எழுதினார்.[3]

நீதிக் கரங்கள், புத்தொளி, கூத்தாடி ஆகிய சிறு காவியங்களையும், இரண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.[3]

மதுரகவி பட்டம்

இவரது 'புகாரில் ஒருநாள்' என்ற கவிதை 1968 இல் சென்னை இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாவது பரிசைப் பெற்றது.[1] இவருக்கு அங்கு 'மதுரகவி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[3]

மறைவு

மதுரகவி இ. நாகராஜன் 1972 ஆகத்து 15 செவ்வாய்க்கிழமை காலமானார். இவருக்கு ஆறு பிள்ளைகள்.[1][2]

வெளிவந்த நூல்கள்

  • நிறைநிலா (சிறுகதைத் தொகுதி, இரண்டாம் பதிப்பு:2001, மித்ர பதிப்பகம்)
  • சிறுவர் பாடல்
  • சிலம்பு சிரித்தது (கவிதை நாடகம்)
  • வாழ்க்கை ஒரு வசந்தம் (புதினம்)
  • குயில் வாழ்ந்த கூடு (காவியம்)

'மதுரகவி' நினைவாக யாழ் இலக்கிய வட்டம் குழந்தைக் கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி, வெற்றியீட்டிய ஐவரது 78 கவிதைகளைத் தொகுத்து 'மதுரகவிதைகள்' என்னும் பெயரில் 1989 -ல் வெளியிட்டது.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 மதுரகவி என்ற மதுரமான மனிதர், த. இந்திரலிங்கம், ஒளி ஆகத்து 1972, பக். 71-72
  2. 2.0 2.1 2.2 மறைந்தும் மறையாத மதுரகவி, கனக. செந்திநாதன், மல்லிகை, செப்டம்பர் 1972, பக். 6-8
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 எழுத்து ஊழியத்தை இறுதிவரை மேற்கொண்டவர்..!, வி. ரி. இளங்கோவன், தினக்குரல், ஏப்ரல் 4, 2021
"https://tamilar.wiki/index.php?title=இ._நாகராஜன்&oldid=1973" இருந்து மீள்விக்கப்பட்டது