இலக்கிய வட்டம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இலக்கிய வட்டம் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து 1964 நவம்பர் 22 இல் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க. நா. சுப்ரமண்யம் ஆவார்.[1]

இந்த இதழானது பெரிய அளவில், மாதம் இருமுறை இதழாக, சென்னையிலிருந்து வெளிவந்தது. இதன் நோக்கமாக இலக்கிய விமர்சனமும், இலக்கியப் பிரச்னை குறித்துச் சிந்திப்பதும், படைப்புகளில் சோதனை முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அமைந்திருந்தது.

நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கியவாதிகள் அதில் கட்டுரைகள் எழுதினார்கள். பன்னாட்டு இலக்கியங்கள், இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து வெளிவந்தன.

படைப்புகள்

படைப்புகளில் சோதனை முயற்சிகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. புதுக்கவிதையையும் ஒரு சோதனைத் துறையாகத்தான் 'இலக்கிய வட்டம்’ கருதியது. சோதனை ரீதியில் கவிதை இயற்றிய அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன. க. நா. சு. மயன் என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தினார். டி. கே. துரைஸ்வாமி, சுந்தர ராமசாமி ஆகியோரது தீவிர சோதனைப் படைப்புகள் அதிகம் பிரசுரமாயின. மற்றும் சிலரது கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன.

'தமிழ் இலக்கியத்தில் சாதனை' யை அளவிடும் விதத்தில் 'இலக்கிய வட்டம்' ஒரு சிறப்பிதழைத் தயாரித்தது. 1947-1964 காலகட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், தி. க. சிவசங்கரன், ரதுலன், வெ. சாமிநாதன், ஆர். சூடாமணி, தெ. பொ. மீனாட்சி சுந்தரன், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கில் கருத்துகள் தெரிவித்துக் கட்டுரைகள் எழுதினார்கள். க. நா. சு. எழுதிய 'நடுத்தெரு’ என்ற புதினம் சிறிது காலம் இணைப்பு ஆகப் இதழுடன் வழங்கப்பட்டது. அந்த புதினம் முழுமை பெறவில்லை.

நிறுத்தம்

‘இலக்கிய வட்டம்' எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் மகிழ்ச்சியும் பயனும் அளிக்கக்கூடிய நல்ல விஷயங்களைக் கொண்ட சுவாரஸ்யமான இலக்கிய ஏடாக வளர்ந்து வந்தது. ஆயினும் இது நெடுங்காலம் வெளிவரவில்லை. ஒரு ஆண்டும் சில மாதங்களும்தான் வெளிவந்தது.[2]

குறிப்புகள்