இணைச்சொல்
இணைச்சொல் அல்லது இணைப்புச்சொல்[1] (conjunction) என்பது மொழியில் இணையிணையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும். இணைச்சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் மொழிநடை சிறக்கும்; சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய் விளங்கும். நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது சுவைபடக் கூறுவதற்காக ஒரே பொருள் தரும் இரு சொற்களை இணைத்துப் பயன்படுத்துவதும் எதிர் பொருள்தரும் இருசொற்களை இனைத்துப் பயன்படுத்துவதும் இணைச்சொற்கள் எனப்படும்.
இணைச்சொல் விளக்கம்
ஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் பொருளை உறுதிப்படுத்தவோ, முரண்படுத்தவோ செறிவுபடுத்தவோ இணைந்து வருவது இணைச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு
"மாப்பிள்ளைக்கு நிலம்புலம் உள்ளதா ?" இங்கு நிலம் என்பது நன்செய் வயல் ஆகும். புலம் என்பது புன்செய் வயல் ஆகும்.
இணைச்சொல் வகைகள்
இணைச்சொல் வகைகள் பின்வருமாறு மூவகைப்படும்.
- நேரிணைச் சொற்கள்
- எதிரிணைச் சொற்கள்
- செறியிணைச் சொற்கள்.[2]
நேரிணைச் சொற்கள்
ஒரே பொருள் தரும் இரு சொற்கள் இணைந்து வருவது நேரிணைச் சொற்கள் எனப்படும். நேரிணைச் சொற்கள் பின்வருமாறு அமையும்.
- சீரும் சிறப்பும்
- பேரும் புகழும்
- ஈடு இணை
- உற்றார் உறவினர்
- நோய் நொடி
- குற்றங் குறை
- கூன் குருடு
- வாடி வதங்கி
- முக்கலும் முனங்கலும்
- வாயும் வயிறும்
- மூக்கும் முழியும்
- ஆற அமர
- இடுக்கு மிடுக்கு
- எடக்கு மடக்கு
- பாயும் படுக்கையும்
- தங்கு தடை
- முட்டி மோதி
- ஒட்டி உலர்ந்து
- தப்பித் தவறி
- வாட்டச் சாட்டம்
- நாணிக் கோணி
எதிரிணைச் சொற்கள்
ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சொற்கள் இணைந்து வருவது எதிரிணைச் சொற்கள் எனப்படும். எதிரிணைச் சொற்கள் பின்வருமாறு அமையும்.
- அல்லும் பகலும்
- உயர்வு தாழ்வு
- அடியும் நுனியும்
- உள்ளும் புறமும்
- குறுக்கும் நெடுக்கும்
- உச்சிமுதல் உள்ளங்கால் வரை
- ஐயந்திரிபற
- இருளும் ஒளியும்
- கிழக்கும் மேற்கும்
- வடக்கும் தெற்கும்
- ஏட்டிக்குப் போட்டி
- மேடு பள்ளம்
- முன்னும் பின்னும்
- மேலும் கீழும்
- வலதும் இடதும்
- அங்கே இங்கே
- காலை மாலை
செறியிணைச் சொற்கள்
ஒரு சொல்லின் பண்பு அல்லது செயலை வலுவூட்டும் விதமாக ஒத்த பொருளுடைய இரு சொற்கள் இணைந்து வருவது செறியிணைச் சொற்கள் எனப்படும். செறியிணைச் சொற்கள் பின்வரும் இரு வழிகளில் அமையும்.
பண்பு செறியிணைச் சொற்கள்
- செக்கச் செவேல்
- வெள்ளை வெளேர்
- பச்சைப் பசேல்
- நட்ட நடுவில்
- கன்னங்கரேல்
செயல் செறியிணைச் சொற்கள்
- அழுதழுது
- நடந்து நடந்து
- கொஞ்சிக் கொஞ்சி
- பார்த்துப் பார்த்து
மேற்கோள்கள்
- ↑ "வினைச்சொல்லும் அதன் உள்ளமைப்பும்". https://www.tamilvu.org/ta/courses-degree-d041-d0412-html-d0412441-21165. பார்த்த நாள்: 9 March 2024.
- ↑ சமச்சீர்கல்வி ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல், இரண்டாம் பருவம். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 1982. பக். 52. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdkJly.TVA_BOK_0000745.